வடக்கு மாகாணசபையில் ஆளுநராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார்.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை.

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்பாக பதவியேற்ற வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி
தனது 5 ஆண்டுப் பதவிக்காலத்தை நாளை ஜுலை 11ம் திகதி நிறைவு செய்கிறார்.

இந்தநிலையில் புதிய ஆளுநர் ஒருவரை நாளை மறுநாள் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் புதிய ஆளுநர் யார் என்ற விபரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

வடக்கு மாகாணசபையில் ஆளுநராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார்.

வடக்கு மாகாணத்துக்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் வேண்டாம் என்றும் சிவில் பின்னணி கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறும் வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் ஜனாதிபதி அதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனினும் கடந்த ஜனவரி மாதம் தெல்லிப்பளையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதியுடன் இது குறித்து வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பேசிய போது சந்திரிசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ளதாகவும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்.

images (7)

அதன் பின்னர் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண முதல்வருக்கு ஜனாதிபதி உறுதிமொழி அளித்திருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடையவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுவரை அடுத்த ஆளுநர் யார் என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TPN NEWS