இன அழிப்பு நடந்த முல்லைத்தீவிற்கு மகிந்த ராஜபக்ச விஐயம்! கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

478

 

ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மகிந்தராஐபக்ஸ இன்று காலை முல்லைத்தீவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். அவரது விஐயத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்த அதே வேளையில் அவரது கூட்டத்தில் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அரசஉத்தியோகத்தர்கள் முதல் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தெற்கில் இத் தேர்தல் பிரச்சாரம் வடக்கில் ஆரம்பிக்கப்படாதிருந்த போதிலும் இத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக மகிந்தராஐபக்ஸ இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஐயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாமூலை விளையாட்டு மைதானத்திற்கு உலங்குவானூர்தி மூலம் மாவட்டத்திற்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து வரவேற்றார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரிக்க வற்புறுத்தி முன்னாள் போராளிகள் கூட நிர்ப்பந்தித்து அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்  (18) வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் பிரதியமைச்சர் பிரபாகணேசன் வடக்கு மாகாண ஆளுநர் ஜிஏ சந்திரசிறீ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான அஸ்வர் மற்றும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள கலந்துகொண்டனர்.


வடமாகாணத்தை அபிவிருத்தியை மென்மேலும் தொடர்வதற்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  இந்தப் பகுதி முப்பது வருடகாலமாக இருளில் மூழ்கியிருந்த போது மக்களாகிய நீங்கள் பட்ட கஸ்ரங்களையும் துன்பங்களையும் நான் நன்கறிவேன்.

அப்போது, உங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றியோ வாழ்க்கை பற்றியோ யோசிக்க முடியாத நிலையிலிருந்தது.
தற்போது பயமில்லாத சந்தேகமில்லாத நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். எனவே உங்களுக்கான வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

இதேவேளை வடக்கு மாகாண சபைத் தேர்தலை 27 ஆண்டுக்குப் பின்னர் நடாத்தியிருந்தோம். இந்தப் பகுதியின் அபிவிருத்தியை நாம் நன்கு திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றோம்.

வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள, மின்சார வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து சுவார்ணமயமான காலமாக உருவாக்கித் தந்துள்ளோம்.

அரச உத்தியோகத்தர்கள் தொகையை சுமார் 15 இலட்சமாக அதிகரித்தது மட்டுமன்றி அவர்கள் தமது கடமைகளை அச்சமின்றியும் பயமின்றியும் மேற்கொண்டு வறிய மக்களின் கண்ணீரை துடைக்கும் வகையிலான திட்டங்களையும் முன்னெடுத்துள்ளொம்.

நான் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பினை பெற்றுத் தரப்படுமெனத் தெரிவித்தேன்.

இன மத ரீதியாக பிரிவினையை எதிர்நோக்கினால் நாம் ஒருபோதும் முன்னேற முடியாது. அதுமட்டுமன்றி நாட்டை பின்நோக்கி கொண்டு செல்வதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள்.

ஈராக், பலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் பிரிவினைவாதத்தால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நீங்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதுடன் மீண்டும் இருண்டயுகத்திற்கும் இடம்கொடுக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நாட்டில் வாழுகின்ற எல்லா இனமக்களையும் பாதுகாக்கின்ற உரிமை என்னிடமே இருக்கின்றது என்பதுடன் எதிர்கால சமுதாயத்திற்கு வளமான நாட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்நாட்டில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை நீங்கள் காணமுடியும் அதுமட்டுமன்றி இவ்வாறான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மென்மேலும் முன்னெடுத்து முன்னேற்றம் காணமுடியும்.
அதுமட்டுன்றி கல்வி, சுகாதாரம், நஷடஈடு, புனர்வாழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்களுடன் தங்கத்தையும் மீளளிப்பு செய்துள்ளோம்.

இந்நிலையில் யாழ்.தேவி புகையிரதத்தை மாங்குளத்திலும் நிறுத்துவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இனவாதம் பேசிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டுவரும் நிலையில் நாம் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

30 வருட காலம் இடம்பெற்ற யுத்த அழிவுகளிலிருந்து தற்போது அபிவிருத்திகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னெடுத்துள்ளோம். எதிர்காலத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக மேலும் முன்னோக்கிச் செலவோம் என்றும் தெரிவித்தார்.

பிரசார கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 25 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வெற்றிலை வழங்கி தமது வாழ்த்துக்களை தெரிவித்த அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதகாவும் தெரிவித்துக் கொண்டனர்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்து இருந்த அதேவேளை ஜனாதிபதிக்கு தமது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டனர்.



    

 

SHARE