பாக்தாத் குடியிருப்பு வளாகத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் 33 பேர் பலி

88
மத்திய கிழக்கு நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை அங்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாக அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராளிகள் கைப்பற்றியுள்ள சில பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்காக அரசுத் துருப்புகளும் முழுமூச்சுடன் போரிட்டுவர நாடு முழுவதும் குழப்பமான சூழல் நிலவிவருகின்றது.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சயோயுனா குடியிருப்பு வளாகத்தில் நேற்றிரவு ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர். நான்கு சக்கர வாகனங்களில் வந்த இந்த நபர்கள் அங்கிருந்த இரண்டு கட்டிடங்களில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இதில் குறைந்தது 33 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 29 பெண்களும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.தற்போது அந்த இடத்தைச் சுற்றிலும் காவல் வளையம் போடப்பட்டுள்ளது.

ஈராக்கின் உள்துறை அமைச்சகமும், அரசு மருத்துவமனை அதிகாரிகளும் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். இந்த கொலைகளுக்கான உடனடிக் காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த வளாகமானது பாலியல் தொழிலாளர்கள் வாழும் இடமென்றும், கடந்த காலத்தில் இவர்களைத் தாக்கிவந்த தீவிர இஸ்லாமியர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கவேண்டும் என்ற ஒரு தகவலும் அங்கு நிலவுகின்றது.

எதுவாக இருப்பினும் இனக்கலவரங்களால் குழப்பம் நிரம்பியுள்ள ஈராக்கில் தலைநகரில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கூட எந்தவித சுவடுமின்றி உடனடியாகத் தப்ப முடியும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

SHARE