கருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி..! விசாரணைகளை தீவிரமாக்கும் அரசு

ltte-karunac

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா தொடர்பில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் பிரததியமைச்சர் கருணா கைது செய்யப்படவில்லை. அவர் அரச வாகனத்தை மீள செலுத்தாத குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், அவர் மீது வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் தான் இவருக்கு வாகனம் வழங்கப்பட்டது. அத்துடன், கடந்த ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 400 மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியின் போது கருணாவிற்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தால் அதனை மீண்டும் அரசுக்கு மீள் வழங்கப்பட வேண்டும்.

எங்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுகின்றது. நாங்கள் விலகிச் செல்லும் போது வாகனங்களை அரசுக்கு கையளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சர் கருணா மற்றும் அவரது தரப்பு தொடர்பில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்து அவருக்கு நெருக்கடியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


You may like this video