அமெரிக்கா கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும்-ருவான் வணிகசூரிய

“இலங்கையின் இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவால் முடியாது” என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட் டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்குப் பின்னர், “இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமெரிக்க ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் பேச்சாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். அதை விடுத்து ஒருநபரை எவ்வித ஆதாரங்களுமின்றி கைது செய்வதானது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

அதேபோல்தான், இந்த விவகாரமும் காணப்படுகிறது. கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆகவே, அமெரிக்காவால் இவருக்கெதிராக வழக்குத் தொடர முடியாது” என்றார்.

main8pic1

அதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியான இந்தியாவுக்கு எதிரானது என்ற சர்ச்சையை ஏற்படுத்திய கட்டுரைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியக் கேள்விக்கு, அக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் படமே சர்ச்சைக்குரியதென்றும், அக்கட்டுரையானது மீனவர் மற்றும் இனப்பிரச்சினைப் போன்ற வழமையான பிரச்சினைகளையே பதிவு செய்துள்ளதாகவும் அவர் பதிலளித்தார். மேலும், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சு தனது விசாரணைகளை தற்போது மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 TPN NEWS