பொறுப்புக்கூறும் செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக் கூடாது

625-117-560-350-160-300-053-800-210-160-90-1

வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தை முன்னிட்டு உயிரிழந்த தமது உறவுகளை உணர்வெழுச்சியுடன் மக்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களில் தீபம் ஏற்றி தமது உயிரிழந்த உறவுகளை அவர்கள் நினைவேந்தல் செய்திருக்கின்றனர்.

2007ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையில் இறுதியாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் மீளவும் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதில் இருந்த கல்லறைகள் முழுமையாக சேதப்படுத்தப்பட்டன.

தற்போது பல துயிலும் இல்லங்கள் படையினர் வசம் உள்ள போதிலும் சில துயிலும் இல்லங்களை அவர்கள் விடுவித்துள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்களிலேயே மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை கடந்த அரசாங்க காலத்தில் நினைவுகூர முடியாதநிலை காணப்பட்டது.

இறுதி யுத்தம் முடிவடைந்த மேமாதம் 18, 19ஆம் திகதிகளிலானாலும் சரி மாவீரர் வாரமானாலும் சரி எந்தத் தினத்திலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.

ஆனால் தற்போதைய நல்லாட்சியின் கீழ் இதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது.உறவுகளை தொலைத்துவிட்டு ஏங்கித்தவிக்கும் அந்த மக்கள் அவர்களை புதைத்த இடத்திற்கு சென்று அழுது புலம்பி அஞ்சலி செலுத்தி மன ஆறுதல் அடையக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலுக்கு அரசாங்கம் வழிவகுத்திருக்கின்றது. இத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகவே அமைந்திருக்கின்றது.

ஆனாலும் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடமையும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டியது இன்றியமையாததாகும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமக்கு நீதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்துள்ளனர். இதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய அரசாங்கத்தை உருவாக்கத்தக்க வகையிலும் வாக்களித்திருந்தனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில் பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து அரசாங்கமானது பின்நோக்கிச் செல்வதாகவே தெரிகின்றது.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணை நடவடிக்கை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

மனித உரிமை பேரவையில் இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கமானது தற்போது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை இடம்பெறாது என்றும் உரிய வகையில் உள்ளக விசாரணை மாத்திரம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கின்றது.

உள்ளக விசாரணைக்கான பொறிமுறைகளை உருவாக்கும் செயற்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

ஐ.நா.மனித உரிமை பேரவையானது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் இதுவரை உள்ளக விசாரணைக்கான உரிய ஆயத்தங்கள் இடம்பெறவில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்றது.

ஆனாலும் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடானது பொறுப்புக்கூறும் விடயத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறைகாட்டவில்லையோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை விடுவிக்குமாறும் இந்த விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம் என்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்கு விசேட பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதற்கு திட்டமிட்டுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து கூறியிருக்கின்றார்.

இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி 2012 ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காதான் பிரேரணையை முன்வைத்திருந்தது.

இலங்கைக்கு எதிராக 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அமெரிக்காவானது பிரேரணைகளை முன்வைத்து சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தது.

இந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதையடுத்தே முன்னைய அரசாங்கமானது நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்தே 2015ம் ஆண்டு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய நிலையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய வகையில் உள்ளக விசாரணையையாவது நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவேண்டியதே அவசியமாக உள்ளது.

ஆனால், இந்த செயற்பாட்டை விட்டுவிட்டு பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை விடுவிக்குமாறும் இந்த விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம் என்றும் அமெரிக்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோருவது எந்தளவில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

ஜனாதிபதியின் கருத்தானது பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து முற்றாக புதிய அரசாங்கம் விலகிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் அரசாங்கமானது நடவடிக்கை எடுத்து வருகின்றது. தற்போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த முயற்சிகள் மந்தகதியில் இடம்பெற்றாலும் கடந்த அரசாங்கத்தைப் பார்க்கிலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்கும் அரசாங்கமானது அனுமதி வழங்கியிருக்கிறது.இவ்வாறு நல்லிணக்க சூழலை உருவாக்கிவரும் அரசாங்கம் மறுபுறத்தில் பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து விலக முயற்சிப்பதானது நாட்டில் நிலையான நல்லிணக்கம் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

இந்த நிலையில் யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்கவேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா. உட்பட சர்வதேச சமூகமானது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றன.

எனவே, பொறுப்புக்கூறும் செயற்பாட்டிலிருந்து விலகிச் செல்ல அரசாங்கம் முயற்சிக்காது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் உரிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும். அவ்வாறு நீதி வழங்கப்பட்டால்தான் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்