பாதிரியார்களின் தொலைபேசி விபரம் நீதிமன்றில்

 

இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, இரு பாதிரியார்களின் ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது.

கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கின்றது. இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கொன்சலிற்றாவின் பெற்றோர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிநின்றார்.

அதுமட்டுமன்றி இரு பாதிரியார்களின் தொலைபேசி பதிவு தொடர்பில் மூன்று மாதகால பதிவுப் பட்டியல் எடுக்கப்பட்டாலே விசாரணைக்கு ஏதுவாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையிலேயே இரு பாதிரியார்களின் தொலைபேசி பதிவுகள் தொடர்பிலான மூன்று மாதப் பதிவுப் பட்டியலினை பெற்று சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்.குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் 16 ஆம் திகதித எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை பாதிரியார்கள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவருடைய பெற்றோரும் உறவினர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் ‘எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம்’ என கொன்சலிற்றாவின் தாயாரும் , ‘எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம்’ என தாம் சந்தேகிப்பதாக அவருடைய தந்தையும் இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.