ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்கட்கிழமை “பசுமைத்தாயகம்” அமைப்பினால் உபகுழுக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இலங்கை மனித உரிமை தொடர்பான இந்த உபகுழுக் கூட்டம் மனித உரிமைப்பேரவை வளாகத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த உபகுழுக் கூட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தவுள்ளனர்.
அத்துடன் தென்னிலங்கையிலிருந்து கலந்துகொள்ளவுள்ள அமைப்புக்கள் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக அக்கருத்துக்களை முன்வைக்கவுள்ளன. ஜெனிவா நோக்கி பயணித்துள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர இக் கூட்டத்தில் பங்கேற்று இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணைக்கு எதிராக உரையாற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை “தமிழ் உலகம்” என்ற அமைப்பினால் நாளை 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“இலங்கையின் மனித உரிமை நிலைமை” என்ற தலைப்பில் மனித உரிமைப் பேர வையின் 15 ஆவது இலக்க அறையில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை இந்த உபகுழுக் கூட்டம் நடத்தப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது.