மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது -அமைச்சர் ஜி எல் பீரீஸ்

untitled(11)

இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விஷயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது என, எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார்.

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், அவர் பதவியேற்ற அடுத்த நாள், அதாவது மே 27 ஆம் தேதியன்று நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின் போது இது தெரிவிக்கப்பட்டது என்று பீரிஸ் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றபோது, இந்தியப் பிரதமருடன் அதிகாரப் பகிர்வு உட்பட விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் குறித்து இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாயின.

இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வு குறித்து டில்லியில் என்ன விவாதிக்கப்பட்டது, அதற்கு அரசு என்ன கூறியது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதில்லை என்பதில் அரசு உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று இந்தியத் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இதற்கு இனத்துவ காரணங்களோ அல்லது வடகிழக்குப் பகுதி தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைளோ காரணங்கள் இல்லை என்பதையும் தமது தரப்பு கூறியதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, அரசியல் பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமே ஏற்பட முடியும் என்பதை இலங்கைத் தரப்பு மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.