வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று (17.10.2014) புளியங்குளம் இந்துக்கல்லூரியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வியாழன் அன்று இச்சேவையை செய்வது நல்லது. அதற்கு நானும் ஒத்துழைப்பு வழங்குகின்றேன் எனக் கூறிய அரச அதிபர் பணியாளர்களுக்கு நடமாடும் சேவையில் கலந்துகொள்ளக்கூடாது என தனது நரி வேலையைச் செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தினப்புயல் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், இது வடமாகாணசபையினால் மக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட நடமாடும் சேவை. அனைத்து திணைக்களங்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றபடியால் நீண்டதூரம் சென்று மக்களால் நடமாடும் சேவையால் உள்ள பயன்களை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதனால் இவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொதுமக்கள் அடையாள அட்டை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், காணி உரிமைப்பத்திரங்கள் போன்ற பல ஆவணங்களை இழந்துள்ள நிலையில் அவற்றினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் எங்களை நோக்கி வருவதனை விட நாங்கள் மக்களிடம் சென்று சேவையினை செய்வதே சிறந்தது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த நடமாடும் சேவையினை ஒழுங்கு செய்திருந்தோம். எந்த அரச திணைக்களங்களாகவிருந்தாலும் அவர்கள் மக்களுக்காக தங்களது சேவைகளைச் செய்யவேண்டும். இதில் அரசியலை அரச அதிபர் கலந்திருக்கக்கூடாது. எங்களுடைய அறிவித்தலில் கூட வவுனியா மாவட்டச் செயலகமும், வவுனியா மாவட்ட பிரதேச செயலகமும் இணைந்து செயற்படுவதாகத் தான் அறிவித்திருந்தோம். அரச அதிபர் அரசியல் சார்ந்தவர், சாராதவர் என்ற வகையில் அவர் இந்த நடமாடும் சேவையில் கலந்திருக்கவேண்டும்.
அவ்வாறு அவர் ஏனைய ஊழியர்களை இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றக்கூடாது என உத்தரவிட்டது தவறான செயலாகும். நேரடியாக இவர் மக்களுடைய சேவைகளை வழங்க தவறிவிட்டார். காலப்போக்கில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாகவிருந்தால் அது தமிழ், சிங்கள துவேசங்களை வவுனியா மாவட்டத்தில் உருவாக்கும். மக்கள் சேவையாகவிருப்பதனால் அரச அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை மக்கள் மேற்கொண்டாலும் அது ஆட்சேபனையில்லை. பொதுசேவையில் பணிபுரியும் வவுனியா அரச அதிபர்; மக்கள் நலன் கருதி பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றுவது எதிர்காலத்தில் அவரினுடைய பதவிக்கு சிறந்தது.