பிரபாகரனை சர்வாதிகாரி என்று நான் கூறவில்லை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏனைய வடமாகாணசபை அமைச்சர்களும் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிர தேச கிராமங்களுக்கு விஜயம் செய்த போது, அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான்- வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை வடமாகாண முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது பொதுமகன் ஒருவரினால் முதலமைச்சரிடம், வடக்கில் மக்களின் பிரச்சினைகள் பல உள்ளபோதும் இராணுவத்தினரை மட்டும் வெளியேற்ற வேண்டும் என ஏன் கூறி வருகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த வட மாகாண முதலமைச்சர், வடக்கில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதால் தான் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாமல் இழுபட்டு வருகின்றது. இன்று நீங்கள் சுட்டிக்காட்டும் நில ஆக்கிரமிப்பு, மீன்பிடித் தொழில் செய்யமுடியாத தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் போன்ற பிரச்சினைகளுக்கு பின்னால் இராணுவத்தினரின் இருப்பே மூலகாரணமாகவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இராணுவ ஆக்கிரமிப்பே உள்ளது. மக்கள் மீள்குடியமர முடியா மலும், அவர்கள் தமது சொந்த நிலங்களில் தொழில்களைச் செய்ய முடியாமலும் இருக்கின்றனர். இராணுவத்தினர் மக்கள் குடியிருந்த நிலங்களுடன் தொழில்செய்யக் கூடிய வளமான நிலங்களையும் அபகரித்துள்ளனர்.எனவேதான் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு முதற்படியாக இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுகின்றேன் என்றார்.

இச் சந்திப்பின்போது வடமாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், உறுப்பினர்களான வைத்தியக் கலா நிதி சிவமோகன், ரவிகரன், சயந்தன், கனகசுந்தர சுவாமி, சிவயோகம், திருமதி. மேரி கமலா குணசீலன், அஸ்மின் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலை ஒட்டுசுட்டான் வாவெட்டி, தட்டையன் மலைப்பகுதிகளுக்கு விஜயம் செய்த முதலமைச்சர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மலையை உடைத்து கருங்கல் எடுக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் நிலை மைகளையும், அவர்கள் எதிர்நோக்கி வரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டார். மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதலமைச்சர், புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கான புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

அது மட்டுமல்லாது தமிழ்த்தேசியத் தலைவர் பிரபா கரனை சர்வாதிகாரி என குறிப்பிட்டு முதலமைச்சர் சாவகச்சேரியில் மேதின நிகழ்வில் உரையாற்றியமையானது மனவேதனையளிக்கும் விடயம் எனவும் அப்பிரதேச வாசி ஒருவர் நேரடியாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில், 1983ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி இடம்பெயர்ந்து, யுத்தத்தின்பொழுது சிங்கள ஆட்சியாளர்களால் இவ்விடத்தினை விட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு, ஒரு நாள் காட்டில் தங்கியிருந்தோம்.

அதன் பிறகு 23ம் திகதி நாயாற்றுப்பாலத்தினைக் கடந்து முல்லைத்தீவுக்கு வந்தோம். அதன்பின்னர் இடம்பெயர்ந்து இந்திய நாட்டிலும் ஏனைய நாடுக ளிலும் தஞ்சமடைந்து மீண்டும் யுத்தநிறைவு பெற்ற பின்னர் வாழ லாம் என சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்தோம். எப்பொழுது நிம்மதியாக எமது மண்ணில் சுதந்திரமாக வாழ்வோம் என்று எண்ணியிருந்தோம். யுத்தத்தின் பின்னர் குடியேற்றங்கள் குடியமர்த்தப்பட்டபொழுது எங்களுடைய குடியிருப்பு நிலம் மட்டும் எங்களுக்குச் சொந்தமாகவிருக்கிறது. ஏனைய பகுதிகள் சில வும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது.

25 ஏக்கர் வயல் காணி கள் சிங்கள முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் உறுதிப்பத்திரங்களை இரத்துச்செய்து சிங்களவர்களுக்கு வழங்கியிருந்தார்கள். இங்கிருக்கும் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் ஒரு சட்டவல்லுனர், ஒரு நீதியரசர் என்று பல பதவிகளை வகித்தவர் இன்று முதலமைச்சராக இருக்கின்றார். அவருக்கு சட்டத்தைப்பற்றித் தெரியும். ஆனால் ஒரு சிறுபான்மையினத்திiனை துரத்திவிட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்கு காணி களை வழங்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று எமக்குத் தெரியாது. இதற்கெதிராக நாம் பல போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றோம்.

வெலிஒயாவில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டபோது எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் அது பயனளிக்கவில்லை. வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவருடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியிருந்தோம். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வினை பெற்றுத்தருவீர்களென உங்களை நம்பியிருக்கின்றோம். சில விடயங்களில் வட மாகாணசபை அமைச்சுக்கள் கோட்டைவிடுகின்றன. அவற்றை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். யாரு டைய மனங்களையும் புண்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. நானும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முக் கிய உறுப்பினர். அத்தோடு கிழக்கு மாகாணத்தின் ஒரு பிர தேசசபை உறுப்பினர். நான்கு பேர் முல்லைத்தீவுமாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன், ஒரு போனஸ் அடங்கலாக மொத்தம் ஐந்துபேர். நீங்கள் எந்தக் கட்சியிலிருந்து வந்திருக்கின்றீர்களோ அது பற்றி எங்களுக்குப் பிரச்சினை இல்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகத்தான் நாங்கள் உங்களை பார்க்கின்றோம். ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உங்களுடாக ஒரு தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. வைத்தியர் சிவமோகனும், ரவிகரன் அவர்களும் எமது கிராம மக்களுக்காக பெரிதும் முன்னின்று செயற்படுகின்றார்கள் என்பதனை நான் உறுதியாகக் கூறுவேன். ஏனையவர்களால் எவ்வித பயனும் இல்லை.

வெறுமனே மாகாணசபையில் இருந்து கொண்டு பேச்சுக்களை நடத்துவதும், அறிக்கைகளை விடுவதும் பயனற்றவிடயம். எங்களுடைய வயற்காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நபருக்கு 04 ஏக்கர் என்ற விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் அவை இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 02 ஏக்கரையாவது பெற்றுத்தருவதற்கு நீங்கள் அரசிடம் வலியுறுத்தவேண்டும்.

முள்ளிவாய்க்கால் பிரச்சினையை வைத்துதான் 30 ஆசனங்களையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வடமாகா ணசபையிலே கைப்பற்றியது என்பதைக் குறிப்பிடவேண்டும். இறந்து போன மக்களுக்கு அன்றைய தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு ஏன் ஐயப்பாடு? இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? மே தின வைபவத்தில் சாவகச்சேரியில் உரையாற்றுகின்ற பொழுது, எமது தேசிய தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரி எனக் குறிப்பிட்ட விடயம் பல ஊடகங்களிலும் வெளிவந்தது. இதனால் வட பகுதி மக்கள் மனஉளைச்சலுக்குள்ளா க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த காணி ஆக்கிரமிப்புக்கள் பற்றியும், தமிழ்த்தேசியம் பற்றியும் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் என்னைப்போல பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் இருக்கின்றார்கள். அதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் சரி, வடமாகாண சபையும் சரி முன்னின்று செயற்படுவது குறைவு என்று குறிப்பிட்டதோடு, இதற்கான தீர்வுத்திட்டங்களை உடன் பெற்றுத்தருமாறு வடமாகாணசபை முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். காணி தொடர்பாகவும், தமிழ்த்தேசியம் தொடர்பாகவும் கேள்விகள் கேட்டவர்களுக்கு அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசி யல் பற்றி உரையாடுவதற்கு நான் இங்கு வரவில்லை. உங்களுடைய அரசியல் சம்பந்தமான விடயங்களை எனக்கு தபால் மூலமாக அனுப்பிவையுங்கள். அதற்கான விளக்கங்களை நான் உங்களுக்குத் தருகின்றேன்.

முக்கியமாக வினவப்பட்ட கேள்வி என்னவென்றால், பிரபா கரனை நீங்கள் சர்வாதிகாரி என ஏன் சாவகச்சேரியில் நடந்த மே தின நிகழ்வில் குறிப்பிட்டீர்கள் என்று. நான் அவ்வாறு கூறவில்லை. நான் குறிப்பிட்டது என்னவென்றால், ஜனாதிபதியுடைய பதவி எந்தக்காலத்திலும் இருக்கும். தான் தொடர்ந்தும் பதவியிலிருப்பேன் என்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றார். இப் படியிருந்த பல ஆட்சியாளர்கள் இன்று இல்லாமலிருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலை ஜனாதிபதி அவர்களுக்கும் ஏற்படும் விதமாகத்தான் நான் அதனைக் குறிப்பிட்டேனே தவிர, பிரபாகரனை சர்வாதிகாரி என நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். உண்மையில் வடபகுதி யில் மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் அனைத்துத் தமிழ்மக்களும் பிரபா கரனை சர்வாதிகாரி எனக்கூறியது பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். தொலைக்காட்சிகளில் கூட முதலமைச்சர் ஆற்றிய உரை காண்பிக்கப்பட்டது. இதன்போது உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் என்பன இவ்வுரையினைக் கண்டித்து, சிங்கள இனவாதத்துடன் இரண்டறக் கலந்தவர் விக்னேஸ்வரன் என்கின்ற தொணியில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்வாறான செயற்பாடுகளைப் பார்க்கின்றபொழுது, தமிழ்மக்களின் பற்றுதல் எவ்வாறிருக்கின்றது என்பது புலப்படுகின்றது. விக்னேஸ்வரன் உரையாற்றியது அதன் அர்த்தத்தில் இல்லை என்று அவர் கூறிக்கொண்டாலும், அதனை நம்புவதற்காக மக்கள் தயாராகவில்லை. காலப்போக்கில் மக்களிடம் பிரபாகரன் சர்வாதிகாரி என்று சாவகச்சேரியில் கூறியது தவறு என்று மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று மக்கள் கூறினாலும் அது ஆச்சரியமானவிடயமல்ல.

இன்னமும் பிரபாகரனுக்கும் அவரது போராட்டத்திற்கும் மக்கள் இன்றும் மரியாதை செலுத்துகின்றார்கள் என்பது முல்லைத்தீவுக்கு முதலமைச்சர் குழாம் சென்றுவந்ததன் மூலமாகப் புலனாகின்றது.

– இரணியன் –