கனடாவில் மது போதையில் உளறிய நபரால் அம்பலமான இரட்டைக் கொலை

30

 

கல்கரியில் டேட்டிங் செயலியால் அறிமுகமான இளம் தாயார் மற்றும் அவரது மகளை கொலை செய்த வழக்கில் ஒருவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

கல்கரியை சேர்ந்த 25 வயதான ஜாஸ்மின் லவ்ட் மற்றும் அவரது மகள் அலியா சாண்டர்சன் என்பவர்களை கொலை செய்த வழக்கிலேயே ராபர்ட் லீமிங் என்பவர் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

இவர்கள் இருவரின் சடலங்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பொலிசாரால் மீட்கப்பட்டது. தடயவியல் நிபுணரின் கூற்றுப்படி, லவ்ட் துப்பாக்கியால் சுடப்பட்டதுடன் தலையில் பலத்த காயமடைந்திருந்தார் என்றே கண்டறியப்பட்டிருந்தது.

மேலும், பிறந்து 22 மாதங்களேயான குழந்தை அலியா சாண்டர்சனும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிய வந்தது. 2019, ஏப்ரல் மாதத்தில் ஒரு டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இருவரும், நாளடைவில் ஒன்றாக வசிக்க முடிவெடுத்து, லீமிங் குடியிருந்து வந்த வீட்டுக்கு குடிபெயர்ந்ததுடன், வாடகையும் செலுத்தி வந்துள்ளார் லவ்ட்.

ஆனால் இருவரும் ஒன்றாக ஒரே குடியிருப்பில் வசித்து வந்த நிலையிலும், லீமிங் வேறு பெண்களுடன் நெருக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 19ம் திகதி, லவ்ட் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த குடும்ப விருந்துக்கு அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது.

லவ்ட்டின் தாயாரால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியாமல் போக, ஏப்ரல் 23ம் திகதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 2 நாட்களுக்கு பிறகு கொலை வழக்கு தொடர்பில் லீமிங்கை கைது செய்துள்ளனர்.

ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைதான 24 மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதுபான விடுதி ஒன்றில் மது போதையில் லீமிங் உளற, கல்கரி பொலிசார் ரகசிய குழு ஒன்றை அமைத்து, லீமிங்கை கண்காணித்துள்ளனர்.

மேலும், ரகசிய பொலிசார் இருவரிடம், தன்னையறியாமலேயே உண்மையை லீமிங் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி, லவ்ட் மற்றும் அவரது குழந்தையை கொன்று புதைத்துள்ள இடத்தையும் பொலிசாருக்கு லீமிங் அடையாளம் காட்டியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை இனி வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE