அனல் மின் நிலையம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது

ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயக்க பணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இலங்கை மின்சார சபையின் மின் பொறியிலாளர்களின் ஊழல், முறைகேடுகள் மற்றும் மின்சார சபையின் தன்னிச்சையான நிர்வாக முடிவுகள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணம் என்பதால், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், நுரைசோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சீனா பொறியிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அத்துடன் மின் நிலையத்தின் பணியாளர்களாகவும் சீனர்களே நியமிக்கப்பட உள்ளனர்.

எவ்வாறாயினும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட செலவுகளை வழங்கும் பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இலங்கை மின்சார சபைக்கும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சீன மெஷிநெறி நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட உள்ளது.

சீனாவிடம் இருந்த பெறப்பட்ட கடனுதவியுடன் சீன பொறியிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டே இந்த மின் நிலையம் நிர்மாணிக்கப்படடது.

மின் நிலையத்தின் இயந்திரங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது.

மின் நிலையத்தை நிர்மாணித்த சீன நிறுவனம் பழைய இயந்திரங்களை கொண்டே இந்த மின் நிலையத்தை நிர்மாணித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.