பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு தாமதமின்றி நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்:

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோதல் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மட்டுமல்லாது, செய்தியளிப்பில் இலங்கை ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி நாட்டின் ஊடக சமூகம் ஆழமான கவனத்தை செலுத்த வேண்டும் என நம்புவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது இந்த மோதல் நிலைமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பலர் மீது அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் வன்முறை குழுக்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல்கள் காரணமாக சில ஊடகவியலாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

துரதிஷ்டவசமான முடிவுகளை எதிர்பார்த்து, திட்டமிட்ட வகையில் வன்முறை குழுக்கள் மேற்கொண்டிருக்கும் கொடூரமான மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர் மற்றும் சொத்து சேதங்களை கவனத்தில் கொள்ளும் போது, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய துன்பகரமான அனுபவத்தை வலியுறுத்திக் கூறமுடியாது.

எனினும் முழுச் சம்பவங்களை நோக்கும் போது இலங்கை என்பது ஒழுக்கமான மனிதனுக்கு வாழ முடியாத நாடு என்பது மட்டுமல்லாது, ஒழுக்கம் நிறைந்த உலகத்திற்கு மத்தியில் பழி சொல்லுக்கு ஆளான நாடாகவும் மாறியுள்ளது.

சட்டத்தின் நிர்வாகம் சீர்குலைந்துள்ள நிலையில், முழு ஜனநாயக கட்டமைப்பும் பாரதூரமான அழிவுக்கு உள்ளாகி இருப்பதே இவ்வாறான சூழ்நிலை உருவாக பிரதான காரணமாக அமைந்துள்ளது.

விசேடமாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பகையுணர்வை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் இரத்த ஆறு ஓடும் நாடாக மாற்ற முயற்சித்து வரும் அடிப்படைவாத சக்திகள் குறித்து ஆட்சியாளர்களும், பாதுகாப்பு பிரிவினை வழி நடத்தும் பிரதான நபர்களும் சமூகத்தின் மீதும் அவர்களின் பலவந்தத்தை திணிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த நிலைமையானது இலங்கையின் மக்களது வாழ்வில் பாரதூரமான அழிவான பிரதிபலனை ஏற்படுத்தி கொடுத்துள்ளதால், சட்டம் மற்றும் அமைதியை மதிக்கும் நீதியான குடிமக்களுக்கு இருக்கும் பொறுப்பு விசாலமானது.

இலங்கையின் எதிர்காலத்தை மிக சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டுமாயின், சகலவற்றுக்கும் முதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் இதன் முதல் கட்ட நடவடிக்கையாக அழிவுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சகலருக்கு எதிராகவும் தகுதி தராதம் பாராது சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.