புலிகள் இல்லை என்கிறார் பொலிஸ்மா அதிபர் – இருக்கின்றனர் என்கிறார் கோத்தபாய!

Gotabaya-Rajapaksa

ஜெனிவா சர்வதேச விசாரணை மற்றும் நாட்டுக்குள் அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி போன்றவற்றால், ராஜபக்ஷ அரசாங்கம் குழப்பமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் விழுந்துள்ள அதளபாதாளத்தில் இருந்து மீள ஒரே வழி மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்குவதே என அரசாங்கம் எண்ணி வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து கடந்து செல்ல எதிராளிகளை கொலை செய்யவும் மக்களை ஒடுக்கி அடக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்றது என்று காட்டும் அத்தியவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவின் மீளாய்வுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நாட்டில் இல்லை என பொலிஸார் கூறியிருந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் நாட்டில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அதே கூட்டத்தில் கூறியுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அதிரடிப்படை அதிகாரிகள் என உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவுகளை ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வுப் பிரிவினான உயர் புலனாய்வுப் பிரிவு அழைக்கப்படும் பிரிவின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அதாவது, கோத்தபாய ராஜபக்ஷ கூட்டத்திற்கு வருதற்கு முன்னர், மேற்படி உயர் பாதுகாப்பு பிரிவினர் சிகப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகித்தனர்.

அதில் சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

1: பதுளை, ஹட்டன், நோர்வூட் தோட்டங்களில் விடுதலைப் புலிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்த்து மிகவும் ரகசியமான முறையில் ஒன்றிணைந்து வருகின்றனர்.

2: விடுதலை செய்யப்பட்ட மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டத்தில் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

3: பதுளை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான, அபாயமான நிலைமை ஏற்படும் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த மிகவும் ரகசியமான தகவல்கள் என்ற இந்த ஆவணம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆவணம் விநியோகிக்கப்பட்ட பின்னர், கூட்டத்தில் வந்த பாதுகாப்புச் செயலாளர், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பேசியதுடன் புலனாய்வுப் பிரிவுகளின் சகல பணிப்பாளர்களும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதேவேளை கூட்டத்தில் பேசிய பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன், பதுளையில் பொலிஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் பாதுகாப்பு ரோந்து பணிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் பதுளையில் இப்படியான ஆபத்தான நிலைமை இருப்பது பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாறு கூறியதை அடுத்து, கடும் கோபமுற்ற பாதுகாப்புச் செயலாளர், தனக்கு அது பற்றிய காரணங்களை அறிந்து கொள்ளும் தேவையில்லை எனவும் தான் வழங்கிய அறிக்கை பின்பற்றுமாறும் கூறியுள்ளார்.

பொலிஸார் அலுவலகத்தில் இருந்து தகவல்களை திரட்டுவது போல் இராணுவத்தினர் தகவல்களை திரட்டுவதில்லை. அவர்கள் களத்தில் இறங்கி தகவல்களை திரட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய கோத்தபாய, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

அவர்கள் எமது துன்ப துயரங்களை அறிய வரப் போவதில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒக்சிஜன் கொடுக்கவே அவர்கள் வருகின்றனர்.

இதனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை பின்பற்றி செயற்படுங்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில் பதுளை நிலைமைகளை சாட்சியங்களுடன் அறிந்து கொள்ள முடியும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் புலனாய்வுப் பிரிவுகளின் மீளாய்வுக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ரகசியமான புலனாய்வுத் தகவல்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்ற விபரங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.