ஆப்கான் குண்டுவெடிப்பில் 10 மாணவர்கள் உயிரிழப்பு

93

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மதரசா பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் உள்ள அல் ஜிஹாத் மதரசா பள்ளியில் பிற்பகல் நடைபெற்ற தொழுகையின் போது குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி நகரவாசி ஒருவர் கூறியுள்ளார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

குண்டு வெடிப்பு தொடர்பாக தலிபான்களால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட வீடியோ ஒன்றில், சம்பவம் நடைபெற்ற இடம், குப்பைகள், காலணிகள் நிறைந்த ஒரு மண்டபம், இறந்த உடல்கள் மற்றும் தரையில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும், பின்னணியில் சைரன் ஒலிகள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தத் தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் தெரிவித்தார். எனினும் இந்த குண்டு வெடிப்பில்ல் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்த தாகவும் உள்ளூர் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

ஆப்கான் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அப்பாவிகளுக்கு எதிரான இந்த முட்டாள்தனமான தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு என கூறியுள்ளார்.

SHARE