மஹிந்தவின் தற்போதைய அரசியல் என்பது இந்தியா இல்லையேல் சீனா

 

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் எதற்கும் அஞ்சாதவராக ‘உள்ளே மிருகம் வெளியே கடவுள்’ என்பது போல் அவருடைய செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அவர் கையிலிருக்கும் மந்திரக் கல்லை வைத்து அனைத்துலக நாடுகளின் கண்களில் மண்தூவி வருகின்றார்.

இதுவரை காலமும் ஆண்டுவந்த ஆட்சியாளர்களுள் மஹிந்தவின் போக்கு சற்று வித்தியாசமானது. முன்னைய இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் சிறிமாவோ பண்டாரநாயக்கவைத் தவிர ஏனையவர்கள் அரசிற்கு அடிபணிந்தே செயற்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவும் கூட சிறிமாவோ பண்டாரநாயக்கவின் விடயங்களையே தற்போது கடைபிடித்துவருகின்றார்.

இதன் காரணமாக இந்தியரசு இலங்கையரசினை தற்போதைய நிலையில் கைவிடுமாகவிருந்தால், சீன அரசாங்கத்தை மஹிந்த அவர்கள் அணுகி, பிரச்சினையை வேறு விதமாக கையாளும் திட்டங்களையே அவர் வகுத்துள்ளார். பெரும்பாலான முதலீடுகள் இந்திய அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வர்த்தக உறவினை இந்திய மத்திய அரசாங்கம் வகுத்துக்கொள்ளவே முனைப்புடன் செயற்படும்.

இலங்கையரசு நரேந்திரமோடியை முதலாவதாக அழைத்திருந்தபோதிலும், அவர் பூட்டானுக்கே சென்றிருந்தார். அவரின் நிகழ்ச்சித்திட்டங்களில் இலங்கை விஜயம் இன்னும் உத்தேசிக்கப்படவில்லை. அடுத்து அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கேள்வி. இவ்வாறிருக்கும்பொழுது, இலங்கைத்தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் மோடி அரசு எந்தவித அக்கறையுடனும் இல்லையென்பதையே எடுத்துக்காட்டுகிறது. ஆகமொத்தத்தில் அதனுடைய பொருளாதாரமே மேலோங்கியுள்ளது. கச்சதீவுப்பிரச்சினையை ஒருவேளை அரசியல் மயப்படுத்தி, இந்தியரசு கைப்பற்றக்கூடும். ஆனால் இலங்;கைத்தமிழர் பிரச்சினையில் அக்கறைகாட்ட மஹிந்த அரசு முனையப்போவதில்லை.

தனக்கு ஆதரவான நாடுகளை அணிதிரட்டி, இந்தியரசிற்கு எதிராக செயற்படும திட்டங்களையே தற்பொழுது இலங்கையரசு வகுத்துவருகின்றது. அதனொரு கட்டமாகவே, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கொடும்பாவி எரிப்புச் சம்பவத்தின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.

images (1)

Chinese_Russia_Sri_Lankan_Presidents