ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம்  இலங்கை அரசு  தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை முன்மொழிய விரும்புகிறார்கள்.-இரணியன்

601

 

பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில்   தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என ஈழம் இ நியூசிற்கு  வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் தேக்கமடைந்திருக்கும் எமது போராட்டம் – அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாகச் செய்யப்பட வேண்டியவையாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

நீங்கள் திரும்பவும் பழைய கேள்விகளுக்கே திரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே வலியுறுத்த விரும்புகிறோம். முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.

 

இது சாதாரணமானதல்ல. ஒரு சமூகத்தை நிலம், இனம், மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பதுதான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது. எனவே மேற்படி ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது. எனவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் இவற்றை மையப்படுத்தியே இருக்க வேண்டும்.

உங்களுடைய மேற்படி செய்திகளை நாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டோம். இதன் தர்க்கம் எமக்குப் புரிகிறது. இருந்த போதிலும் பழைய கேள்விகளினூடாகவே மேற்படி தர்க்கம் குறித்த சில மேலதிக விளக்கங்களைப் பெற விரும்புகிறோம். தற்போதைய ஈழத்தமிழ் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முன்மொழிகிறார்கள். தனிமனிதர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாக அவை இருக்கின்றன. முரண்பாடுகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவை வரும்காலத்தில் எந்தப் புள்ளியிலும் சந்திக்கும் போல் தெரியவில்லை. புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இச் செயற்பாடுகள் தனி ஆவர்த்தனங்களாக சூழலுக்குப் பொருத்தமற்றவையாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக, ஒவ்வாமை செயற்திட்டங்களாக அவை இருக்கின்றன.

தமது செயற்பாடுகளை முதன்மைப்படுத்த இதன் சில பிரிவினர் மறு தரப்பு மீது காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறையாக வெளித்தள்ளவும் தொடங்கிவிட்டனர்.பரஸ்பரம் இது நடக்கிறது. அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று அது ஒரு மோசமான வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பேரழிவைச் சந்தித்து வாழ்விழந்து நடைப் பிணங்களாகியிருக்கும் எமது மக்கள் இவற்றைக் கண்டு மேலும் பீதியுற்றுருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்புற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே நாம் மேற்படி கேள்வியை முன்வைத்தோம்…

உங்களுடைய கேள்விகளையும் அதன் பின்னுள்ள அவலத்தையும் எம்மால் புரிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் அது நடந்தேறிய விதத்தையும் உன்னிப்பாக அவதானித்தவர்களாக எமக்கு அது குறித்து ஒரு வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு தந்த பதட்டமும் பீதியுமே எங்களை உங்கள் முன் பேச வைத்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தொடர்ச்சி எமது இனத்திற்குள் மேற்படி முரணாக வெடிக்கும், பல ஒவ்வாமைகளை உருவாக்கும் என்பதை நாம் முன்பே கண்டறிந்தோம். அதன் நடப்பு வரலாறுதான் உங்கள் கேள்விகளாக எங்கள் முன் கிடக்கிறது. எமது பதட்டத்தின் பீதியின் பின்புலமும் இதுதான்.

உளவியல் பின்புலத்தினூடாகவே மேற்படி கேள்விகளை அணுக வேண்டும். நாம் முள்ளிவாய்க்காலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறும் முதன்மைக் கூறுகளில் ஒன்றாக எமது உளவியலும் இருக்கிறது. அத்தோடு நாம் உடனடியாக மீளொழுங்கு செய்ய வேண்டிய விடயமாகவும் இது இருக்கிறது.

உண்மையிலேயே உடனடியாகச் செய்யப்பட வேண்டிய எமது ஒருமித்த செயற்பாடு என்பது சரணடைந்த போராளிகளை உடனடியாக விடுவிப்பதற்கு முயற்சிப்பதும் எமது விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து மரணித்தவர்கள் போக எஞ்சியுள்ள மாவீரர், போராளி குடும்பங்களை உளவியல் சிதைவிலிருந்து காப்பதும் அவர்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதுமே ஆகும்.

இந்தத் தொடர்ச்சி போரில் சிக்குண்ட வன்னி மக்கள் பின்பு முழு தாயக மக்கள் என்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரும் இது குறித்து அக்கறைப்படுவதாகவே தெரியவில்லை. மாறாக எல்லோரும் அரசியல் செய்யக் கிளம்பியிருக்கிறார்கள். இதை நாம் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இது முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்தித்து எஞ்சியுள்ளவர்களின் உளவியல் சிதைவின் அடையாளமாகவே நாங்கள் பார்க்கிறோம். இச் சிதைவே மேற்படி முரணாக எம்மைப் பிளவுபடுத்தியிருக்கிறது.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பல தரப்பினரதும் வன்முறையையும் அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல்களையும் நாம் பார்க்கிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு மேற்படி அரசியல் செய்யும் ஒவ்வொரு தரப்பும் தம்மளவில் தாம் செய்ய முற்பட்டிருக்கும் அரசியலே சரியானது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னொரு அழிவுக்குக் கொண்டே விட்டு விடுவார்கள் என்று நம்பவும் தொடங்கிவிட்டார்கள். சாத்தியம், பொருத்தப்பாடு, தர்க்கம், அறம் எதுவும் இவர்களை இயக்கவில்லை.

சிதைந்துபோன உளவியலே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை வேறு ஒரு மொழியில் கூறினால் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பேரழிவுடன் குருரமான முறையில் வீழத்தப்பட்ட எமது போராடத்தினது தோல்வியும் அவலமுமே இவர்களின் அரசியல் மையமாக இருக்கிறது. தலைவர் பிரபாகரன் மீதான விடுதலைப்புலிகள் மீதான சேறடிப்புக்களின் அவதூறுகளின் மையமாகவும் இந்த ஊனமுற்ற உளவியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊனமுற்ற உளவியலிலிருந்து முழுமையான அரசியல் பிறக்க முடியாது. இது சந்தாப்பபவாத, அடிபணிவு, அவல அரசியலின் ஒரு வடிவமாகவே இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு தாயகத்திலும் சரி புலத்திலும் சரி அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கும் எல்லோருமே விதிவிலக்கில்லாமல் இந்த வாய்ப்பாட்டிற்குள் பொருந்திப் போகிறார்கள். இந்த அரசியல் ஆரோக்கியமானதல்ல.

நாங்கள் தோற்கடிக்கப்பட்டது உண்மை. பெரும் அவலம் நிகழ்ந்ததும் உண்மை. விளைவாக மக்கள் போராட்டத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதும் உண்மை. அதற்காக இவற்றை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முடியாது. வரும்கால சந்ததிக்கு இந்த அவல அடிபணிவு அரசியலிலிருந்து எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

இது ஒரு வரலாற்றுத்தவறாக மாறிவிடும். வரும்காலத்தில் இன்று இந்த அவல அடிபணிவு அரசியலை கையெலெடுத்தவர்களின் வாரிசுகளே அவர்களை நோகவேண்டித்தான் ஏற்படும். “தம்மை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களவன் கதற கதற கொன்றான் என்பதற்காக எங்களை அடிமைகளாக இருக்கிற மாதிரி அரசியலமைப்பை மாத்திப்போட்டு போய்விட்டர்களோ” என்று அந்த சந்ததி கதறப்போவதும் விளைவாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பதும் ஒரு தொடர்ச்சியாக இருக்கப்போவதே யதார்த்தம். அடுத்த சந்ததிக்கு இதைக் கடத்துவது ஆபத்தானது.

அப்படியென்றால் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா?

இதற்கு பதிலளிப்பது கொஞ்சம் சிக்கலானது. மனம் திறந்து உண்மையைச் சொல்வதென்றால் கொஞ்ச நாளைக்குப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு சில வாரங்களிற்குள் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் விமர்சித்து எமது அடுத்த கட்ட அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளித்து புலிகள் அமைப்போடு வன்னியில் இணைந்து பணியாற்றிய ஒருவர் எழுதிய கட்டுரை என்ற குறிப்போடு தமிழக சிற்றிதழ் ஒன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதற்கு நாம் அப்போதே எமது கண்டனத்தை தெரிவித்திருந்தோம். அக்கட்டுரைக்கு நாம் அளித்த பதில்தான் இதற்கும் பதிலாக இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் எமது உரிமைப் போராட்டமும் எங்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்குகளை இக்காட்சிப் பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும். நாம் மேற்படி அரசியல் செய்பவர்கள் எல்லோரையும் விமர்சித்துவிட்டு நாமும் முள்ளிவாய்க்கால் படுகொலையிலிருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்வதாகத் தவறாகக் கருத வேண்டாம்.

நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டுமேயொழிய அதை நிரந்தரத் தோல்வியாகவும் நிரந்தர அவலமாகவும் கவனத்தில் கொண்டு அவல அடிபணிவு அரசியலை கையிலெடுக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். உணமையைச் சொல்வதென்றால் உடனடியாக நாம் அரசியல் செய்யக்கூடிய புறசுசூழலோ யதார்த்தமோ இல்லை.

உண்மையிலேயே கடந்தகால நிலைப்பாடுகள், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள், அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்துவிடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்த காலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது.

இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான, தெளிவான மறுவாசிப்பை எமக்குத் தரும். நாம் எல்லோருமே பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறோம். இந்த மனநிலையில் தெளிவான அரசியல் கட்டமைப்பை ஒன்றிணைந்து உருவாக்க முடியாது.

இந்த “உடனடி” நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக் கூடாது என்பதே நமது பெரும் கவலையாகவிருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இதை பலர் மறந்து பிதற்றுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரலாறு புலிகளின் தோல்வியாக என்றைக்கும் பதிவு செய்யாது.

இத் தோல்வியை தமிழர்களின் இராஜதந்திரத் தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும். எனவே எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உடனடியாக அரசியல் செய்யப் புறப்பட்டு நாம் கண்டது என்ன? பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுற்று அவதூறுகளையும் காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறைகளாக வெளித்தள்ளியதுதான் மிச்சம். இந்த அடிப்படையில்தான் அரசியலைச் சற்று ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்சினையில் கவனத்தைக் குவிக்குமாறு தொடர்ந்து கூறிவருகிறோம்.

ஒற்றை அணுகுமுறை இல்லாமல் பல பிரிவுகளாக அரசியல் செய்வது நல்லதுதான். இதுதான் பன்மைத்துவத்திற்கு வழி சமைக்கும். அடிப்படை ஜனநாயகத்திற்கு வழி கோலும். ஆனால் அது இங்கு அவதூறு வன்முறை அரசியலுக்குத்தான் வழி சமைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழர் வரலாற்றிலிருந்து என்றைக்கும் துடைத்தழிக்க முடியாதது. இதைக் கவனத்தில் கொண்டு வரையப்படும் அரசியல் வரைபடமே ஈழவிடுதலைக்கான வழியைக் காட்டும்.

மாற்றுக் கருத்துகளுக்குரிய ஒரு தெளிவான ஜனநாயகச் சூழல் ஈழ அரசியல் சூழலில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். புலிகளின் பின்னடைவை அடுத்து நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்து இதுதான். அதுவே முரண்பாடுகளற்ற ஒரு தெளிவான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழினத்தின் தீர்க்கமான அரசியல் தீர்வு இதன் வழியேதான் பிறப்பெடுக்கும் – சேறடிப்புகளினூடாகவும் அவதூறுகளினூடாகவும் அது என்றைக்கும் பிறப்பெடுக்க முடியாது.

தற்போதைய நிலையில் எம்மிடையே இருக்கும் பிளவுகளைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரிபோல்தான் தெரிகிறது. ஆனால் நாங்கள் காலம் வரட்டும் என்று மௌனமாக இருக்க எங்களை ஒரேயடியாக சிங்களம் துடைத்தழித்துவிடாதா?

எமது பதிலை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம். கால நீரோட்டம் எமக்கான அரசியலை அடையாளம் காட்டும். வரலாறு ஒரு போதும் ஓரிடத்தில் தேங்கி நின்று விடுவதில்லை. அப்படி ஒரு காலகட்டத்தை நாங்கள் இப்போது நெருங்கி விட்டோம் என்றே நம்புகிறோம். சிறீலங்காவின் அதிபர் தேர்தல் அறிவிப்பும் அதையொட்டி இனப்படுகொலையின் இரு சூத்திரதாரிகள் எதிர் வேட்பாளர்களாக மாறியிருப்பதும் முள்ளிவாய்க்காலிற்கு பி;ன்னான எமது அரசியலின் முக்கியமான கட்டம். இந்த இடத்தில் நாம் ஒரு அரசியலைச் செய்ய முடியும்.

புலிகளின் தோல்விக்கு எமது தரப்பிலேயே ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் முதன்மையானது புலிகள் மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அதன் நிமித்தமாக 2001 புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டும் என்றெல்லாம் வாய்க்கு வந்த வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. வீங்கிப் பெருத்த மூளைகளை வைத்து “பிரேதப் பரிசோதனை” அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் மேற்படி அதிமேதாவிகள்.

இதையெல்லாம் ஒரு வாதத்திற்கு சரி என்றே வைத்துக்கொள்வோம். மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளும், உலக அரசியல் வரைபடத்தைக் கிரமமாக உள்வாங்கிய அதிமேதவிகள் ஏன் சிறிலங்கா அதிபர் தேர்தலின் கனதியைப் புரிந்து கொள்ளவில்லை.

ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் செய்யும் இவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை முன்மொழிய விரும்புகிறார்கள். சந்தர்ப்பவாத, அடிபணிவு, அவல அரசியலில் ஒரு இனத்தையே முழுமையாகப் சிக்க வைத்து குழி தோண்டிப் புதைக்க விரும்புகிறார்கள். அத்துடன் பிரபாகரனை கொடுங்கோலனாக்கிச் “சாகடிப்பதற்குத்தான்” உலக ஒழுங்கிலிருந்து உள்ளுர் ஒழுங்கு வரை இழுக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.

சிலர் சொல்கிறார்கள் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி. வேறு சிலரோ மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று. இவை கூடப் பரவாயில்லை. வேறு சிலர் சொல்வதுதான் சினத்தை மூட்டுகிறது. நாம் எமது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த ஒரு தமிழ் வேட்பாளாரை நிறுத்த வேண்டும் என்று. இன்று உலகிலேயே உள்ள அயோக்கியத்தனமான சொல்லாடல் ஒன்றென்றால் “ஈழத்தமிழர் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்பதுதான். நாங்கள் ஒற்றுமையாக இருந்து புலிகளைக் காலைவாரியது காணும்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல் தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இப்போது பந்து எம்மிடம். நாம் ஒற்றுமையாக இருந்து அரசியல் ரீதியாக தேர்தலின் வழி -ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை எதிர்கொள்வதென்பது நம்மை நாமே ஏமாற்றுவதுபோலானது.

நாமும் இராஜதந்திரங்களின் அடிப்படையில் சாணக்கியத்தனங்களை பிரயோகிக்க வேண்யடியதுதான். எம்மை அழித்தவனுக்கு வாக்களிப்பதா என்ற வாதம் எல்லாம் இங்கு எடுபடாது. நாங்கள் வெளிப்படையாகவே சொல்கிறோம். சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மகிந்தவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு நாம் என்ன அரசியல் எல்லாம் செய்ய முடியுமோ செய்ய வேண்டியதுதான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஒருமித்த ஏகாதிபத்தியமாய் திரண்டிருந்த சிங்களம் இப்போது இரண்டாய் உடைந்திருக்கிறது. நாம் கனவில்கூட இப்படியொரு நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கவில்லை. இதை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மகிந்ததான் எமது முதன்மையான எதிரி. மகிந்த தமது பதவியை இழக்கும்போது எமக்கு கிடைக்கப்போகும் இராஜதந்திர அனுகூலங்கள் மிக முக்கியமானவை.

தற்போதையை அரசியல் நிலவரப்படி அதிபர் தேர்தலில் மகிந்தவிற்குப் பாதகமான முடிவுகள் கிடைக்குமாயின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான மகிந்தவும் அவரது சகோதரர்களும் சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் அல்லது அவர்களாகவே வெளியேறலாம் என்ற பலவகையான கருத்துக்கள் உலா வருகினறன. எது நடந்தாலும் நமக்கு அது ஆதாயம்தான். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு துணை நின்ற டக்ளஸ், கருணா போன்றவர்களும் சரத் பொன்சேகாவின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். இவாகள் இருவரில் குறிப்பாக கருணா நாட்டை விட்டு தப்பியோடலாம் அல்லது சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்றே ஆருடம் கூறப்படுகிறது. எதிரிகளை கொண்டே எதிரிகளை அழிக்கும் சூழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது.

எனவே சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம். ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களுக்கு ஒன்று புரியவேயில்லை. நாம் சிறீலங்கா என்ற தேசத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தமிழீழம் என்ற ஒரு நிலப்பரப்பை எமக்கானதாக வரையறுத்து தனி நாடு கேட்டுப் போராடியவர்கள். சிறீலங்கா என்ற தேசத்தின் அதிபர் தேர்தலில் நாம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவது எவ்வளவு அபத்தம். இது எமது நீண்ட கால போராட்டத்தை – அதன் நியாயத்தை நீர்த்துபோக செய்யும் முயற்சி.

நாம் இனி ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சிறீலங்கா என்ற தேசத்திற்குள் நாம் எமக்கான தனித்துவ அரசியலையும் செய்ய முடியாது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது பேசித் தீர்ப்போம் என்று சொல்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டது மாதிரியே தெரியவில்லை.

எமக்கு இருக்கிற ஒரே வழி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போர்க்குற்றங்களின் வழி நடந்தேறிய இனப்படுகொலைகள் என்பதையும் அது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் இந்த உலகுக்கு நிருபிப்பதுதான். உலகுக்கு அது தெரியாது என்றல்ல. அவர்கள் கண்முன்னால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தேறின. பிராந்திய – பூகோள அரசியலின் ஒரு விளைவும் மௌனமும் அது. இப்போது அதே பிராந்திய -பூகோள அரசியல் சிறீலங்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. நாம் இதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

எமது அடுத்த கட்ட அரசியல் என்பதே இந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் நாம் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவுவோமானால் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த எமது அரசியல் கனவு நிறைவேறும்.

முன்பே குறிப்பிட்டதைப் போல் உலகுக்கு இது தெரியாததல்ல ஆனால் தற்போது ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆதாரங்களை இந்த அதிபர் தேர்தலினூடாக இனப்படுகொலையின் சூத்திரதாரிகளே வழங்கத்தயாராகி வருகிறார்கள். நாம் அதற்கு வழி சமைத்து கொடுத்தால் மட்டும் போதுமானது. ஆயுதமும் தூக்கத் தேவையில்லை. மக்களிடம் நிதியும் திரட்டத் தேவையில்லை. இறுதி இலக்கை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது யாரும் உதவி செய்யத்தேவையில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

சரத் பொன்சேகா வெல்லும்போது அவரது நடவடிக்கைகள் இயல்பாகவே ஒரு இராணுவ தோற்றத்தைக் கொடுக்கும். அவர் பதவியைத் துறந்து தேர்தலின் அடிப்படையில் தெரிவு செய்யபப்ட்டாலும் உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். இந்த அடிப்படையே எமக்கு போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பான சார்பான விளைவுகளை உருவாக்கும். அவரே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பங்குதாரர்களில் ஒருவர் என்பது எமக்கு மேலதிக அனுகூலங்களைக் கொடுக்கும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது.

இப்போதே போதுமான அளவு ஆதாரங்களை சரத்பொன்சேகா வழங்கிவிட்டார். வரும் நாட்கள், தேர்தலின் தோல்வி மறுதரப்பிடமிருந்தும் பல உண்மைகளை வரவழைக்கும். நாம் அவற்றை சேகரித்து உலக அரங்கை நோக்கிக் கொண்டு நகாத்துவதில்தான் எமது எதிர்காலமே இருக்கிறது. ஆனால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக்கொண்டிருக்கிறோம். போதாதற்கு எமக்கு நாமே குழிபறிப்பதிலேயே காலத்தையும் கடந்து செல்கிறோம்.

நாம் முன்பே கூறியது போல் நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. “inner city press” இதை தூசி தட்டி கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கி விட்டது. “channel four” ஏற்கனவே வெளியான இனப்படுகொலை ஆதார ஒளிப்பிரதியை உண்மையானது என ஆதாரபூர்வமாக நிருபித்திருக்கிறது.

ஐநாவிற்கும் சிறீலங்கா அதிகாரிகளுக்குமிடையில் அறிக்கைப் போர் தொடங்கிவிட்டது. இது வரும் நாட்களில் விரிவாக்கம் பெறும். நாம் செய்ய வேண்டியது மீண்டும் மக்களை வீதியில் இறக்குவதும் அவர்களுக்கு “குண்டுசட்டி” அரசியல் செய்பவர்கள் உபத்திரவம் தராமல் இருப்பதுமாகும். மீதியை வரலாறு எழுதும்.

இதை தலைவர் பிரபாகரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிங்களம் வந்து சேர்ந்து விட்டது என்ற வரையறுக்கலாமா…..?

அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். புலிகளின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஈழச்சூழலில் புலிகளை ஆதரித்தவர்கள் பலர் இன்று அந்த தோல்விக்கு புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் காரணமாகக் காட்டும் அபத்தம் எல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஈழச்சூழலுக்கு வெளியில் உலக அளவில் ஆரோக்கியமான முறையில் புலிகளின் பின்னடைவு விரிவாக ஆராயப்படுகிறது. ஏனெனில் எதிர்ப்பு அரசியல் என்ற முறையில் உலகின் தனித்துவமான விடுதலை அமைப்பாக இருந்ததை ஏற்றக் கொள்ளும் இவ் ஆய்வுகள் பல விமர்சனங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரனது போராட்ட முறைகளையும் அது மாறிவரும் உலக ஒழுங்கின் பிரகாரம் எப்படி அழிவுற்றது என்றும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

மாறுதல் கால பயங்கரங்கள் (Horror of transition), துயர் சார் அரசியல் ( Politics of agony) தாள முடியாத நிகழ்வியல் (Unbearable reality) என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்களினூடாக முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் அழிக்கப்பட்டதை ஒரு கருத்தியல் அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்தபோதும் ஒரு மேன்மையான இடத்திலேயே வைத்து ஆராய்கிறது. திரும்பிப் போக முடியாத ஒரு நிலை என்று இதை வர்ணிக்கிறார்கள்.

இங்கு ஈழச்சூழலிருந்து விமர்சனம் செய்ய முற்படுபவர்கள் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். பிரபாகரன் நடத்தியது ஆயுதப்போராட்டம். அது கொல்லுதலையும் கொல்லப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டது. வெற்றியாயினும் தோல்வியாயினும் அங்கு மிஞ்சுவது அழிவுதான். உடலிலே குண்டுகளைக் கட்டிககொண்டு போய் சிதறுபவர்களின் உயிர்துறப்பில் நாம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போது தூற்றுபவர்கள் இதை ஏன் முன்னுணரவில்லை.

இவர்கள் சூரியத்தேவன், வரலாற்று நாயகன், நெசவாளி என்று பிரபாகரனுக்கு சூட்டாத நாமம் இல்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை பிரபாகரன் புகழ்பாடிய அவரது போராட்டத்தை ஏற்றுக்கொண்ட யாருக்குமே அவரை விமர்சிக்கிற தகுதியோ அருகதையோ கிடையாது. இன்று அதீத புகழ்பாடிய அவர்களே அவரை விமர்சிக்கவும் தலைப்படுகிறார்கள். இதை சந்தர்ப்பவாதம் என்றில்லாமல் வேறு எப்படி அழைப்பது?

பிரபாகரன் 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் போது பின்லேடன் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பார் என்று முன்னுணர முடியாது. அன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் சிங்கள இனவாத அரசை எதிர்ப்பதற்கு ஆயதப்போராட்டம்தான் அவருக்கு வசதியைக்கொடுத்தது.

காலத்திற்குக் காலம் மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப தமது செயற்திட்டங்களை மாற்றிக்கொண்டு வந்தார் என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அவர் சமாதானத்தை கடைப்பிடித்ததை பலர் மறந்து கதைக்கிறார்கள். அதுவே அவருக்கு புதைகுழியாகியதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதையெல்hம் அவர் ஒரளவிற்கு முன்னுணர்ந்துள்ளார் என்பதை தற்போது ஆராயும் போது புரிகிறது. தாம் ஒரு மரபுவழி இராணுவமாக இனி நிலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்தவாராகவே அவர் பின்வாங்கியிருக்கிறார். அந்த புரிதலினூடாகவே அவர் ஒரு அரசியலை முள்ளிவாய்க்காலில் வைத்து செய்திருக்கிறார் என்று புரிகிறது. அது என்னவென்பதை காலம்தான் நமக்கு உணர்த்தும்.

இன்றைய சிங்களத்தின் உடைவு அதை லேசாகக் கோடிட்டுக்காட்டுகிறது. ஒரு வாதத்திற்கு புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து முழு தமிழீழ நிலப்பரப்பையும் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போரின்போது கூட முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்டதற்கும் அதிகளவிலான பொதுமக்களையும் போராளிகளையும் இழந்தே நாம் அதை அடையவேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் ஒரு அந்நிய இராணுவத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அல்லது அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்காது. மீண்டும் ஒரு போருக்கு நாம் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.

SHARE