குமார் குணரட்னம் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்!

download

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் குமார் குணரட்னம் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.

நாட்டின் வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குமார் குணரட்னம் இன்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் குமார் குணரட்னத்திற்கு கேகாலை நீதிமன்றம் ஓராண்டு கால சிறைத்தண்டனையும், 50000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

தண்டனைக் காலம் பூர்த்தியாகி பெரும்பாலும் இன்று விடுதலை செய்பய்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, விடுதலை செய்யப்படும் குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட மாட்டார் என அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னிலை சோசலிச கட்சி கோரி வருகின்றது.

முறையாக விண்ணப்பம் செய்தால் பிரஜாவுரிமை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் என உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.