மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்தினார் மஹிந்த

384

 

jaffna_people_003வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் மக்களின் காணிகளை கொள்ளையடித்ததாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்ட, மஹிந்த ரிசாத் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க வீடின்றி, காணியின்றி அலைய பல ஏக்கர் காணிகளை ஒருசிலர் கையகப்படுத்திக் கோடீஸ்வரர் ஆகியிருக்கின்றனர். அவர்களிடம் மக்களாகிய நீங்கள் தான் கேள்வி கேட்கவேண்டும்.
இப்பகுதியிலுள்ள ஓர் அமைச்சர் எங்களுடன் பத்து வருடங்களாக இருந்து விட்டு எம்மிடம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு இப்பொழுது மறுபக்கம் மாறிவிட்டார். நாங்கள் ஒரு அமைச்சரை முழு நாட்டுக்கும் பொதுவான அமைச்சராகவே நியமிக்கிறோம்.
அவர் எந்த மதத்துக்கும் இனத்துக்கும் குலத்துக்கும் தனிப்பட்டவராக இருக்க முடியாது. அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சராக இருந்தால் அவர் எல்லோரையும் ஒரே முகத்துடன் பார்க்க வேண்டும் இதுதான் அவருடைய கடமை. அவர் இனவாதத்தைத் தூண்டிவிட்டு, மதவாதத்தைத் தூண்டிவிட்டு சேவை செய்ய முடியாது.
உங்களுக்குத் தெரியும் இப்பகுதி எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் இருந்தாலும் இங்குள்ளவர்களில் சிலர் தங்களை அபிவிருத்தி செய்து கொண்டனர். இந்த பகுதி மக்களுக்கு காணி இல்லாது போனாலும் ஒரு சிலர் 400 அல்லது 500 ஏக்கர் காணிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எனவே நீங்கள்தான் இவ்வாறானவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் முஸ்லிம் மக்களைப் பார்த்து கேட்கின்றேன் உங்களுடைய பெறுமதியான வாக்குகளை எந்தவொரு முதலாளிக்கும் ஏலத்தில் விட்டுவிடாதீர்கள். எந்த இனத்தையும் இன்னொரு இனம் அடிமையாக்க முடியாது. இது எமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். அந்த வகையிலே நாம் எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டும் என மஹிந்த மேலும் தெரிவித்தார்.
SHARE