அவசரநிலை மே 11-ந் திகதியுடன் முடிவுக்கு வருகிறது

82

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

அந்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோய் பரவத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மார்ச் 13-ந் தேதி அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க தேசிய அவசர நிலையை முதன் முதலில் அறிவித்தார்.

அதன்பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதில் இருந்து அவசர நிலைகள் மீண்டும் மீண்டும் நீடிக்கப்பட்டன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டன. தற்போது அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனவே விரைவில் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே 11-ந்தேதியுடன் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார். இதுகுறித்து மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

தினமும் மக்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு எந்த தடையும் இல்லாமல் வேலைக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் திரும்பி உள்ளனர். இந்த உண்மையை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தொற்று நோய் முடிந்துவிட்டது என்றார்.

maalaimalar

SHARE