அவுஸ்திரேலியாவில் தற்கொலை;பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் சிக்கல்!!

 

 

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த வாரம் தனக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் சீமான்பிள்ளையின் உடலை அவரின் பெற்றோர் தற்போது தஙகியுள்ள இந்தியாவுக்கோ இல்லது இலங்கைக்கோ அனுப்ப அவுஸ்திரேலியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

எனினும் அவரின் உடலை அவுஸ்திரேலியாவிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பை கருத்திற்கொண்டே குடும்பத்தினர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மொரிசன், அவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால வீசாவில் வந்து செல்ல லியோவின் குடும்பத்தினருக்கு வாய்ப்பு வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

அது தொடர்பில் தாம் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ள போதிலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மொரிசன் தெரிவித்தார்.