தரம் 9 மாணவர்களுக்கு பாலியல் கல்வியா..? புத்தகத்தை தடைசெய்யுமாறு மஸ்தான் எம்.பி. கோரிக்கை

masthan-mp1

ஆபாசப் படங்களுடனான தரம் 9 இற்கான பாலியல் கல்வி பாடப் புத்தகம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட எம்.பியான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயேஅவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்

“கல்வி அமைச்சின் பிரசுரிப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, தரம் 9 மாணவர்களுக்கு வழங்கத் தயார் நிலையில் உள்ள ‘பாலியல் கல்வி’ எனும் நூல் மாணவர் அறிவூட்டலைவிட, குறிப்பாக கலப்புப் பாடசாலைகளில் பெண் பிள்ளைகள்துன்புறுத்தப்படுத்தலுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.

அந்தப் புத்தகத்தின் 10, 12 மற்றும் 24 ஆம் பக்க புகைப்படங்களும், உருவப்படங்களும் மிகவும் ஆபாசமான நிலையிலேயே உள்ளன.

இந்த வெளியீடு உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். இவ்வாறான பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்னர், சமய மற்றும் சமூகத் தலைமைகளுடனான கலந்துரையாடல் மிகவும் அவசியமாகும்.

எனவே, பிள்ளைகளை வளமாகவும், ஆண் – பெண் உறவை ஒரு புனிதமான விடயமாகவும், முறைகேடான பாலியல் உறவை ஒரு பாவமாகவும் நோக்கும் நாம், எமது சிறுவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் காட்டும் ஆர்வம் அவர்களது கட்டிளமைப் பருவ உணர்வுகளை முடக்குவதாகவோ அல்லது முறைகேடான கலாசாரச் சீர்கேடுகளைத் தூண்டுவதாகவோ அமையலாகாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.