சமுர்த்தி வேலைத்திட்டங்களுக்கு மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் – வேலு குமார்

vel1

சமுர்த்தி வேலைத்திட்டங்களில் இருந்து மலையக மக்கள் காலம் காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இதனை மாற்றியமைக்க நல்லாட்சி அரசு முன்வர வேண்டுமென கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் (29) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் சமுர்த்தி செயற்திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். ஆயினும் கடந்த காலம் முழுவதும் இவ்வேலைத்திட்டம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.

எமது நல்லாட்சியின் ஆரம்பத்திற்கு பிறகு இந்நிலைமை சிறிது மாற்றம் பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இம்மாற்றம் தொடச்சியாக இடம் பெற வேண்டும்.

தோட்டப்பகுதி மக்களையும், சமுர்த்தி வேலைத்திட்டத்தினையும் நோக்குகின்ற போது அது எமது மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

சமுர்த்தி வேலைத்திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதில் மட்டுமன்றி உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதிலும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கு கண்டி மாவட்டத்தினை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டி மாவட்டத்தில் பன்வில பிரதேச செயலக பிரிவில் 58 வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அங்கே 29 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற போதும் ஒருவர் மாத்திரமே தமிழராக காணப்படுகின்றார்.

அப்பிரதேசத்தில் மொத்த சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 809 ஆகவுள்ள நிலையில், இதில் 357 தமிழர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அதே போன்று உடபலாத பிரதேச செயலக பிரிவிலே 43 வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அங்கே சமுர்த்தி உத்தியோகத்தர்களாக 47 பேர் கடமையாற்றுகின்ற போதும் தமிழர் இருவர் மாத்திரமே காணப்படுகின்றனர்.

அப்பிரதேசத்தில் மொத்த சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 4027 ஆகவுள்ள நிலையில் 367 தமிழர்கள் மட்டுமே காணப்படுகின்றனர்.

மேலும் பஸ்பாககோரளை பிரதேச செயலகர் பிரிவில் 51 வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கே சமுர்த்தி 48 உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்ற போதும் 4 பேர் மாத்திரமே தமிழராக காணப்படுகின்றனர்.

எனவே இவை தெட்டத்தெளிவாக எடுத்து காட்டகின்றது சமுர்த்தி வேலைத்திட்டத்தில் இருந்து வறுமை நிலையில் வாழும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று.

இந்நிலைமை இந்நல்லாட்சியிலே மாற வேண்டும். தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள்கோரப்பட்டிருக்கின்றன.

அதில் ஏராளமான மலையக இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்திருக்கின்றார்கள். எவ்வித பாராபட்சமும் இன்றி அவர்களுக்கு முன்னுரிமையளித்து இத்துறையில் அவர்கள் இணைக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் இவ்வேலைத்திட்டத்தை மலையகத்திற்கு கொண்டு செல்ல முடியும். தோட்டங்களில் வாழ்பவர்களும் பயனடைய முடியும்.

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யப்படுவதில் காணப்படுகின்ற நியதி தோட்டத் தொழிலாளர்களை உள்வாங்கப்படுவதற்கு தடையாக காணப்படுகின்றது.

முறைமையற்ற இடங்களில் கூலித்தொழில் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ரூபா.1000 சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அதற்கு எவ்வித அத்தாட்சியும் காணப்படுவதில்லை.

அவ்வாறானோரின் மாத வருமானம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள போதும் அவை அத்தாட்சிப்படாதவையாக உள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நிலை முற்றிலும் எதிரானது. தற்போது நாளொன்றுக்கு கூலி 730 ஆகவுள்ளது.

ஆனால் மொத்த கூலியை பெறுகின்ற போது அதிலும் குறைவான தொகையே அவர்களுக்கு கிடைக்கின்றது எனினும் அவர்கள் கம்பனிகளில் வேலை செய்வதனால் அவ்வருமானங்களுக்கு அத்தாட்சி காணப்படுகின்றது.

ஆகவே கிராம உத்தியோகத்தர்கள் இம்மக்கள் வறுமையில் இருப்பதை அத்தாட்சிப்படுத்தாமல் விடுகின்றனர்.

இதனால் இவர்கள் உண்மையாக வறுமை நிலையில் இருந்தும் சமுர்த்தியை பெற முடியாமல் இருக்கின்றது. அது மட்டுமின்றி 5 ஆம் ஆண்டு புலமை பரிசிலில் சித்தியடைந்தவர்களுக்கு அதற்கான உதவி தொகையும் கிடைக்கப் பெறாமல் போகின்றது.

எனவே இந்த சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யும் நியதியை மாற்றியமையுங்கள். தோட்ட மக்களையும் உள்வாங்கக் கூடிய வகையில் அம் மாற்றத்தை மேற் கொள்ளுங்கள்.

சமுர்த்தி என்பது வறுமைக் கொடுப்பனவாக மட்டுமன்றி வறுமையை ஒழிப்பதற்கான பல நல்ல வேலைத்திட்டங்களை கொண்டிருக்கின்றது. அதிலே மிக முக்கியமாக சுயதொழில் மேம்பாட்டிற்காக கடன் உதவி வழங்குதல் முக்கியம் பெறுகின்றது.

மலையகத்தில் பல தோட்டக்காணிகள் பயிரிடப்படாமல் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி தோட்ட மக்கள் சுயதொழிலில் ஈடுப்படக் கூடிய விசேட செயற்திட்டம்ஒன்றினை சமுர்த்தியின் மூலம் முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் ஏராளமான விதவைப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தினைமுன்னேற்றுவதற்கும் சமுர்த்தி திட்டத்தின் மூலம் ஒரு விசேட திட்டம்முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு எமது நல்லாட்சியில் வறுமை இருக்கும் இடமெங்கும் சமுர்த்தி வேலைத்திட்டம் சென்றடைய வேண்டும். நாட்டின் சகல பிரிவினரும் இதில் இருந்துபயன் பெறக் கூடிய நிலை தோன்ற வேண்டும். எமது நாட்டின் சுபீட்சத்திற்கு சமுர்த்தி அடித்தளமாக வளர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.