“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு”

“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு”
வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம் 
கடந்த 11.08.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் அவர்கள் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்து மக்களை விசாரித்த நிகழ்வு நடந்தது. இது பண்டாரவன்னி கற்சிலைமடு கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு விடயம் தொடர்பாகவே மக்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரித்தாக வெளியான செய்திக்கு கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கூறுகையில்,
ஒரு கிராம அபிவிருத்தி அமைப்பு மோசடியில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்படும் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் கிராமிய அபிவிருத்தி அமைச்சானது எமது மாகாணசபையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆனது கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர், பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அதற்கும் மேலாக கௌரவ முதலமைச்சர் ஆகியோரே அதற்குரிய பொறுப்புக்குரியவர்களாகின்றனர்.
பல நாடுகளின் நிர்பந்தங்களின் கீழ் நடாத்தப்பட்ட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. தமிழ் பேசும் மக்களின் ஒன்றினைந்த வடகிழக்கு மாகாணத்தின் கீழ் பூரண பொலிஸ் காணி அதிகாரத்துடன் மேலும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய அதிகாரத்தை கோரி தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடிவரும் வேளையில் இந்த அரசு இருக்கும் அதிகாரங்களையும் பறித்து எமது மாகாணசபையை உருக்குலைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே அரச திணைக்கள அதிகாரிகள் எமது மாகாணசபையின் அதிகாரங்களை அனுசரித்து செல்வதே தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும். அதை விடுத்து ஒரு கிராம அபிவிருத்தி சங்கத்தில் பண மோசடி என முறைப்பாடு கிடைத்தால் அதை திணைக்கள ரீதியில் அணுகமுற்பட வேண்டும். அதை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கும், சி.ஐ.டி க்கும், இராணுவத்திற்கும் பாரப்படுத்தி நடவடிக்கை எடுக்க முற்படுவது எதிர்காலத்தில் ஒரு பிழையான உதாரணம் சுட்டிக்காட்டப்பட நாமே வழிவிட்டவர்களாகி விடுவோம் என தெரிவித்தார்.
எனவே வடமாகாணசபையின் கிராமிய அபிவிருத்தி அமைச்;சு ஊடாக மேற்படி கிராமிய அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தனது கருத்தாகும் என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
2 copy