கருணா, விடுதலைப்புலிகள் பிளவுக்கு நான் காரணமல்ல-கெளரவ அலி ஸாஹிர் மெளலானா

வன்னிப்புலிகளையும் மட்டுப்புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்த அரசாங்கம் அவர்களின் சகோதரப்படுகொலை முடிந்த கையோடு வன்னித்தலமையை உலகநாடுகளின் உதவியோடு அழித்தொளித்தார்கள் அம்பலமாகும் உண்மைகள்

கருணா, விடுதலைப்புலிகள் பிளவுக்கு நான் காரணமல்ல-கெளரவ அலி ஸாஹிர் மெளலானா  தமீழீழ விடுதலைப்புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவறை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள் தான் தரகர் வேலை பார்த்ததாக தமிழ் சமூகத்தினாலும், அரசியல் பிரமுகர்களினாலும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது சுமத்தப்படுவது சம்பந்தமாக நீங்கள் அவர்களுக்கு எதனைச் சொல்ல விரும்புகின்றீர்கள்? கெளரவ அலி சாஹிர் மெளலானா:

01-min-min-min

இது ஒரு முக்கியமான விடயமாகும். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தார். அதனடிப்படையில், அர்த்தமுள்ள தீர்வை அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நோக்கி வர வேண்டும். இனப்பிரச்சனைக்கு அர்த்த புஸ்ட்டியான தீர்வினைக் காண வேண்டுமென்பதற்காக விடுதலைப்புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகவே அவை இருந்தது. அப்பொழுது விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களைக் களைந்து விட்டு சமாதானத்துக்கு வந்தனர். உலக நாடுகளின் கண்காணிப்பிலே அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் அர்த்தமுள்ள பேச்சுவார்தையின் மூலம் ஒரு இனத்துக்கான விடிவு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டுமென்பதில் கரிசணை காட்டப்பட்ட காலமகவும் அன்றைய காலம் காணப்பட்டது. அந்நேரத்தில் தான் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிழக்கின் தளபதியாகவிருந்த கருணா அம்மானை அம்பாறை, மட்டகளப்புக்கான அரசியல் தளபதியாக நியமித்து, வெளிநாடுகளில் நடைபெற்ற அனைத்து அரசியல் மற்றும் சமாதானம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ளச் செய்தார். நான் அந்த நேரத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகவும் முக்கிய பொறுப்பினை வகித்து வந்தேன். அந்த வகையில், இடம்பெற்ற பேச்சுவார்தை நேரங்களில் எனக்கும் பாரிய பங்குகள் வழங்கப்பட்டிருந்தன. அதாவது மீண்டும் யுத்தமற்ற நிலைமை உருவாக்கப்பட்டு மக்கள் சகஜமான வாழ்வினை வாழ்ந்து சுமூகமான முறையில் தங்களது மீன் பிடி, விவசாயம் மற்றும் இன்னோரன்ன அத்தியாவசியத் தேவைகளைச் சுதந்திரமாக செய்து கொள்வதற்கான வழி வகைகள் ஏற்படுத்தப்படல் வேண்டுமென்பதனை அடிப்படையாகக் கொண்டு அடிக்கடி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களாக கேணல் கருணா அம்மான்,

கரிகாலன், கெளசல்யன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். அந்த வகையில் உலகலாவிய இரீதியிலும் விடுதலைப்புலிகள் சமாதானப் பேசுவார்த்தைகளில் ஈட்டுபட்டு வந்ததன் பலனாக சமாதனப்பேரவை அமைப்பானது, உலக நாடுகளின் மேற்பார்வையில் கொழும்பிலும் கிளிநொச்சியிலும் தங்களது காரியாலையங்களை அமைத்து இரு தரப்புச்சமாதான நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது. அந்த வகையில், அப்பேரவையின் பணிப்பாளராக பேனார்ட் குணத்திலக்க செயப்பட்டதோடு, தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டொவும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். இவர்கள் எல்லோருடனும் பல சுற்றுப்பேசுவார்த்தைகளை மேற்கொண்டு தான் அப்பொழுது கிழக்கு மாகாணத்திலே பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தோம். மக்களின் மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த முக்கியமான வீதிகளை மக்களின் பாவனைக்குத் திறந்து வைத்தோம். அதே போன்று, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் விவசாயம், மீன்பிடி, காணி போன்றவைகளில் பல முரண்பாடுகளும், பிரச்சினைகளும் உருவான பொழுது நாங்கள் முன்னின்று சுமூகமான சமாதான நிலைமையினை உருவாவதற்கு முக்கிய பங்காற்றினோம். இந்த நிலையில், நாங்கள் வட கிழக்கில் சமாதானத்துடனான அரசியல் சுமூக நிலைமை உருவாக்கப்படல் வேண்டுமென்பதனைக் கருத்திற்கொண்டு இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி பேச்சுவார்த்தை மூலமாகத்தான் அர்த்தமுள்ள நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற நோக்கில், உலக நாடுகளின் கண்காணிப்பில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த படியினால் விடுதலைபுலிகளும் அரசியல் இரீதியாக முக்கியமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற வகையில் சமாதானப் பேசுவார்த்தையில் அதிக ஈடுபாட்டுடன் பங்களிப்புச் செய்து வந்தனர். நாங்கள் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவின் தலைமைகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தகளின் பலனாக, கிழக்கு மாகணத்தின் பொலன்னறுவை மாவட்டதிலுள்ள வெலிக்கந்தையிலிருந்து மட்டக்களப்பு வரையுமான ரெயில் பாதையானது பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் ரெயில் சேவையானது மக்களின் இயல்பு வாழ்க்கைகக்காக திறந்து விடப்படிருந்தது. இவ்வாறு பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் ஒஸ்லோவில் சென்று கொண்டிருந்த நிலையில், புரிந்துணர்வு சம்பந்தமாக அதன் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிவிக்காமல் கருணா அம்மானின் ஆலோசனைப்படியும் தமிழ்ச்செல்வனின் விருப்பத்தின் படியும் இந்தியாவிலிருக்கின்ற பெடரல் அரசியல் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்திற்கமைய பேச்சுவார்த்தைகளின் முன்மொழிவுகளை பாலசிங்கம் ஆராம்பித்தார் என உருத்தகுமார் புரளியொன்றினை எழுப்பியதால், அது பரவலாக விமர்சிகப்பட்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்குப் பிற்பாடு கிளிநொச்சியில் பிரபாகரணை கருணா அம்மான் சந்திக்கச் சென்ற வேளையில், பிரபாகரனால் கருணா அம்மான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, நீயும் வரலாற்றில் மாத்தையாவாக இடம்பிடிக்க விருப்புகின்றீரா? என்ற கேள்வியும் பிரபாகரனினால் கருணா அம்மானை நோக்கி தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பல வார்த்தைப்பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாகவும், பொட்டு அம்மானுக்கும், கருணா அம்மானுக்குமிடையில் இவ்விடயம் சமப்ந்தமாக பல வாய்த்தர்க்கங்களும் பிரச்சினைகளும் உருவாக்கப்பட்டதன் விளைவாக பிளவுகள் அவர்களுக்குள்ளேயே உருவாக்கப்பட்டிருந்தது. இக்கால கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பிரபாகரனுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தையானது விடுதலைப்புலிகளின் உட்பூசல்களினால் இடைநிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் சார்பாக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான மேசைக்கு கொண்டு வர முயற்சித்த நிலையில் தான் அந்த கால கட்டத்திலே ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா அம்மையார் பேசுவார்த்தைகள் மூலமாக பிரதமர் ரணில் தீர்க்கமான முடிவினை அடைந்து விட்டால், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியினைக் கைபற்றும் என்ற நோக்கத்தினடிப்படையில் முக்கிய அமைச்சுக்களான பாதுகாப்பு உட்பட ஏனைய சில முக்கிய அமைசுக்களை அவருடைய நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்தற்குப்பிற்பாடு 28.01.2004ம் ஆண்டு பாராளுமன்றத்தினையும் கலைத்து விட்டார். ஆகவே, பாராளுமன்றக்கலைப்பு ஏற்பட்ட அந்தச் சூழ்நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய தேர்தல் பிரசாரமாக விடுதலைப்புலிகளுடன் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையானது, இந்த நாடு இரண்டாகத்துண்டாப்படுமென்றும் பேச்சுவார்த்தையனது விடுதலைப்புலிகளுக்கு முற்று முழுதாக சாதகமான பேச்சுவார்த்தையாகவும் அமைந்துள்ளது என்ற பேச்சுக்களாகவே காணப்பட்டது. அதற்கு மேலும் வலுச்சேர்க்குமுகமாக ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி போன்ற கட்சிகளும் சந்திரிகாவுக்கு சார்பாக களத்தில் குதித்திருந்தன. அந்த நேரத்தில் தான் நாங்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். அந்த நிலையில், தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தும், தமிழ் அரசுக்கட்சியானது விடுதலைப்புலிகளின் கிழக்கின் அரசியல் தலைவர்களான கருணா அம்மான், கரிகாலன் போன்றவர்களின் மேற்பார்வையின் கீழும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்திய அதே நேரத்தில், வட மாகாணத்தில் பிரபாகரனின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழ் செல்வன், புலித்தேவன், பொட்டு அம்மான் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதுமாக புலித்தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த என்னை முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையின் படி ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடமால் இருக்கும் படியான கோரிக்கைக்கமைவாக நான் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்கப்பட்ட நிலையில், என்னை ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்கியிருந்தார். அவ்வாறான நிலையில் என்னுடன் ஐக்கிய தேசியகட்சி நீண்ட காலமாக போட்டியிட்ட சக நண்பர்களான ராஜன் சத்தியமூர்த்தி கருணா அம்மானின் ஆசியுடன் தமிழரசுக்கட்சியில் போட்டியிட இன்னொமொரு நண்பரான ஆரையம்பதியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் சுந்தரமூர்த்தி ஐயா ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டார். இவ்வாறிருக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் பொட்டு அம்மான் அணியைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி ஐயா மீது 2004.02,27ம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தியதனால் சுந்தரமூர்த்தி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தன்னை விடுதலைப்புலிகளின் பொட்டு அம்மான் அணியினரே சுட்டதாக பி.பி.சி வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்து ஒரு மணித்தியாலத்துக்குள்ளே மீண்டும் வைத்தியசலைக்குள் சுடப்பட்டு சுந்தரமூர்த்தி கொல்லப்பட்டிருந்தார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து கருணா அம்மான் மிகவும் ஆத்திரமடைந்திருந்தார். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடக்கின்ற இந்த கால கட்டத்தில் இவர்கள் வடக்கிலிருந்து வந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாக இருப்பதனாலும், ஜனநாயக இரீதியில் கருணா அம்மானின் அணியினர் தங்களது நடவடிக்கைகளை அரசியல் இரீதியாக முன்னெடுப்புச் செய்கின்ற நிலையில், இவ்வாறு முன்னாள் அதிபர் சுந்தமூர்த்தி கொலை செய்யப்பட்டதை கருணா அம்மான் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்நிலையில், வன்னியைச் சேர்ந்த பொட்டு அம்மானின் உறுப்பினர்களுக்கும் கருணா அம்மானின் உறுப்பினர்களுக்கும் மிகவும் உச்சக் கட்டத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இதைத்தொடர்ந்து, தேர்தல் நெருங்கிய நிலையில் அதாவது 2004.03.03ம் திகதி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கருணா அம்மான் தான் இன்றிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறுவதாகவும், புலிகள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரண்பட்ட நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள எங்களுடைய ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் கொலை செய்து வருகின்றனர். அது சம்பந்தமாக அவர்களுடன் காரசாரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை. அந்நிலையில், என்னையும் அவர்கள் கொலை செய்ய முயற்சித்த வேளையில், அவர்கள் என்னிடம் துரதிஸ்டவசமாக மாட்டி விட்டனர். அத்துடன், அவர்கள் சார்பானவர்களைப் பிரித்து தான் வன்னிக்கு அனுப்பிவிட்டாதாகவும் கூறிய கருணா அம்மான் இவ்விடயத்தினை உங்களுடைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறுமாறு கொழும்பிலிருந்த என்னிடம் வேண்டிக்கொண்டார். தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தென்னிலங்கையில் மேற்கொள்கின்ற பிரசாரங்களில் மோதல் தவிர்ப்பு எனப்படும் விடயத்தில் விடுதலைப்புலிகளோ, இராணுவத்தினரோ, தென்னகத்திலுள்ள இளைஞர்களோ, வடகிழக்கிலுள்ள இளைஞர்களோ கொலை செய்யப்படவில்லை. பாதிக்கப்படவுமில்லை. எனவே, இந்தச் சாமாதான உடன்படிக்கை தான் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தினையும், தீர்வினையும் ஏற்படுத்தும் என்ற பிரசாரத்தினை ஐக்கிய தேசியக்கட்சி முன்வைத்துச் செல்கின்ற நிலையில், இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கிடையில் ஏற்படுகின்ற பிளவானது எங்களது பிரசாரத்திலே அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையினைப் பூதாகரமாக்காமல் வன்னிப்புலிகளுடன் ஒற்றுமையினைக் கடைப்பிடிக்குமாறு தலைவர் ரணில் விக்ரமசிங்க கருணா அம்மானிடம் கூறுமாறு என்னிடன் பணித்தார். அதனடிப்படையில், நாங்கள் மேற்கொள்ளவிருக்கின்ற சமாதான நடவடிக்கையானது இடைநடுவில் இவர்களுடைய பிளவினால் இடைநிறுத்தப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக நாங்கள் மட்டக்களப்பிலுள்ள சமாதான பேரவையின் உறுப்பினர்களையும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களையும் அணுகி ஒரு குழுவினை ஏற்பாடு செய்து சமரசம் செய்வதற்காக அவர்களை வடக்கிற்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அங்கு சென்ற நேரத்திலோ நாங்கள் அனுப்பிய சமாதானக்குழுவினை வன்னியைச் சேர்ந்தவர்கள் காரசாரமாக விமர்சித்தும் தகாத வார்த்தைகளால் தூற்றியும் அனுப்பி வைத்தனர். இதன் பொழுது கருணா அம்மான் என்னிடன் சொன்னார். பார்த்தீர்களா? அண்ணா, நீங்கள் நல்ல முறையில் சமாதானத்துக்காக முயற்சித்தும், எங்களுக்கிடையில் பிளவு ஏற்படக்கூடாது என நினைத்தும் செயற்படுக்கின்ற நிலையில், வடக்குப்புலிகளும், வட மாகாண மக்களும் கிழகு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இடமளிக்கமாட்டார்கள். அத்தோடு, கிழக்கிலுள்ள முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழலாம். ஆனால், யாழ்பாணத்து மக்களுடன் வாழ முடியாதென்று மிகவும் காரசாரமான கருத்தினை கருணா அம்மான் என்னிடம் முன்வைத்தார். இந்நிலையில், ஒஸ்ரின் பெர்னாண்டோ, பேனாட் குணதிலக்க சமாதனப்பேரவையின் உறுப்பினர்கள் அடங்களாக ரணில் விகரமசிங்கவின் வேண்டுக்கோளுக்கிணங்க வன்னிக்குகுச் சென்று சமாதான ஒப்பந்தத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லுமுகமாக உங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவினை சமாதானமான முறையில் முடித்துக்கொள்ளுமாறு வேண்டியதோடு., அந்த வேண்டுகோளினை கருணா அம்மானிடமும் சமர்ப்பித்தோம். ஆனால், 2004ம் ஆண்டின் பொதுத்தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முதல் மட்டகளப்பின் முன்னாள் மேயரான சிவகீதா பிரபாகரணின் தந்தையான ராஜன் சத்தியமூர்த்தியை அவருடைய வீட்டில் வைத்து பொட்டு அம்மானின் அணியினைச்சேர்ந்தவர்கள் துப்பாக்கியினால் கொலை செய்து விட்டுச் சென்றனர். இதனால், மட்டக்களப்பு நகரானது மிகவும் பதட்டமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அமைதியான அன்னை பூபதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த ராஜன் சத்திய மூர்த்தியின் உடலை வன்னிப்புலிகள் மீண்டும் தோண்டியெடுத்து, அவமானப்படுத்தியதன் விளைவும் மட்டக்களப்பில் மிகவும் சங்கடமான சூழ்நிலையை ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அதனோடு சேர்த்து தேர்தல் அதிகாரயாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளையில் வன்னிப்புலிகளினால் சுடப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் மட்டக்களப்பில் தொடர்ந் தேர்ச்சியாக வன்னிப்புலிகளினல் மேற்கொள்ளப்பட்டமையினால் மட்டக்களப்பில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துக்கொண்டே சென்றது. அந்நிலையில், தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியத்த தழுவிக் கொண்டதினால் சந்திரிக்காவின் புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சராக கடமையேற்ற லக்ஸ்மன் கதிர்காமர் அவருடைய செயலாளராகவிருந்த பேனார்ட் குணத்திலக்க மூலம் என்னை அணுகி நாங்களும் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்காமல் கருணா அம்மான் விடுதலைப்புலிகளை விட்டு வெளியில் வருவாரானால், அவருக்குரிய பாதுகாப்பு வழங்க நாங்கள் தயாராகவிருக்கின்றோம் என்ற கருத்தினை கருணா அம்மானிடம் தெரிவிக்குமாறு வேண்டினார். அந்த வகையில், எந்தக்கட்சியாக இருந்தாலும் இந்த நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் நான் செயற்பட்டதன் காரணமகவும், வடகிழக்கிலுள்ள அப்பாவி தமிழ் இளைஞர்களின் உயிர்கள் காவுகொடுக்கப்படக்கூடாதென்பதற்காகவும் முயற்சிகின்றேன் எனக்கூறினேன். அதற்குப் பிற்பாடு கருணா அம்மானுடன் கிழக்கில் இரண்டாவது தளபதியாகவிருந்த றமேஸ் என்பவர் வன்னியிலிருந்து என்னோடு தொடர்பினை ஏற்படுத்தி, தான் கருணா அம்மானின் சிஸ்யனாக இருந்த படியினால் பிரச்சினைகளை அனைத்தையும் நன்கறிந்தவன் என்ற இரீதியில் கொள்கையளவில் கருணா அம்மானின் பிரச்சினையினை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், எனது மனைவி கடற்புலிகளின் தளபதி சூசையின் தங்கை என்ற படியினால், வன்னிக்குச்செல்ல ஏற்பட்டதாகவும், அங்கு தன்னை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்துக்கான தளபதியாக நியமித்தாகவும் தெரிவித்ததோடு, கருணா அம்மான் எங்கள் இயக்கத்தினை விட்டுப்பிரிந்தாலும் சகோதரப் படுகொலைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளபடியினால் நாங்கள் அவருடன் மோதுவதற்கு விருப்பவில்லை. அதனால் மெளலானாவினால் மட்டுமே கருணா அம்மானை ஆறுதல் படுத்த முடியுமென்ற வார்த்தைப் பிரயோகத்தோடு, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி, உடனடியாக கருணா அம்மான் விரும்புகின்ற நாட்டிற்கு அவருடைய குடும்பத்தினரோடு நாங்கள் அவரை அனுப்பி வைப்பதற்குத் தயாராகவுள்ளோம். அதனை எங்களுடைய தேசியத்தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற செய்தியினை கருணா அம்மானிடம் எத்திவைக்குமாறு தமிழ்ச்செல்வனும் தொலைபேசியில் இருக்கத்த நிலையில், வேண்டிக்கொண்டனர். இச்செய்தியினை நான் கருணா அம்மானிடம் எடுத்துக்கூறிய வேளையில், கருணா அம்மான் வடக்கினைச்சேர்ந்தவர்கள் அவ்வாறு தான் கூறுவார்கள். அவர்களுக்கு இந்த மண்ணின் மகிமை தெரியாதென்றும், றமேசின் மனைவிக்காக அவர் வன்னிக்குச்சென்று விட்டார். வடக்கினைச் சேர்ந்தவர்கள் எனக்குப் பொது மன்னிப்பு வழங்கி, நான் உயிர் வாழத்தேவையில்லையென்றும் எனது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிரைக் கொடுப்பதினை தான் பெருமையாக நினைக்கின்றதாகக் கூறிய கருணா அம்மான் வன்னித்தலைமைகளின் வேண்டுகோளினை நிராகரித்து விட்டார். யுத்தி நிறுத்த காலத்தில் நிராயுதபாணிகளாக அரசாங்கத்தின் உதவியோடு விடுதலைப்புலிகள் தாங்கள் விருப்பிய இடத்திற்குப் பயணிக்கலாம் என்ற சரத்துக்கள் காணப்பட்டாலும், வன்னிப்புலிகள் ஆயுதங்களோடு மட்டக்களப்பு-வாகரை கடற்கரையோரத்திற்கு வருகை தந்து தீடீரென கருணா அம்மானின் அணியினரைத் தாக்கத்தொடங்கினர். அந்த நேரத்தில், இராணுவமானது இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டு அழிந்து போகட்டுமென வேடிக்கை பார்க்கின்றதென்ற காரணத்தினால், தனது அணியினைரை கருணா அம்மான் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதிக்கு அடுத்த பக்கத்திலுள்ள தொப்பிக்கலைப் பக்கதிற்கு கொண்டு வந்ததாகக் கூறினார். அத்தோடு, பாடசலைப்பிள்ளைகளை கிழக்கு மாகாணத்தில் கூடுதலான முறையில் வன்னிப்புலிகள் இயக்கத்தில் இணைதுள்ளமையினால், அவர்களை தான் விடுவிக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு நீங்கள் செய்ய நினைக்கும் விடயமானது மிகச்சிறந்த விடயமெனக் கூறிய நான், அவ்வாறு செய்யும் நீங்கள் யுனிசெஃப் நிறுவனத்தை சாட்சியாக வைத்து சிறுவர்களை கையளிக்குமாறு வேண்டிக்கொண்டேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளிலிருந்த ஏராளமான சிறுவர்களை விடுவித்ததனை அப்பொழுது இலங்கையிலிருந்த அனைத்து வெளிநாட்டுத்தூதரகங்களும் பாராட்டியிருந்தன. இவ்வாறிருக்கையில், 12.04.2004ம் ஆண்டு என்னுடன் தொடர்பினை ஏற்படுத்திய கருணா அம்மான் தான் கொழும்பு வர விரும்புவதாகவும், மட்டக்களப்பிலுள்ள நிலைமைகளைப் பற்றி வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சில உண்மைகளை விளங்கப்படுத்த விரும்புவதாகவும், அதற்காக தனக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து தருமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு நான் சொன்னேன். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்கள் மிக அதிகமாக காணப்படுகின்ற படியினால், உயிராபத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே, நான் கொழும்பு செல்லவிள்ள படியினால் உங்களை எனது வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்கின்றேன் எனக்கூறினேன். அதற்கு ஆச்சரியப்பட்டு பெரு மகிழ்ச்சியடைந்தார். கருணா அம்மானிடம் நீங்கள் சமாதானத்தை விரும்பும் அதே வேளையில், வன்னியைச் சேர்ந்தவர்கள் சமாதானத்தின் பக்கம் இல்லாததினால் தான் நான் உங்களை கொழும்புக்கு அழைத்துச்செல்லும் முடிவினை எடுத்துள்ளேன் எனக்கூறி நான் கருணா அம்மானை கொழும்புக்கு அழைத்துச்சென்றேன். நான் கொழும்புக்கு கூட்டி வந்தது மட்டுமல்லாமல், லக்ஸ்மன் கதிர்காமரும் பேர்னாட் குனத்திலக்கவும் சமாதானத்தினை மேற்கொள்வதைக் கருத்திற்கொண்டு உங்களுக்கான பாதுகாப்பினை அவர்கள் தருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தேன். அதற்கு கருணா அம்மான் சமாதானப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றால், எந்த விடயத்திலும் தலையிடாமல் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருப்பதற்கு தயாரெனத் தெரிவித்தார். அதனடிப்படையில் நான் கருணா அம்மானை லக்ஸ்மன் கதிர்காமரிடம் கையளித்தேன். இது தான் உண்மையில் எனக்கும் கருணா அம்மானுக்குமிடையில் நடைபெற்ற விடயமாகும். கருணா அம்மான் விடுதலைப்புலிகளிலிருந்து பிரிவதற்கு நான் காரணம் என்று சொல்லப்படுகின்ற விடயமானது, உண்மைக்குப்புறம்பான விடயமாகும். இதனை வடக்கு வாழ் மக்களும் என்னை விமர்சிக்கின்றவர்களும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அத்தோடு, அன்று நான் கிழக்கிலிருந்து கருணா அம்மானை கொழும்புக்கு அழைத்துச் சென்றிருக்காதிருந்திருந்தால், பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கும் என்பது இன்று பேசப்படும் உண்மை வரலாறாக நிச்சயமாக இருந்திருக்கும் என்பதில் எவரிடமும் இரண்டாம் கருத்திருக்க இடமில்லை. ஆகவே, வடக்கிலுள்ளவர்களாக இருந்தாலும் சரி கிழக்கில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி அனைத்து மக்களும் உண்மையில் என்ன நடந்தது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே நான் இறுதியாகக்கூறும் கருத்தாகும்.