இனப்படுகொலை தொடர்பில் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றா விட்டாலும், அவரின் வரு கையை நாம் சாதகமாகப் பார்க்கவேண்டும் – எம்.பி.சிறிதரன்

309

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பாக, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞா னம் சிறிதரன் அவர்கள் தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்.

hqdefault

கேள்வி:- நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான விடயங்கள் ஆராயப்பட்டதா?

பதில் :- ஆக்கபூர்வமான விடயங்கள் அமையப்பெற்றதாக நான் கூறவில்லை. அவருடைய இலங்கை விஜயத்தை பாராட்டுகின்றேன். ஒரு உலகத்தலைவர் யாழ் மக்களை பார்வையிட்டதன் ஊடாக இன்று அவரது கவனம் எவ்வாறிருக்கின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஈழத் தமிழர்களின் பிரச்சினை இந்தியாவின் பங்களிப்பில்லாது தீர்க்கப்படமுடியாது. ஆகவே நரேந்திரமோடியின் வருகை யானது சாதகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி:- பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது, இலங்கைத் தமிழர்களின் விவகாரம் குறித்து பேசப்படவில்லை. இவ்விடயம் மக்கள் மத்தியில் விசனத்திற்குள்ளாகியுள்ளது. இதனைப்பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் :- பாராளுமன்றத்தில் பேசினால் தீர்வு கிடைக்கும் என்று மாத்திரம் கூற முடியாது. பேசாமலே தந்திரோபாயமாக பிரச்சினைகளை கையாண்டு தீர்த்துவைப்பாராகவிருந்தால் அதனை நாம் பொறுமையாக கையாள்வது சிறந்தது.

கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நரேந்திரமோடி அவர்களைச் சந்தித்தபொழுது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா? அல்லது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன?

பதில் :- அது தொடர்பாக நான் அறியவில்லை. கோரிக்கைகளை முன்வைத்தார்களோ தெரியாது. இருப்பினும் இச்சந்திப்பானது இரகசிய மானமுறையில் இடம்பெற்றது. இது ஒரு இராஜதந்திர அணுகுமுறையாக இருக்கலாம்.

கேள்வி:- அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்த விடயம் பல்வேறு எதிர்ப்பலைகளை இந்தியாவில் தோற்றுவித்திருக்கின்றது. இது பற்றி?

பதில் :- இறைமையுள்ள ஒரு நாட்டின் தலைவர் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறு என்று கூறிவிட முடியாது. சிநேகபூர்வமான முறையில் சந்தித்திருக்கலாம். இது தொடர்பாக கருத்துக்கூறுவது பொருத்தமற்றது என நினைக்கின்றேன். தேர்தலில் தோல்வியுற்றமை தொடர்பில் அல்லது சிநேகபூர்வமான முறையில் உரையாடியிருக்கலாம்.

கேள்வி:- நரேந்திரமோடியின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் ஒரு சாதகமானது என கூறுகின்றீர்களா?

பதில் :- அவரின் வருகை சாதகத்தன்மையாக அமையவேண்டும் என்பதைத்தான் நாங்களும் நினைக்கின்றோம். அதனை நாம் வேறு கோணங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. எங்களது பிரச்சினையை தொடக்கியதும், நடத்தியதும் இந்தியாதான். எனவே இதற்கான தீர்வினை இந்தியாவே வழங்கவும் வேண்டும்.

கேள்வி:- இதுவரை காலமும் இந்திய அரசினால் இலங்கைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறதே?

பதில் :- பிரச்சினைகளை தீர்ப்பதற்கான காலங்களை வரையறையாகக் கூற முடியாது. அவர்கள் ஒரு இறைமையின் அடிப்படையில் சிறந்த தீர்வினை பெற்றுத்தரும் வரையிலும் பொறுமை யினை காப்பது அவசியம். நல்ல சூழ்நிலைகள் உருவாகும் வரையிலும் பிரச்சினைகள் இழுபறி நிலையில்தான் இருக்கும். 20,30 வருடங்களில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைத்ததாக வரலாறுகள் இல்லை. பலவருடங்களாக போராடியே வெற்றிகள் கிடைத்த வரலாறுகள் இருக்கின்றன.

கேள்வி:- இராமர் பாலம் அமைப்பது தொடர்பிலும் அவரது பாராளுமன்ற உரை அமைந்திருந்தது. இலங்கை வரலாறு தொடர்பிலும் பேசியிருந்தார். இலங்கையிலிருந்து விடைபெறும் போதும், மீண்டும் பாலம் அமைப்பது பற்றி கூறியிருந்தார். இதனை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில் :- இராமர் பாலம் அமைப்பது என்பது சாதாரணமான விடயமல்ல. அவரது கருத்தின்படி, அருகாமையில் உள்ள நாடுகள் என்ற வகையில் பாலம் அமைக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார். இராமர் பாலம் இலக்கிய ரீதியாக இராமாயண காலத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் வரவேற்கத்தக்கதான விடயம்தான். காரணம் பொருளாதாரம், இலங்கைவாழ் இந்தியத் தமிழ் மக்களும் இலகுவாக சென்றுவருவதற்கு சிறந்த தீர்வாக அமை யும். பாலம் அமைத்தால் சிங்கள மக்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமாக அமை யும் என நினைக்கின்றேன்.

கேள்வி:- அவரது உரையின் தொடர்ச்சியில், சிங்கள தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும் என்ற கருத்தானது சர்ச்சையினை தோற்றுவித்திருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக…?

பதில் :- தமிழர்களும், சிங்களவர்களும் பிரிந்திருங்கள் என்று ஒரு நாட்டின் தலை வர் பேசமுடியாது. உதாரணமாக ஒரு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டால் இருவரும் ஒற்றுமையாக வாழுங்கள் என்று தான் கூறுவார்கள். அது போலவே இவரின் இந்த கருத்தும் அமைந்துள்ளது. முடியும் வரையும் ஒற்றுமையுடன் செயற்படுங்கள் என்று தான் உலகத்தலைவர்கள் கூற முடியும். ஒரு இறைமை கொண்ட நாடு என்ற வகையில் பாராளுமன்றத்தில் வைத்து சிங்களவர்கள், தமிழர்கள் வேறு என்று கூறமுடியாது. அவ்வாறு பிரிவிணையாக கூறினால் அவரின் பேச்சினை உலக நாடுகள் அங்கீகரிக்க முடியாது. பிராந்திய வல்லாதிக்க ரீதியிலும் நகர்வுகள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருப்பதன் கார ணமாக ஒற்றுமையாக இருங்கள் என அவர் கூறியதை சிறந்த விடயம் என்றுதான் நான் கருதுகிறேன்.

கேள்வி:- மோடியின் வருகையின் மூலம் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

பதில் :- என்னைப்பொறுத்தவரையில் 13ம் திருத்தச்சட்டத்தில் நிறைவேற்றுவதற்கு ஒன்றுமே இல்லை. 13ம் திருத்தச்சட்டத்தில் ஒன்றுமே இல்லை என்றும் அதற்கப்பால் சென்று ஒரு சமஷ்டி பற்றி நாம் தெளிவாக ஆராயவேண்டும் என்று எமது வடக்கு முதலமைச்சர் தெளிவாக கூறியிருந்தார்.

கேள்வி:- எனினும் 13ம் திருத்தச்சட்டத்தினைப்பற்றி இந்தியா வலியுறுத்தியதற்கான காரணம் என்ன?

பதில் :- 13ம் திருத்தச்சட்டத்தில் காணப்படும் அதிகாரங்கள் பின்னர் 17,18 மூலமாக தீர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவற்றினை நடைமுறைப்படுத்தினால் தற்காலிகமானதொரு தீர்வு கிடைக்கும் எனக் கருதினார்கள். 17,18இலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை 13இற்குள் கொண்டுவரவேண்டும். ஆகவே அது சாத்தியப்படும். ஆகவே தான் அதனை அவர்கள் இறுக்கிப்பிடிக்கின்றார்கள்.

கேள்வி:- நரேந்திரமோடி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள முன்னர், முப்படை பாதுகாப்புக்கள் இந்திய அரசினால் வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் :- ஏற்கனவே துப்பாக்கியால் சுடப்பட்டதென்று மீனவன் என்ற படத்தில் கூறப்பட்டதைப்போன்று, அமைதிப்படைக்கு நடந்தபிரச்சினை இருக்கின்றது. ராஜீவ்காந்தி வருகை தந்தபொழுது அவரை தாக்கிய சம்பவங்கள் இருக்கின்றது. இது உலக வரலாற்றில் ஒரு அணி நடையின்போது ஏற்பட்ட ஒரு அவமானமாக இருக்கின்றது. அந்த சம்பவத்தை இதுவரை அவர்கள் மறக்கவில்லை. இலங்கையில் பாரிய யுத்தம் நடைபெற்றுமுடிந்த நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று இந்தியா பயந்திருக்கின்றது. அவர் உலக வல்லரசுகளின் தலைவர். ஆகவே அவர் தனது பாதுகாப்பினை பலப்படுத்துவது தவறானதல்ல. இலங்கையில் இருக்கும் படைகளினா லேயே தனக்கு ஆபத்துவரலாம் என்ற காரணத்தினால் தனது பாதுகாப்பினை ஏற்பாடு செய்திருக்கலாம்.

உதாரணமாக குமாரப்பா புலேந்திரன் உட்பட 12பேர் இந்தியாவிற்கு செல்ல ஆயத்தமாகவிருந்தபொழுது, அவ ரைக்கூட அரைமணிநேரம் சிறையில் அடைத்துவைத்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். இங்கும் விமானங்களும், ஹெலிகொப்டர்களும் வந்தன. அவர் நாட்டின் தலைவர். ஒரு வல்லரசு நாடு. ஏற்கனவே அந்நாட்டின் தலைவர் ராஜீவ்காந்திக்கு நடந்த சம்பவங்களைக் கொண்டு தங்களது பாதுகாப்பில் கவனம் செலுத்தியமை பிழையானதல்ல. நியா யமானது.

கேள்வி:- மோடியின் வருகையின் பொழுது மலையகம், கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யாதமை, அரசியல்வாதிகளின் மூலம் விமர்சனத்திற் குள்ளாகியிருந்தது. இதனை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில் :- மோடி அவர்கள் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லுதல் பற்றி அவரின் நிகழ்ச்சிநிரல் அமையவில்லை என நினைக்கின்றேன். தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவேண்டும் என்றால் அது அவருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். சம்பந்தன் அவர்கள் கிழக்குமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர். அவரை சந்தித்தால் கிழக்கு மாகாண ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் சந்தித்தமைக்கு சமனாக அமையும். அதேபோன்று மலையக வாழ் தலைவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கின்றார். ஆகவே அவர்களை சந்தித்ததும் ஒட்டுமொத்த மலையக தமிழர்களை சந்தித்ததற்கு சமனாகும். வேறுவிதமான அரசியல் நெருக்கடிகளும் அவருக்கு இருக்கின்றன. உடனடியாக சென்று சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் இருந்திருக்கவில்லை. தங்களது பாதுகாப்பு கருதி நீண்டகாலங்கள் இலங்கையில் இருப்பதற்கு அவர்கள் விரும்பவுமில்லை.

கேள்வி:- மோடியின் வருகையின் போது வர்த்தக வாணிபம், அணல்மின் நிலையம் போன்ற விடயங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் :- வர்த்தக வாணிபம் தொடர்பில், தமிழ் மக்களின் பிரதேசங்களில் தொழிற்சாலைகளை உருவாக்குதல் சிறந்த விடயம்தான். இதன்மூலம் மக்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு நாட்டுத் தலைவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அது ஒரு சந்;தைப்பொருளாதாரமாகவே கருதப்படுகின்றது. ஆயுதமுனை கொண்டோ அல்லது வேறு வழியிலோ எந்தவொரு நாடும் எழும்பமுடியாத நிலை யில் அடக்கிக்கொண்டே செல்கின்றனர். ஒருநாட்டின் அனுகூலங்கள் என்பது பொருளாதார ரீதியாக அணுகுதல் என்பதில் தங்கியுள்ளது. மனிதவள சந்தையை கொண்டிருக்கும் இந்தியா ஒரு வர்த்தக ரீதியாக கையெழுத்திடுவது பாரியதொரு விடயமல்ல. அதேபோன்று அவர்களது பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.

கேள்வி:- இனப்படுகொலை தொடர்பில் பாராளுமன்றில் பேசவில்லை என்பது பற்றியும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் கலந்துரையாடவில்லை என்ற விடயம் ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- மோடி இதுவரை கூறிய விடயங்களை மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்றும், பாராளுமன்றில் பாரதியின் பாடலையும் கூறியிருந்தார். இதுதொடர்பில் ஆய்வாளர் ஒருவர், சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம். சேதுவை நிலைநிறுத்தி வீதி அமைப்போம். பாலம் அமைப்போம் எனக்கூறியது தனியே சிங்கள மக்களுக்காக மாத்திரமல்ல. பாரதியின் பாடல் அதுவல்ல கருத்து. தமிழர்களுடைய இடங்களுக்கு வீதி அமைப்போம் என்றுதான் பொருள்படுகின்றது. இதனை அவர் பட்டும்படாமலும் கூறியிருக்கலாம். இவ்வாறு கூறியிருப்பதன் காரணம், தான் அடுத்த கட்டம் என்னசெய்யப்போகின்றேன் என்பதன் மறைபொருளாகவும் இருக்கலாம். இப்பொழுது உலக ஒழுங்கு இருக்கின்றது. என்னவென்றால் எதிராளியின் மனங்களை வென்றுதான் பிரச்சினைக்கான தீர்வுகளை காணவேண்டும். சீனாவிற்கு தலையைக்காட்டி இந்தியாவிற்கு வாலைக்காட்டும் இலங்கை அரசுடன், பிரச்சினைகளை கச்சிதமாக கையாளவேண்டிய தேவை யும் மோடிக்கு இருக்கின்றது. இவர் கூட அமெரிக்காவை வைத்து குஜராத்தில் தனது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகின்றார்.

அமெரிக்காவிற்கு விரும்பத்தக்கவராக மோடி அவர்கள் திகழ்கின்றார். இதனூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிறந்த முறையில் அணுகுவார் என நம்பவேண்டும். இந்தியாவை தவிர்த்து மேற்குலக நாடுகளை நாங்கள் பற்றிக்கொள்வோமாகவிருந்தால், இந் தியா இன்னும் பிரச்சினையை விரிவுபடுத்தி குழப்பிக்கொண்டே இருப்பார்கள். இந்தியாவை இறுகப்பிடித்து எமது பிரச்சினைக்குத் தீர்வினைக் காணவேண்டும்.

கேள்வி:- பௌத்த பிக்குகளையும், ஏனையவர்களையும் அவர் தலைவணங்கிய விடயம் அவரது பண்புகளை அல்லது அவமதிக்கத்தக்கது என அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றி…?

பதில் :- ஒரு நாட்டிற்குள் தலைவர் செல்லும்பொழுது அங்கிருக்கும் மதத்தலைவர்களை வணக்கம் செலுத்தும் பண்பு சிறந்த தலைவர்களின் பண்பாகும். அதனையே அவரும் செய்திருக்கின்றார். கடவுளுக்கு நிகராகப்பார்க்கப்படும் மதத்தலைவர்களுக்கு தனது வணக்கத்தினை செலுத்தியிருக்கின்றார். அதேபோன்று வடகிழக்கு கிறிஸ்தவர்கள் அவ்வாறானதொரு நிகழ்வினை ஏற்பாடுசெய்யவுமில்லை. அது வருந்தத்தக்கது. அதுமட்டுமல்ல. இங்கிருக்கும் இந்துமத அமைப்புக்கள் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்திருக்கலாம். அவர்களும் செய்யவில்லை. எங்களுடைய பகுதிகளில் நாம் இதுதொடர்பில் பல தவறுகளை செய்திருக்கிறோம். ஒரு இந்துமத வழிபாட்டுத்தலத்திற்குள் மோடி அவர்கள் வழங்கிய மரியாதையினை நான் பார்த்தேன். சிறந்த தலைமைத்துவம் என்பதை எடுத்துக்காட்டி சென்றிருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.

நேர்காணல் – மறவன்

SHARE