நாம் உயர் பதவியில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் – நஸீர்

நாம் எல்லோரும் இன்று ஒரு உயர் பதவியில் இருப்பதற்கு காரணமாக அமைந்தவர்கள் ஆசிரியர்களே என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று(28) பாடசாலையின் அதிபர் ஏ.எல்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஆசிரியர்கள் எப்போதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களுக்கான மதிப்பையும், மரியாதையும் நாம் எப்போதும் வழங்கியே ஆகவேண்டும். இன்று நாம் உயர்ந்த பதவிகளில் இருப்பதற்கு அவர்களே காரணமாக அமைந்துள்ளார்கள்.

எமது பிள்ளைகள் வீட்டில் இருப்பதை விட மிக அதிகமான நேரம் பாடசாலையிலும், பிரத்தியோக வகுப்புக்களிலுமே தங்களின் நேரத்தினை செலவு செய்து வருகின்றனர்.

எம் பிள்ளைகளை நாட்டில் ஒரு நல்ல பிரஜையாகவும், சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய வகையில் அவர்களுக்கான ஒழுக்கம் மற்றும் கல்வி போன்ற பல நல்ல விடயங்களை வழங்குவதற்காக பாடுபடுகின்றார்கள்.

அவர்களின் கஷ்டங்களை தாங்கிக்கொண்டு மிகப் பொறுமையாக இருந்துகொண்டு வருகின்றனர். இவர்களை நாம் பாராட்டுவதில் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த வித்தியாலயத்தில் விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது.

சாதாரண மாணவர்களை விட இந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது மிக சிரமமான விடயமாகும் என அமைச்சர் நஸீர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி செயலாளர், வைத்தியர் எம்.ஜே.ஹசான், அதிபர்களான எம்.ஏ.அன்சார், யாசின் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.