விமானம் தாமதம் ஆனதால் சொந்த செலவில் பயணிகளுக்கு உணவளித்த பைலட்

87
அமெரிக்காவில் மலிவு விலை விமான சேவையை ‘பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த திங்கட்கிழமை 160 பயணிகளுடன் வாஷிங்டன் நகரில் இருந்து புறப்பட்டு டென்வர் நகரை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது.டென்வர் பகுதியில் மோசமான வானிலை நிலவியதால், வழியில் உள்ள செயென்னே விமான நிலையத்தில் தரையிறங்கி, நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும்படி விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே, போய் சேர வேண்டிய நேரத்தை விட தாமதமாகி விட்டதால் சிறிய விமான நிலையமான செயெனே-வில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் முனங்க ஆரம்பித்தனர். விமானத்தில் இருந்த உணவும் தீர்ந்துப் போனதால், பசி வேறு ஒருபுறம் வயிற்றைக் கிள்ள, பயணிகளின் பொறுமை எல்லை தாண்டி கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தது.

இதை புரிந்துக் கொண்ட விமானி, ‘மைக்’ மூலம் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். ‘அன்புக்குரிய பயணிகளே.. பிரண்ட்டியர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு ‘சீப்’ ஆன கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், அந்நிறுவனத்தின் விமானியாக பணியாற்றும் நான் ‘சீப்’ ஆனவன் அல்ல. பசியில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சொந்த செலவில் ‘பிட்ஸா’ ஆர்டர் செய்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் அவற்றை சாப்பிட்டு மகிழலாம்’ என்று அவர் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அதற்குள், அவர் ஆர்டர் அளித்த பிட்ஸாக்கள் செயென்னே விமான நிலையத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்து சேர, விமான நிலையை அதிகாரிகளின் அனுமதியுடன் ‘டோமினோ’ நிறுவனத்தின் பிட்ஸா டெலிவரி வாகனம் நேராக அந்த விமானத்தின் அருகிலேயே சென்று விமான பணிப்பெண்களிடம் பிட்ஸாக்களை ஒப்படைத்தது.

தனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய ‘சிங்கிள் ஆர்டரை’ சந்தித்ததில்லை என்று பேட்டியளித்த செய்ன்னே நகரின் டோமினோஸ் பிட்ஸா கடையின் மேனேஜர், அந்த பில்லுக்கு உரிய தொகை முழுவதையும் அந்த விமானி தனது கிரெடிட் கார்டின் மூலம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

SHARE