”பிரபாகரன் – பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?

விசுவநாதன் உருத்திரகுமாரன்

                        விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்  உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறார் உருத்திரகுமாரன். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களால் தப்பிக்கிறார். நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், அளித்த பிரத்யேகப் பேட்டி இது.


                                            ”முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?”
”முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய கடந்த இரு ஆண்டு களில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம் மேலும் உணர்ந்து இருக்கிறோம். சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார் அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும் அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம்.  இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள் சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!”

                                           ”இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?”
”இந்த அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில் நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும். நீதியை மதிக்கக்கூடிய உலகச் சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும் நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச சமுதாயத்தில் ஏற்படுத்தும். தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம் என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அதே சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின் ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி செய்யக் கூடாது. போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள் விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!”

p20

                                           ”தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?”

”ஈழத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார் என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும்!” 
                                           ”இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால்தான், புலிகள் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போனதா?”
”தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக் கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!”

                                           ”உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும் தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?” 
”தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம்.
ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் தமது அரசியல் வேட்கைகளைப் பூர்த்திசெய்யவென்று வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க, ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் அமைந்த கருத்துக் கணிப்பை நடத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது; அது எமக்குக் கிடைக்கவில்லை.
கருத்துக் கணிப்பு நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையானது, நீதிக்கு அப்பாற்பட்ட – அரசியல் பண்பாடற்ற ஒன்று. பன்னாட்டுச் சமூகம் மேற்கொண்ட இந்த மாறுபட்ட முடிவுகள் காரணமாகத்தான், ஜூபாவின் தெருக்களில் புன்னகை பூத்த முகங்களையும் அழகுறு நடனங்களையும் நாம் காணும் அதே வேளையில், தமிழீழத்தின் தெருக்களில் அவலத்தின் குரல்களையும் பெருகியோடும் ரத்த ஆற்றையும் மட்டுமே காண முடிகிறது!”

                                           ”நாடு கடந்த தமிழீழ அரசு கனவா, கற்பனையா, ஏமாற்று நாடகமா?” 
”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது, கனவு அல்ல. கற்பனையும் அல்ல. நாடகமும் அல்ல. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது உலகத் தமிழரின் கனவு. அதை நனவாக்கும் வகையில், ஈழத் தமிழரின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தில் தமிழீழத் தனி அரசை அமைக்கும் முயற்சியில், நாம் இறங்கி இருக்கிறோம். இது உலகுக்கு தமிழர்கள் வழங்கும் ஒரு முன் மாதிரி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் ஒரு வலு மையமாக உருவாவது உலகத் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது!”

                                           ”விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் நீட்சிபோல அதே அடையாளங்களுடன், உங்கள் அமைப்பை முன்னெடுப்பது ராஜதந்திரரீதியில் புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?” 
”தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். உலக வல்லாதிக்க நலன்களுடன் ஒத்திசைந்து, தமிழ் மக்களின் சுதந்திர உணர்வைச் சமரசம் செய்துகொள்ள மறுத்ததால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வு இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இருந்த மக்கள் ஆதரவை அனைத்துலகச் சமூகம் நன்கு அறியும். இது தமிழ் மக்கள் தமக்கெனத் தனிஅரசு அமைக்கும் பெருவிருப்புடன் வழங்கப்பட்ட ஆதரவு என்பதனையும் அனைத்துலகச் சமூகம் அறியும்.”

                                           ”யதார்த்தத்தை உணராததால்தான் வீழ்ந்தார்கள் புலிகள் . இன்னமும் நாம் யதார்த்தத்தை உணரவில்லையா?” 
”இன்றைய யதார்த்தம், அன்றைய நிலையைவிட முற்றாக மாறுபட்டது என்பதுதான் எமது வாதம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளை, பன்னாட்டுச் சமூகம் அப்படியே நம்பிவிடத் தயார் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
தமிழ் மக்களுக்குச் சிறீலங்கா அரசாங்கமும் ராணுவமும் புரிந்துள்ள கொடுமைகள், திருத்தப்படக்கூடியவை அல்ல. தன்னாட்சி பொருந்திய தமிழீழம் மட்டுமே தமிழரைக் காப்பாற்றும்; இந்தப் பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று உலக வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் தெளிவாகப் புரியவைக்க அரியதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து, தமிழ் மக்களின் விடிவுக்கு வழி தேட வேண்டியது எமது கடமை. உண்மை ஒருநாள் வெல்லும். தெற்கு ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும், தற்போது விரைவாக மாறிவரும் பூகோள-அரசியல் இயக்கப்பாடுகள் தெளிவுறும்போது, எமக்கென்று அரசு ஒன்றை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் அதற்குத் தேவையான அரசியல் வெளியும்கூடத் தாமாகவே வந்து அமையும்!”

                                           ”இந்திய அரசையும் அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளையும் இன்னமும் நீங்கள் நம்புகிறீர்களா?” 
”அனைத்துலக உறவுகளில் நிரந்தர நண்பனோ, எதிரிகளோ இருப்பது இல்லை; நலன்களே உண்டு என்று கூறுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும், ஈழத் தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய உலகப்பெரும் சக்திகள்தான். இங்கு கேள்வி, யார் நண்பன் அல்லது எதிரி என்பது அல்ல. எவ்வாறு இந்த உலக சக்திகளின் நலன்களையும், ஈழ தேசத்தின் நலன்களையும் பொருந்தச் செய்வது என்பது தான்!”

z_p08-President6

                                           ”ராஜபக்ஷே… சுதந்திரா கட்சியின் ஏகபோக வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?” 
”சிங்கள இன வெறி மேலாதிக்கத்தின் திரட்சியாக!”

                                           ”கே.பி?” 
”கே.பி. சிறீலங்கா அரசின் ஒரு கைதியாக உள்ள காரணத்தால், தற்போதைய கட்டத்து விடுதலைப் போரில், அவர் ஒரு பொருட்டு அல்ல!”

                                           ”மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள், பாலியல் தொழில் என ஈழத் தமிழர்கள் இடையே இப்போது காணப்படும் கலாசார மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?” 
”இவற்றை சிறீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் நடத்தும் பண்பாட்டு வடிவிலான இனப் படுகொலையின் பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகள் இவை!”

                                           ”இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”
”ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும். சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும். தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்ட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச் சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும்.
இவையே எமது எதிர்பார்ப்புகள்!”

8183095ltte.praba_pottu

                                           ”பிரபாகரன் – பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா? அவர்கள் இருப்பதாக நம்ப வைப்பவர்களுக்கும்  நம்புபவர்களுக்கும்  நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

”காலம் பதில் அளிக்க வேண்டிய ஒரு கேள்வி இது!”

TPN NEWS