கொலம்பியாவில் பஸ் தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

லத்தின் அமெரிக்காவின் ஒரு பகுதியான கொலம்பியாவில் ஓடும் பஸ் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 30 பயணிகள் பலியாகினர்.

கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் அந்த பஸ் சென்றபோது திடீர் என்று தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவிய தீயில் சிக்கி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலர் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

பஸ்சில் பயணித்த அனைவரும் ஃபண்டாசியன் நகரில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.