பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சபாநாயகருக்கு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பங்காளிகளாக 7 கட்சிகள் உள்ளன.
இந்தக் கட்சிகளின் தலைவர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, விமல் வீரவன்ஸ, டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினர்.
இதன்போது முன்னைய ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தார். ஜனாதிபதியால் பிரதமரைப் போல எதிர்க்கட்சித் தலைவரையும் அவரால் நியமிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பிலும் சபாநாயகருக்கு குணவர்த்தன எம்.பி. முறைப்பாடு செய்தார். மேலும் கடந்த காலத்தில் அமைந்த சகல அரசாங்கங்களும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கவில்லை என்றும் இதன்போது கூறினார்.