இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: அம்லா சதத்தால் தென்ஆப்பிரிக்கா பாலோ ஆனை தவிர்த்தது

இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி ஜெயவர்த்தனே சதத்தால் 421 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன் எடுத்திருந்தது. அம்லா 46 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி வில்லியர்ஸ் 37 ரன் எடுத்திருந்த நிலையில் பெரேரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணி பாலோ ஆனை தவிர்த்தது. பெரேரா மற்றும் ஹெராத்தின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா அணி 282 ரன்னில்  அவுட் ஆனது. அம்லா 139 ரன் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இலங்கை அணி சார்பில் பெரேரா 5 விக்கெட்டும், ஹெராத் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவை விட 150 ரன் அதிகம் பெற்றுள்ளது. நாளை 4-வது நாள் இலங்கை அணி மேலும் 200 ரன்கள் அடித்து 350 ரன்களுக்குமேல் தென்ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.

About Thinappuyal