பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஓர் விராட் கோஹ்லி

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் அசாம் (22 வயது) , இந்தியாவின் விராட் கோஹ்லி போல, பெரிய வீரராக வருவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அவுஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் பெர்த் நகரிலுள்ள வானொலி சேவை ஒன்றுக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

பாபர் அசாம் இளம் வயதிலேயே மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார். விராட் கோஹ்லி வயதில், பாபரும், அவரை போன்ற திறமைசாலியாக இருப்பார் என நினைக்கிறேன். இது கொஞ்சம் அதிகப்படியான புகழ்ச்சிதான். இருந்தாலும், பாபரிடம் அந்த அளவுக்கு திறமையுள்ளது என நினைக்கிறேன்.

அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து பின்தங்கியுள்ளது.

இந்த வேளை நாங்கள் நியூசிலாந்துடன் விளையாடிய அனுபவத்தை கொண்டு அவுஸ்ரேலியாவை வெல்ல முயற்சி செய்ய முடியும்.

நியூசிலாந்திற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவுஸ்ரேலியா வந்துள்ளதால், மைதான நிலைமையில் பெரிய வித்தியாசம் இருக்காது என்பது பாகிஸ்தானுக்கு பலமாகும் என தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 90 ஓட்டங்கள் எடுத்துக்கொண்டமையானது அவரது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களாகும்.

அதேநேரம், 13 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் பெற்றுள்ளார். இந்த மூன்றுமே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சேகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், இந்திய வீரர்களோடு தங்களது பேட்ஸ்மேன்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது.

சச்சின் டெண்டுல்கர் புகழ் பெற்ற காலத்தில், தங்கள் அணியில் அப்படி ஒரு வீரரை உருவாக்க முயன்றனர்.

இதற்காக இம்ரான் நசீர் என்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனை, தங்கள் அணியின் சச்சின் என புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.