அவர்களை உயிருடன் விட வேண்டாம் கொல்லுங்கள் என ஆவேசமாக பாய்ந்தனர் – சுரேஷ் சாட்சியம்

oslo09

“அவர்களை கொல்லுங்கள் என்று கத்தியபடி ஆவேசமாக தகாத வார்த்தைகளில் திட்டியபடி தாக்க ஓடிவந்தனர் ஈ.பி.டி.பியினர்.”

இவ்வாறு யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தேர்தல் பரப்புரைக்காக 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்குச் சென்றுகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நாரந்தனையில் வைத்துக் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2 பேர் கொல்லப்பட்டனர் 24 பேர் காயமடைந்தனர்.

இந்தக் கொலை மற்றும் தாக்குதல் வழக்கு யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது கண்கண்ட சாட்சியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்றுமுன்தினம் சாட்சியமளித்தார்.

அவர் இதன்போது தெரிவித்ததாவது,

“நாரந்தனைப் பகுதியை அண்மித்தபோது சிறு சத்தம் கேட்டது. அந்தப் பகுதியில் பற்றைகள் சில காணப்பட்டன. சிறிது நேரத்தில் துப்பாக்கி சூட்டுச் சத்தங்களும்கேட்டன.

எங்களுக்கு முன்பாகக் கன்ரர் வாகனம் வந்து நின்றது. அனைவரையும் பார்க்க முடியாவிட்டாலும் பல பேர் கத்தி பொல்லுகளுடன் நின்றனர். 45 தொடக்கம் 50 பேர் வரை தாக்குவதற்காக வந்திருக்கலாம்.

மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், ரவிராஜ், எனது பெயர் உட்பட பல பெயர்களைக் கூறிக் கொல்லுங்கள் என்ற சத்தம் கேட்டது. பின்னர் எனக்கு முன்னால் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

எனது ஆதரவாளர்கள் என்னை சுற்றி நின்றார்கள். பல சத்தங்களுக்கிடையே என்னைக் காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டது. 10 நிமிடம்வரை முன்னே செல்லாது நின்றோம்.

அப்போது மாவை சேனாதிராஜா, அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் காயமடைந்த நிலையில் அங்கு வந்தார்கள். அவர்களை ரவிராஜின் வாகனத்தில் ஏற்றிவைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.

எனது வாகனத்தைத் திருப்ப முடியாத காரணத்தால் ரவிராஜின் வாகனத்தில் யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பினோம். முழுச் சம்பவங்களையும் பார்க்காவிட்டாலும் சில சம்பவங்களை பார்வையிட்டேன்.

பின்னர் இருவர் இறந்துவிட்டார்கள் என்று அறிந்தேன். அவர்களின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டேன். குறித்த சம்பவத்தில் 22 தொடக்கம் 25 வரையானவர்கள் காயமடைந்தனர்.

அதிலும் மாவை சேனாதிராஜா மற்றும் சிவாஜிலிங்கம் படுகாயமடைந்தனர். இருவர் உயிரிழந்தனர். தாக்க வந்தவர்களில் ஒருவரை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவர் மதனராஜா. அவர் ஈ.பி.டி.பியுடன் சேர முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற என்னுடைய கட்சியில்தான் இருந்தார். அதனால் அவரை எனக்கு முன்னரே தெரியும்.அவர் பொல்லுகளுடன் நின்றதைக் கண்டேன்.

அவர் மட்டுமன்றி எம்மைத் தாக்க வந்த அனைவரும் ஆக்ரோசத்துடன் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பலத்த சத்தங்களுடன் வாகனத்தை அடித்து நொருக்குவதையும் ஆள்களை அடிப்பதையும் கண்டேன்.

தற்போது மதனராஜா மன்றின் எதிரிக்கூண்டில் இல்லை” என்று அவர் சாட்சியமளித்தார்.