2015 உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பேன்: உத்தப்பா நம்பிக்கை

2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

2015–ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர் பார்த்து இருக்கிறேன். ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2 ஆண்டில் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து இருக்கிறேன். இதேபோல இந்த முறையும் நன்றாக விளையாடுவேன். எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. ரன்களை குவிக்க முடியும். இதனால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

இவ்வாறு உத்தப்பா கூறியுள்ளார்.

28 வயதான உத்தப்பா 2007–ம் ஆண்டுக்கான உலக கோப்பையில் விளையாடினார். கடந்த உலக கோப்பையில் இடம்பெறவில்லை.

ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்று இருந்த அவர் இந்திய ‘ஏ’ அணிக்காக சரியாக விளையாடவில்லை.

உள்ளூரில் நடைபெறும் ரஞ்சி டிராபி உள்பட முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை அணியில் இடம் பெறும் ஆவலில் உள்ளார்.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி பிப்ரவரி– மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலிய, நியூசிலாந்தில் நடக்கிறது.

About Thinappuyal