ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக, நீதியாக, செயற்பட்டு வருகின்றார்- இரா.சம்பந்தன்

ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவி்த்தார்.

அரசாங்கம் இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு, தாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளாலேயே இலங்கை விவகாரம் சர்வதேசமயமாக்கப்பட்டது என்றும் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதுகுறித்து இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ெ

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை தமது கடமைகளை ஐ.நா. சாசன விதிமுறைகளுக்கமைய ஐ.நா. உறுப்புரிமை நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய செய்து வருகின்றார். தனிப்பட்ட ரீதியில் அவர் ஒருபோதும் செயற்படவில்லை.

அவ்வாறு அவர் செயற்படவும் முடியாது. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக நேர்மையாகச் செயற்படக் கூடியவரையே மனித உரிமைகள் ஆணையாளராக ஐ.நா. நியமிக்கின்றது.

அந்தவகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக, நீதியாக, செயற்பட்டு வருகின்றார்.

இதனால் ஆத்திரம் கொண்ட இலங்கை அரசு, அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைக் கண்டபடி விமர்சித்து வருகின்றது என்றும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

இலங்கையில் அரசு போர் நடைபெற்ற காலத்தின்போது அப்பட்டமாக மீறிய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளை கேள்விகளைத் தொடுத்து ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் தீர்மானத்துக்கமைய சர்வதேச விசாரணையை கொண்டு வந்ததால் இந்த அரசு கடும் கோபத்துடன் அவரைக் கடுமையாக சாடி வருகின்றது.

நவநீதம்பிள்ளையுடன் மட்டுமல்ல, அவருக்கு முதல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த லூயிஸ் ஆர்பருடனும் இலங்கை அரசு வெளிப்படையாக முரண்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்று அப்போது இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் கூறியதையடுத்து அவரைக் கண்டபடி இலங்கை அரசு விமர்சிக்கத் தொடங்கியது.

ஆனால், லூயிஸ் ஆர்பர் நீதியாக, நேர்மையாக, பக்கச்சார்பில்லாமல் தமது கடமைகளைச் செய்தார். அவரின் வழியில் நவநீதம்பிள்ளையும் தமது கடமைகளை ஆரம்பத்திலிருந்து இன்றுவரை செய்து வருகின்றார்.

லூயிஸ் ஆர்பரும், நவநீதம்பிள்ளையும் தமது நாடுகளில் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக முன்னர் கடமையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவர்கள் நீதிக்கு எதிர்மறையானவர்கள் அல்லர்.

அதேவேளை, புதிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்கவுள்ள ஷெயிட் அல் ஹுசைனும் இவர்களின் வழியில் நேர்மையாக தனது கடமைகளைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எனவே, இலங்கை அரசு மற்றவர்களைச் குற்றஞ்சாட்டாது தான் விட்ட தவறுகளைத் திருத்துவதுடன், தான் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.

இதைவிடுத்து நவநீதம்பிள்ளையே இலங்கை விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தி விட்டார் என்று இலங்கை அரசு புலம்புவதில் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.