கல்வியில் பெருமை கொண்டது யாழ். சமூகம் – பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

கல்வியில் பெருமை கொண்டது எங்கள் சமூகம். இவ்வாறான எங்கள் சமூகம் மிகப் பெரிய அழிவைச் சந்தித்திருக்கும் நிலையில் மீண்டும் நாம் உயர் நிலைக்குச் செல்ல வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப் பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் சியாமளா குணசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

துரதிஷ்ட வசமாகக் கடந்த வருடம் இலங்கையிலேயே வடமாகாணம் கல்வியிலே ஒன்பதாவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

இது கவலையளிக்கும் ஒரு விடயமாகவிருந்தாலும் இதனை நாங்கள் ஒரு பாடமாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தினாலே அது முழுச் சமூகத்தினதும் வளர்ச்சிக்கான அடிப்படையாக நிச்சயம் அமையும்.

நாங்களும் அரசியல் ரீதியாக எங்களுக்கிருக்கின்ற அரசியல் அபிலாசைகளைக் கொண்டு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, எங்கள் மண்ணின் கல்வி வளர்ச்சியை நிச்சயம் மேம்படுத்த உறுதுணையாகவிருப்போம்.

பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் காணப்படும் பாடசாலைகளை விட்டுவிட்டு நகர்ப்புறப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு சென்று சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தூரவிடத்திலுள்ள பாடசாலைகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதால் பெற்றோர்களின் கவனத்திலிருந்து பிள்ளைகள் தொலைவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகும்.

நகர்ப்புறப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதால் அவர்கள் சில வேளைகளில் வழித்தவறிச் செல்லவும் வாய்ப்புண்டு. பெற்றோர்கள் அக்கறை காட்டாதவிடத்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் காட்டுகின்ற அக்கறை முக்கியமானது. நகர்ப்புறப் பாடசாலைகள் தான் சிறந்த பாடசாலைகள் என நாங்கள் கருத வேண்டிய தேவையில்லை.

அண்மைக் காலமாகக் கிராமப் புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்கின்றமையை எங்களால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆகவே, கிராமப்புறப் பாடசாலைகளை நாமனைவரும் ஒன்றிணைந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-22 625-0-560-320-160-600-053-800-668-160-90-23 625-0-560-320-160-600-053-800-668-160-90-24 625-0-560-320-160-600-053-800-668-160-90-25 625-0-560-320-160-600-053-800-668-160-90-26 625-0-560-320-160-600-053-800-668-160-90-27 625-0-560-320-160-600-053-800-668-160-90-28 625-0-560-320-160-600-053-800-668-160-90-29

குறித்த விழாவின் போது இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 12 மாணவ மாணவிகளும் பிரதம விருந்தினர் மற்றும் அவரது துணைவியாரால் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.