வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! அவசர எச்சரிக்கை

625-590-560-350-160-300-053-800-944-160-90

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதனால் எதிர்வரும் 28 மணித்தியாலங்களுக்கு கடல் பகுதிகளுக்கருகில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை பொத்திவிலிலிருந்து சுமார் 750 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன் அது வடமேல் மாகாணத்தின் ஊடாக தென்னிந்தியா நோக்கி நகரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வான் பரப்பு அதிகளவு மேக மூட்டங்களை கொண்டதாக காணப்படும். அத்துடன் கடற் பரப்பினுள் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கடல் பிரதேசங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும், இது தொடர்பில் மீனவர்கள், அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த தாழமுக்கம் தென்னிந்தியாவை நோக்கி நகர்வதால் தமிழக மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்போரை கரைக்குத் திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 1ம் திகதி முதல் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் பலத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.