இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாக். அரசியல் தலைவர் அல்டாப் உசைனுக்கு ஜாமின்

பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முத்தாகிதா குவாமி இயக்க தலைவர் அல்டாப் உசைன் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 வயதான அல்டாப் உசைன், கடந்த 3-ம் தேதி வடக்கு லண்டனில் அவரது வீட்டில் இருந்தபோது அவரை போலீசார் கைது செய்து மத்திய லண்டன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 3 நாள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் காவலுக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் பண மோசடி தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையின் ஜாமினில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் விசாரணைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உசைன் விடுதலை ஆனதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பிறகு தொலைபேசி மூலம் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் உசைன் பேசினார். அப்போது தனக்கு ஆதரவாக பாகிஸ்தானில் போராட்டம் நடத்திய அனைவருக்கும் தலைவணங்குவதாகவும், தனது கடைசி மூச்சு இருக்கும்வரை உண்மைக்காக போராடுவதாகவும் தெரிவித்தார்.