கருணா தற்போது தனக்கு வேண்டாத தமிழர்களை புலிகள் எனவும், சிங்கள மற்றும் முஸ்லிம்களை இந்திய றோ, பிறநாட்டு உளவுத்துறை ஏஜென்டுக்கள் எனவும் காட்டிக்கொடுத்து அரசினை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றார்

 

பாரபட்சத்திற்கு எதிரான தமிழ் மக்களின் உரிமைப்போர் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தினை பிரபாகரன்-கருணா கும்பல் தமிழ் மக்களை ஆழும் ஆயுதமாக பயன்படுத்த முற்பட்டதுடன், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கியமையின் வடுக்களை தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கையர் அனைவரும் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

the-morning-stars-of-the-east-photo-img_assist_custom

தமிழரசுக் கட்சி முதல் புலிகள் வரையான சகல தமிழ் கட்சிகளாலும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறு. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், இனிவரும் காலங்களில் மேற்படி வழித்தோன்றல்களான அரசியல் கட்சிகளையும், பிரபாகரன் அழிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் திருநாமம் காப்பதற்கு ஜனநாயகப் போர்வை போர்த்துள்ள பிரபாவின் வாரிசான கருணாவினையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

தமிழ் மக்கள் துஸ்டனைக் கண்டால் தூரவிலகிப் பழகியவர்கள். எனவே கருணா எனும் துஸ்டன் நிற்கும் பக்கம் கூட மக்கள் தலைவைத்து படுக்க விரும்பமாட்டார்கள் என்பதையும், பாமரத் தமிழ் மக்கள் முதல் அரசியல் ஞானம் படைத்தோர் வரை கருணா இணைந்திருக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படவோ அக்கட்சிக்கு ஆதரவு வழங்கவோ முற்படமாட்டார்கள் என்பதும் அரசியல் என்னவென்று தெரியாத சிறுகுழந்தைக்கு கூட புரியும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கருணாவை கட்சியினுள் வைத்துக்கொள்ள முற்படுவதானது அக்கட்சியின் படுதோல்விக்கு வித்திடலாம் எனப் பலரும் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 7000 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் போரில் உயிர்நீத்துள்ளனர். ஏனவே அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் கருணாவை ஆதரிக்கக்கூடும் என ஜனாதிபதி மஹிந்தவும் அவர் அரசும் கருதாலாம். ஆனால் அது முற்றிலும் தவறான கருதுகோள். மேற்படி 7000ம் போராளிகளில் இரு தரப்பு. அதில் ஒருதரப்பு கருணாவின் வஞ்சகமான ஆசைவார்த்தைகளை நம்பி, தமிழீழம் எனும் மாயையில் மயங்கி (கிழக்கு மாகாணத்தில் அந்த மாயயை உருவாக்கிய முழுப்பொறுப்பும் கருணாவினுடையது) தமிழீழம் காணச் சென்றோர். மறுதரப்பு கருணாவினால் கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டோர். இதில் கட்டாயமாக பிடித்துச் சென்று உயிர் நீத்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர் எந்தக்காலக்கட்டத்திலும் கருணாவை மன்னிக்கப்போவதில்லை. மற்றய தரப்பும் கருணாவின் இன்றைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இவற்றிற்கு அப்பால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சாதாரண வாழ்வு வருகின்றது என சந்தோசப்பட்டாலும் சிவபூசையினுள் கரடி ஒன்று புகுந்துள்ளதே என்ற ஏக்கத்துடனேயே பொதுமக்கள் வாழ்கின்றனர். யார் இந்த கரடி?

இலங்கை அரசின் அரசநிர்வாகத்தை குழப்பி அரச அதிகாரிகளை தனது வக்கிரத்தினுள் அடக்கி வைத்திருந்த கருணா என்கின்ற கரடி இன்று அரச யந்திரத்தினுள் புகுந்து நிற்கின்றது. புலிக்கேணல் கருணா இலங்கை அரச நிர்வாகத்திலிருந்த தனது கட்டனைகளுக்கு கட்டுப்பட மறுத்த அல்லது தயக்கம் காட்டிய எத்தனை தமிழ் அரச அதிகாரிகளைக் கொன்று குவித்திருக்கின்றார் என்று அரச தரப்பினர் கிழக்கல் உள்ள ஒவ்வொரு கிராம் கிராமமாகச் சென்று வினவினால் கருணாவிற்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்து கொள்ளமுடியும்.

இவற்றை ஆழமாக சிந்தித்துப் பார்க்காத ஐனாதிபதி மஹிந்தா, ஏதோ புலிகளை தோற்கடிப்பதற்கு கிழக்கின் இளைஞர்கள் உதவினார்கள் எனக் கருதி அவ்விளைஞர்களின் ஒத்துழைப்புக்கு நன்றிக்கடனாக முரளிதரனுக்கு இத்தனை பதவிகளையும் வழங்கினார் என்பதை மறந்தவிட்ட கருணா, எந்த இளைஞர்களின் முதுகில் சவாரி செய்து வந்தாரோ அந்த இளைஞர்களை எட்டி உதைத்துள்ளார் என்பதை ஜனாதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்வாழ்விற்காகவும் அரசினால் வழங்கப்பட்ட வளங்கள் பதவிகள் யாவும், கருணாவின் சுய இன்பத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. கிழக்கிலங்கையில் அபிவிருத்தி என ஆரம்பிக்கப்பட்ட சில முன்னெடுப்புக்கள் கருணாவின் பிரத்தியேகச் செயலாளரின் தங்கை கணவனுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளாதாக கருணாவுடன் இருக்கின்ற இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

புலிகளில் இருந்து வெளியேறி வந்த கிழக்கு இளைஞர்களில் 225 க்கும் அதிகமானோர் புலிகளுடனான யுத்தத்திலும் புலிகளால் நயவஞ்சகமாகவும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்கள் சுயதொழில் ஒன்றிற்கு எதாவது உதவி கிடைக்குமா என ஏங்கி நிற்கும் நிலையில் கிழக்கிற்கான பியர் முகவர், கிழக்கில் பிடிக்கின்ற மீன்களுக்கான மொத்த முகவர், சீனி மொத்த முகவர் ஆகிய மூன்றும் மேற்குறிப்பிட்டுள்ள நபருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் கருணாவின் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த இளைஞர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவை தமது கைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் தம்முடன் இருந்து மரணித்துப் போன தமது சகாக்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் நல்வாழ்விற்கு உதவியிருக்க முடியும் என மிகவும் ஆத்திரமடைந்த பலர் இது தொடர்பாக கருணாவிடம் நேரடியாகவே வாதிட்டும் உள்ளனர்.

ஆனால் கருணாவின் இச்செயற்பாடுகளுக்கு கருணாவின் பின்னால் நிற்கும் மிகவும் குறுகிய சிந்தனை கொண்ட ஒருசிலர் துணைபோவதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கருணாவின் செயல்களுக்கு துணைபோவோர் தமது சுயலாபங்களுக்காக கருணாவின் அழிவையோ அன்றில் எம் தேசத்து மக்களின் துயரத்தையோ கண்டு கொள்ளாது கருணாவை தவறான பாதையில் பயணிக்க விட்டு தாமும் லாபம் அடைந்து கொள்கின்றனர்.

கருணாவின் இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக மக்கள் மத்தியில் கருணா யார்? கருணாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பங்கு என்ன? என்கின்ற கேள்விகள் எழுகின்றன. கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்பி எனும் பட்டத்தை தனதாக்கி கொண்டதற்காக கருணா தமிழ் மக்களின் பிரதிநிதி ஆகிவிடமுடியாது.

காரணம் கருணா இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. அவ்வாறு சந்தித்தாராக இருந்தால் மக்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது ஐனநாயக, மனிதாபிமான, அரசியல் பின்னணி, கல்வியறிவு, சமூகவேவை, நிர்வாகத்திறன் என்கின்ற அளவுமானிகளால் அளந்து அறிந்து கொள்ள முடியாத விடயம். ஆக தேர்தல் காலங்களில் அரச இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது. மக்கள் எவ்வாறு கருணாவின் ஆயுதத்திற்கு பயந்த நிலையில் காணப்படுகின்றார்கள், எத்தனைபேர் கருணாவிற்கு கள்ள வாக்கு திணிப்பதற்கு விசுவாசமாக இருக்கின்றார்கள் என்பதை வைத்தே அனுமானிக்க முடியும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் என்ன காரணத்திற்காக கருணாவிற்கு பதவிகளை வழங்கியுள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய தேவை கருணாவின் செயற்பாடுகளினூடாக எழுந்தள்ளது. காரணம் கருணா தனக்கு கிடைத்துள்ள பதவியானது தனது ஆயதப் போராட்டத் திறமைக்காக, அதாவது அரந்தலாவயில் பௌத்த பிக்குகளைக் கொன்றும், சரணடைந்த 600 மேற்பட்ட பொஸாரை நிராயுதபாணிகளாக்கி தர்மத்திற்கு அப்பால் கொலை செய்தும், முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டோரைக் கொன்றும், ஜெயசிக்குறு படைநகர்வின் போது ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை பலி கொடுத்து அதே எண்ணிக்கையான படைவீரர்களை கொன்றும் நிரந்தர அங்கவீனர்களாக்கியும் பிரபாகரனது கரத்தை பலப்படுத்தியதற்காக இப்பதவி வழங்கப்பட்டதா? அன்றில் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டதா? அவ்வாறு தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டிருந்தால் அது எந்த தமிழ் மக்களின் விருப்புடன் வழங்கப்பட்டதென்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

இக்கேள்வி இங்கு முன்வைக்கப்படுவதற்கான காரணம் யாதெனின், புலி மாஸ்ரர்களான ஜோர்ஜ், மனோ ஆகியோரை இலங்கை அரசு அரசியலினுள் உள்வாங்கப்போகின்றது எனவும், அவர்களுக்கு சிலவேளைகளில் வட மாகாண மக்களைப் பிரதிநிதிதுவப் படுத்துகின்ற ஏதாவது பதவிகள் வழங்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை பகிரங்கமாக மறுதலித்த புலிக்கேணல் கருணா ஜோர்ஜ், தயா மாஸ்ரர்கள் எந்தக்காலகட்டத்திலும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் அவர்களுக்கு எந்தப்பதவியும் கொடுக்கப்படலாகாது என ஊடகங்களுடாக தெரிவித்திருந்தார்.

அவரது இச்கூற்றானது, தமிழ் மக்களுக்கு கூறும் செய்தியாதெனில், மக்கள் என்னை தேர்தலில் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும் நான் இலங்கையில் நாடாத்திய பயங்கரவாத போருக்காக எனக்கு அமைச்சுப் பதவியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மஹிந்த அரசினால் வழங்கப்படும் அப்போது நான் உங்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆள்வேன் என்பதாகும்.

கருணாவிற்கும் கருணாவின் சகாக்களுக்கும் தமது பிளவினால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்தது என்ற ஓர் இறுமாப்பு உண்டு, ஆனால் அன்று இவர்கள் முகம்கொடுத்த இராணுவ நடவடிக்கைள் மற்றும் இராணுவத் தலைமைகள், அதன் வழிகாட்டிகளுக்கும், இன்றைய இராணுவ ஒழுங்கமைப்பிற்கும் அதன் தலைமைக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டென்பதையும் கருணா தரப்பினர் இன்றுள்ள இராணுவத் தலைமையை களத்தில் எதிர்கொண்டிருந்தால் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அதே கதி இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதே நேரம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கு கருணாவின் பிளவே காரணம் என்ற எண்ணம் பிற்போக்குத் தனமான தன்னம்பிக்கை இல்லாத சில பெரும்பாண்மையின அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகின்றது. இங்கு கருணாவின் பிளவு எனும் விடயத்தை நன்கு அவதானிக்க வேண்டும். கருணா எந்ந ஓர் காலகட்டத்திலும் பிரபாகரனை விட்டு வெளியேறுவதற்கும் தென்னிலங்கையுடன் கைகோர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கருணாவின் பதவி மோகமும் உள்மோசடி விவகாரங்களும் கருணாவின் உயிருக்கு ஆபத்தாக வந்தபோது இலங்கை அரசிடம் கருணா உயிர்பிச்சை பெற்றுக்கொண்டாரே தவிர இன்று சிலரால் கூறப்படுவது போல் அவராக விரும்பி வன்செயலை கைவிடவில்லை.

கருணா ஜெயசிக்குறு கட்டளைத் தளபதியாக இருந்தபோது, நீ இப்போரில் வெல்வாயானால் உனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவியைத் தருவேன் என பிரபாகரன் வாக்குறுதி அளித்திருந்தார். அப்பதவியை இலக்காக கொண்டு கிழக்கின் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து ஜெயசிக்குறுவை வென்ற கருணா தமிழீழ இராணுவத் தளபதி பதவிக்காக பிரபாகரனிடம் சென்ற போது அவருக்காக வெற்றுப் பேப்பர் காத்திருந்தது.
அங்கே பல சர்ச்சைகள் கிளம்பியது. கருணா கிழக்கு திருப்பினார். (அவையாவற்றையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விபரமாக வெளியிடக்காத்திருக்கின்றேன்)

கிழக்கு திரும்பிய கருணாவிற்கு வன்னி வந்து செல்லுமாறு பிரபாகரனிடம் இருந்து பல கட்டளைகள் வருகின்றது. ஆனால் உயிருக்கு பயத்தில் வன்னி செல்ல மறுத்த கருணாவிற்கு புலிக்கேணல் பதிவியையும் பிரபாகரனையும் விட நாட்டமில்லாமல் காடுகளுள் ஒழிந்திருந்து கொண்டு தனது தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதுகின்றார்.

அக்கடிதத்திலே பிரபாகரனை தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தலைவர் எனக்குறிப்பிட்டு, உங்களது சிறந்த வழிநடத்தலில் எமது ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையின் கீழ் என்னை கிழக்கு மாகாணத்தில் பொட்டு மற்றும் சிலரது தலையீடு இல்லாமல் சுயமாக செயற்பட்டு எமது இலட்சிய தாகமான தமிழீழப் போரை முன்னெடுத்துச் சென்று புலிகளின் தாகம் தமிழீழ தாயமாகிய தமிழீழத்தை அடைய அனுமதியுங்கள் என அனுமதி கோரியிருந்தார். அதற்கு பிரபாகரனிடமிருந்து பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண தளபதிகளைக் கூட்டிய கருணா தனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவி வழங்கப்படாமை நியாயமற்றது என அழுது புலம்பியதுடன் அவர்களை வன்னிக்கு சென்று பிரபாகரனுடன் பேசி ஒருவாறு தனது எண்ணங்களை தெரியப்படுத்தி கிழக்கில் சுயமாக செயற்படுவதற்கு அனுமதியை பெற்று வாருங்கள் என அனுப்பினார். வன்னி சென்ற கிழக்கின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கருணாவின் தமிழீழ இராணுவத் தளபதி மோகத்திற்கு ஆப்படிக்கப்பட்டது.

கருணாவினால் வலுக்கட்டாயமாக அவ்வியக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் யுவதிகள் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் இந் நிலைமைகளை அவதானித்ததும் இயக்கத்தை விட்டு ஓடினர். ஏஞ்சியிருந்த சிலரை கருணா தானக முன்வந்து உங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால் கருணாவின் அழைப்பை அவ்வியக்கத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குகனேசன், பிள்ளையான், பாரதி, வீரா, தவசீலன், மார்கன், மங்களன் என இடைநிலைப் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் ஏதோ ஓர் நிலைப்பாட்டில் கருணாவிற்கு உயிர்பிச்சை கொடுத்து கருணாவின் உயிரைக் காப்பாற்ற அயராது உழைத்தனர். ஆனால் இன்று அவர்களை எவ்வாறு முடித்துக்காட்டலாம் என்பதுதான் கருணாவின் முழுச் சிந்தனையாக இருப்பதை அங்கு நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் எடுத்துக்கூறுகின்றன:

ஏனவே கருணாவை மாபெரும் ஜனநாயக விரும்பியாக சித்தரிக்க முனையும் பெரும்பாண்மையினத்தவர்கள் சிலர் பிரபாகரன் கருணாவிற்கு கிழக்கில் தனியாக இயங்க அனுமதித்திருந்தால் கருணா எவ்வாறான ஜனநாயகவாதியாக இருந்திருப்பார் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏன் இன்றும் கூட வன்னியில் பிரபாகரனுடன் இருந்து சகல ஊடகங்களையும் அடக்கி ஆண்ட வரலாற்றுப் பழக்கம் கருணாவை விட்டுப்போகவில்லை.:

ஊடகங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன? இலங்கை அரசின் பத்திரிகைகள் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனச் செய்திகள் மற்றும் கொலைக்காட்சி செய்திகளை அரசின் பரப்புரை என மக்களுக்கு கூறிய புலிகள் இது கருணா அம்மானின் கட்டளை எவரும் இலங்கை அரசினால் ஒலி, ஒளி பரப்படும் செய்திகளை செவிமடுக்வோ அன்றில் அரச அச்சகத்தால் வெளியிடப்படும் பத்திரிகைகளை வாசிக்கவோ கூடாது எனவும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் நடுப்பகுதியில் மக்களை துன்புறுத்தியிருந்தனர்

அன்று மக்களின் ஊடக சுதந்திரத்திற்கு சாவு மணியடிதிருந்த கருணாவின் ஆட்கள் செய்திநேரங்களில் துவிச்சக்கர வண்டிகளில் பதுங்கித் திரிந்து, கருணாவின் கட்டளையை மீறி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகளை கேட்டோரை தாக்கியது, அவர்களது வானொலிகளை அபகரித்துச் சென்றது, அவ்வானொலிகளை அவ்விடத்திலேயே உடைத்தது போன்ற சம்பவங்களை ஒரு முறை மீட்டிப்பார்க்கின்றேன்.

நியாயமான கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது என்ற வக்கிர புத்தியை புலிகளுக்கு புகட்டிய ஆசான் கருணா என்பது இலகுவில் மறந்து விடக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் தற்போது தனது காழ்புணர்ச்சிகளை தீர்க்க, தமது அரசியலுக்கு எதிராக நிற்க கூடியவர்களை பழி தீர்ப்பதற்கு மஞ்சள் பத்திரிகை போன்ற சில இணையங்களை தனது சகாக்களினூடாக இயக்கி வருகின்றார்.

அவ்வாறான அவ் இணையங்களின் கூலித்தொளிலாளர்களில் சுவிஸில் உள்ள ஒருவரை கருணா எனக்கு ஒருமுறை அறிமுகம் செய்து வைத்தார். கருணா அவ்வாறு அறிமுகம் செய்த சில நாட்களில் அவ் இணையங்களில் மட்டு மேயர் சிவகீதா தொடர்பாக மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்த விடயங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அவ்விணையத்தை நடாத்துகின்ற கருணாவினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைதானா? என வினவினேன். ஆம் என்ற பதில் வந்தது. அவ்வாறு அது உண்மையாயினும் அங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வார்த்தை பிரயோகங்கள் ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வீர்களா? என வினவினேன். நான் அதை உணர்கின்றேன் ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியாது இது எங்கள் கருணா அம்மானின் உத்தரவு அவர் சொல்வதை நான் செய்யவேண்டும் எனக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

கருணாவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன் மேயர் சிவகீதா தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியில் உண்மைகள் உண்டா என கருணாவை கேட்டேன். ஆம் அது உண்மைதான் நான்தான் அவ்விடயத்தை வெளிக்கொண்டுவருமாறு உத்தரவு வழங்கினேன் என்றார். ஆனால் அதன் வார்த்தை பிரயோகங்கள் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றதே என்றேன். மறு முனையில் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

இவ்வாறே கருணா ஊடகங்களை அடக்கியும் தமது தேவைகளுக்காக பொய்பிரச்சாரங்களைச் செய்தும் வந்துள்ளார். அனால் மஹிந்த அரசுடனும் இணைந்து கொண்டு அதே நடவடிக்கையாக சுதந்திர ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கருணாவை ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள மாமனிதர் எனக் குறிப்பிடுவோரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வியாகும்.

பிரபாகரனிடம் இருக்கும்போது தனக்கு வேண்டப்படாதவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்த பழக்கதோசம் கருணாவை விட்டுச் சென்றதாக தெரியவில்லை. இலங்கை அரசுடன் இணைந்துள்ள கருணா தற்போது தனக்கு வேண்டாத தமிழர்களை புலிகள் எனவும், சிங்கள மற்றும் முஸ்லிம்களை இந்திய றோ, பிறநாட்டு உளவுத்துறை ஏஜென்டுக்கள் எனவும் காட்டிக்கொடுத்து அரசினை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றார் என்பதுவும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

கருணாவின் ஆட்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட செய்தியறிந்த எனது நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டபோது, தவறு செய்கின்றவனை திருத்த முயற்சிக்கலாம் கருணா தவறு செய்யவில்லை இது அவரது பிறவிக்குணம் ஆகவே பிறவிக்குணத்தை உன்னால் மாற்றமுடியாது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.