இலங்கை முஸ்லிம்களும் விடுதலைப்புலிகளும்

680

 

 

 

Hageem2

எழுபதுகளில் “ஈமானைக் கொன்றவன் நான்” என்று இலங்கை வானொலியில் கவிதை பாடிய நுஹ்மான், அன்று முஸ்லிம்கள் பலரால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார். அப்போது நுஹ்மான் ஒரு மாவோயிஸ்ட்; நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு காம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. இன்றைய 2012இன் நுஹ்மான், முஸ்லிம் தேசியவாதியாக-ஒற்றைப்படையான அகவயக் கருத்துகளை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தையே தருகிறது! அவர் சொன்னதிலும் சொல்லாமல் விட்டதிலுமுள்ள நுண்ணரசியல் ஆராயத்தக்கது.

1. ‘இஸ்லாமிய உயர்குழாத்தினர்’ “. . .தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ததால் சில கலாசார ஒற்றுமைகள் இருக்கலாம், ஆனால் தங்களுக்கும் தமிழர்களுக்கும் இனரீதியாக எந்த உறவும் இல்லை என்றனர்” என்று கூறும் நுஹ்மான், பல இடங்களில் தானும் அந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். தற்போதைய முஸ்லிம் தலைமைகளும் தமிழர்களுக்கும் தங்களுக்கும் இனரீதியில் எந்தத் தொடர்பும் இல்லையெனவே சொல்கின்றனர். இந்தக் கருத்தைப் பரிசீலிப்பதற்கு, வ. ஐ. ச. ஜெயபாலன் எழுதி, அலை வெளியீடாக 1983இல் வந்த, தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் நூலில் உள்ளதைத் தருகிறேன்:

“. . .இன்று முஸ்லிம்களது தாய்மொழி தமிழ் என்ற கருத்து பெரும்பாலும் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.” எனினும், இச்சர்ச்சைக்கு வழிவகுத்த அடிப்படைக் கருத்து, இன்னமும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இலங்கை முஸ்லிம்கள் அராபியர்களின் வழிவந்தவர்கள் என்பதே மேற்படி சர்ச்சைக்கு இடம்வைத்த கருத்தாகும்.

இலங்கையிலும் சரி, ஏனைய தென்னாசிய நாடுகளிலும் சரி வாழும் முஸ்லிம் மக்கள் தொடர்பாக ,வரலாற்றுரீதியான அராபியரது செல்வாக்கை யாரும் மறுத்தல் இயலாது. இதன் காரணமாக தென்னாசிய முஸ்லிம்கள் யாவரும் அராபியரின் வம்சாவளியினர் எனக் கருதப்படவில்லை.

இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தாங்கள் அராபியரின் வம்சாவளியினர் என்ற கருத்து பிரபலமாகியுள்ளது. இக்கருத்து முஸ்லிம் மக்களால் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி, தமிழ் என்ற கருத்துக்கு இடமளிக்கிறது. 1950களில் சுயபாஷைக் கல்வி மக்கள் மட்டத்தில் பரவலாகி வந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்களது தாய்மொழி (கல்வி மொழி ) தொடர்பான சர்ச்சைகளுக்கு, மேற்படி கருத்தும் அடிப்படைக் காரணமாயிற்று.

இத்தனைக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களிலோ புத்தளம் மாவட்டத்தின் வடக்குக் கரையோரங்களிலோ அல்லது ஏனைய சிங்கள மாநிலத்திலோ வாழும் முஸ்லிம் மக்கள், வரலாறு அறிந்த காலம் தொட்டு தமிழ் பேசும் மக்களாகவே உள்ளனர். இவர்கள் அரபு மக்களின் வம்சாவளியினராக இருந்திருப்பின், அரபு மொழியைப் பேசியிருப்பர்: அல்லது தமிழ்ப் பகுதிகளில் தமிழையும் சிங்களப் பகுதிகளில் சிங்களத்தையும் பேசும் மொழியாகச் சேர்த்துக்கொண்டிருப்பர். இவ்வண்ணமின்றி, இலங்கைத் தீவடங்கிலும் முஸ்லிம் மக்கள் தமிழ்மொழியைப் பேசுவதை, ஒரு தற்செயலான அதிசயம்போல விளக்க முனைவதோ அல்லது தென்னிந்திய மார்க்க அறிஞர்கள் தொடர்பினால் தமிழ்த் தொடர்பு ஏற்பட்டது என்று குறிப்பிடுவதோ, போதியதும் விஞ்ஞானபூர்வமானதுமான விளக்கமாகாது.

இக்கருத்துப் பலம்பெறுவதில் பங்களிப்புச் செய்த முஸ்லிம் கல்விமான்கள் யாவரும், அரபி பாஷா எனப் புகழ்பெற்ற அஷ்மது ஒறாபி அல்மிஸ்ரி என்ற எகிப்திய விடுதலைப் போராளியின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாவர்.

எகிப்திய மன்னருக்கெதிராக இவர் தலைமைதாங்கிய 1882 ஆம் ஆண்டுக் கிளரச்சியின தோல்வி காரணமாக, 1883 ஜனவரி 11இல் எகிப்தில் இருந்து நாடுகடத்தப்பட்டுக் கொழும்பு வந்த அரபியரான இவர் , இலங்கை முஸ்லிம் தலைவர்களின் ‘வீர வரவேற்பைப்’ பெற்றார் .

முஸ்லிம் கல்விமானாகிய ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களது கூற்றுப்படி ‘கொழும்பில் அரபி பாஷா ஒரு கைதியாக வந்திறங்கியபோது இலங்கை முஸ்லிம்கள் அவருக்கு ராஜோபசார வரவேற்பளித்தனர். அன்று முதல் 1901ஆம் ஆண்டு இலங்கையைவிட்டுப் போகும்வரை, கொழும்பு முஸ்லிம் சமூகத்தினரிடையிலும், பின்னர் கண்டி முஸ்லிம் சமூகத்தினரிடையிலும் அவர் மதிப்புக்குரியவராகக் கணிக்கப்பட்டு வந்தார். காற்சட்டையோடு துருக்கித் தொப்பியணி வதை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இலங்கை முஸ்லிம்கள் இதனை இன்றும் பின்பற்றுகின்றனர்.’

இலங்கை முஸ்லிம்களிடையே நவீனக் கல்வி மரபு, கலாசார வளர்ச்சி சம்பந்தமாக முன்னின்றுழைத்தவரும், முஸ்லிம் பத்திரிகைத் துறையின் தந்தையுமாகிய எம். சி. சித்திலெப்பை அவர்களது முயற்சிகள் பலவற்றிலும் செல்வாக்குமிக்க உறுதுணையாகியவர், எகிப்தைச் சேர்ந்த அராபியரான இந்த ‘அரபி பாஷா’ இலங்கை முஸ்லிம் அறிவுலகத்தின் இத்தகைய தோற்றுவாயினுக்கும், இலங்கை முஸ்லிம்களை அராபியருடன் அவர்களது வம்சாவளியினராக இணைத்துப் பார்க்கும் கருத்துப் போக்கிற்குமிடையில், தொடர்புகள் உண்டு என்பது எனது கருத்து.

மேற்படி கருத்து வரலாற்றுரீதியாக முஸ்லிம் மக்கள் எய்தியிருக்கும் தனித்துவத்தையோ இனப்பிரிவு அடையாளத்தையோ நிராகரிக்கும் நோக்கத்துடன், இங்கு முன்வைக்கப்படவில்லை. இலங்கைத் தமிழரும் முஸ்லிம் மக்களும் மலையகத் தமிழரும் தமிழ் பேசும் மக்கள் என ஒருமைப்பட்டு வளர்ச்சி பெறுவது தொடர்பான சிக்கல்களை விடுவிப்பதே எனது நோக்கம்.

இங்கு நான் ஆராய்ச்சிக்கு முன்வைக்கும் கருத்து, இலங்கையின் அடிப்படை முஸ்லிம் மக்கள் தொகுதியினர் தென் இந்தியாவில் – குறிப்பாக நாகபட்டினம், அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை போன்ற பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த தமிழ்நாட்டு முஸ்லிம்களின் வம்சாவளியினர் என்ற கருத்தாகும்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவந்துள்ள பலமான அராபியச் செல்வாக்கை நான் மறுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அடிப்படைத் தொகுதி தமிழ்நாட்டு முஸ்லிம்கள் என்பதற்கு, இலங்கை முழுவதும் அவர்கள் தமிழ் பேசுவதையும், ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து மரணம் வரை பல்வேறு நிலைகளிலும், தமிழ் மக்களது கலாசாரத்தினதும் சடங்குகளதும் மிச்ச சொச்சங்கள், முஸ்லிம் மக்களிடையே மறைந்துசெல்லும் போக்கில் நிலவிவருவதையும், முக்கிய ஆதாரங்களாகக் கொள்கிறேன்.

பல்வேறு பகுதிகளில், தமிழர்களின் மத்தியில் நிலவும் சாதி அமைப்பின் சில மிச்சசொச்சங்கள் முஸ்லிம் மக்களிடையே காணப்பட்டு வந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் முக்குவரிடையிலும், முஸ்லிம் மக்களிடையிலும் தாய்வழி ‘வயிற்று வார்’ குடி அமைப்பு ( னீணீtக்ஷீவீ றீவீஸீவீணீரீமீ ) காணப்படுகிறது. இதில் ஆர்வம்தரும் ஒரு விடயம் ‘படையாண்ட குடி’ போன்ற சில குடிகள் கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களிடையிலும், முக்குவர் சமூகத்தைச் சேர்ந்த தமிழரிடையிலும் பொதுவாகக் காணப்படுவதாகும்.

புத்தளம், கற்பிட்டிப் பகுதிகளில் வாழும் சில முஸ்லிம்களை முக்குவ முஸ்லிம்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது.

தமிழரது சாதி அமைப்பின் மிச்ச சொச்சங்கள், சடங்குக் கலாசாரத்தின் மிச்ச சொச்சங்கள் என்பவற்றுடன், இலங்கை முழுவதும் தனித்த தொலைதூரச் சிங்களப் பகுதிகளில்கூட முஸ்லிம்கள், தமிழ் மொழி பேசுபவர்களாக இருப்பதையும் ஒப்பிட்டு நோக்கும் சமூகவியலாளன் ஒருவன், இலங்கை முஸ்லிம் மக்களது அடிப்படைச் சமூகத் தொகுதி, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் என்ற முடிவுக்கு வருதல் கூடும்.

மேலும் இவற்றுடன், பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களுடைய தென் இந்திய தொடர்புகள் பற்றிய தகவல்களையும், ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும்.

இலங்கையின் தென் பகுதியில் தனித்த முஸ்லிம் கிராமமான திக்குவல்லைக் கிராமத்திலேயே தமிழ்நாட்டு முஸ்லிம் கிராமமான கீழக்கரையின் செல்வாக்கு துல்லியமாக உள்ளதை, இங்கு உதாரணப்படுத்தலாம். (பக்.24-27)

தென்னிலங்கை சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிம் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வந்த “தமிழர்களுக்கும் எமக்கும் இனவழித் தொடர்பில்லை” என்பது இன்று, வடக்கு – கிழக்கு முஸ்லிம்களிடையிலும் பரவலாகிவிட்டது.

ஆயினும் முன்பு எத்தைகைய நிலை இருந்தது என்பதற்கு, பின்வரும் குறிப்பு ஓர் எடுத்துக்காட்டு.

07 .01 . 1955இல் யாழ்ப்பாண நகரப் பிதாவாகத் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிமான காதி எம். எம். சுல்தான், “நான் மதத்தில் முஸ்லிமாயிருப்பினும் இனத்தில் தமிழன்” என அறிக்கை (ஈழகேசரி , 09 . 01 . 1955) வெளியிட்டார்.

ooo

தமிழ் விடுதலை இயக்கங்களினால் – குறிப்பாக விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதை நுஹ்மான் விரிவாகக் குறிப்பிடுகிறார். அவை உண்மைதான்; அவை கண்டிக்கபட வேண்டியவையே. ஆனால் முஸ்லிம் தரப்பால் – ஆளும் கட்சி அரசியல்வாதிகள், முஸ்லிம் ஊர்க் காவல் படை, ஜிஹாத் இயக்கம், இராணுவம் அதிரடிப் படைகளிலிருந்த முஸ்லிம்கள், ஊர்களிலிருந்த முஸ்லிம் குண்டர்கள் போன்றவர்களால் ஏராளம் தமிழ் மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டதையும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதையும் சொல்லாமல் விட்டுவிடுகிறார்! நுஹ்மான் மட்டுமல்ல வேறு முஸ்லிம் களும் தமிழ்த் தேசியத்தை எதிர்க்கும் தமிழர் பலரும்கூட இவ்வாறுதான் நாடகம் ஆடுகின்றனர். முஸ்லிம்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் விபரங்களைக் காலச்சுவடு (ஏப்ரல் 2012) இதழில் அந்துவன்கீரன் எழுதிய கட்டுரையிலும் (பக்.24 ), சரிநிகர் பத்திரிகையில் நிராஜ் டேவிட் எழுதிய கட்டுரையிலும், ஜெயானந்தமூர்த்தி எழுதிய அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் என்ற நூலிலும் விரிவாகக் காணலாம்.

ooo

விடுதலைப் புலிகளின் மீது எல்லாக் குற்றங்களையும் சுமத்தும் நுஹ்மான், வரலாற்றில் அவர்களின் நேர்மறையான பங்களிப்பென ஒரு சிறு துளியையும் சொல்லவில்லை. இது ஆய்வறிவு நேர்மையாகுமா? அவரது நேர்காணலில் ஒருவகை ‘வக்கிரம்’ தெரிகிறது. நுஹ்மானின் ஒரு சகோதரன் புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்; அதனால் ஏற்பட்ட வன்மத்திலிருந்து அவர் இன்னும் விடுபடவில்லையென்பது தெரிகிறது!

இறுதியுத்தத்தின்போது, “அவர்கள்தாம் தங்களோடு மக்களையும் இழுத்துச் சென்றனர்” என்கிறார்; அதன் காரணமாகவே பெரும் அழிவு ஏற்பட்டதென்றும் சொல்கிறார். நுஹ்மானுக்கு ஆட்டிலறி எறிகணை, பல்குழல் பீரங்கி, 250 கிலோ குண்டுவீசும் சுப்பர்சொனிக் ரக ‘கிபிர்’ விமானங்கள் பற்றிய அனுபவமில்லை. ஏனென்றால் அவர் மத்திய மலை நாட்டில் கண்டியில் இருந்தார்; யுத்த வலயங்களில் இருக்கவில்லை. பத்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவிலிருந்து திடீரென வரும் ஆயிரக்கணக்கான எறிகணைகளிலிருந்து – கொடூர விமானக் குண்டுவீச்சுகளிலிருந்து உயிர்பிழைக்க யாரும் அவை வரும் திசைக்கு எதிர்ப்பக்கத்துக்கே ஓடுவர். புலிகளின் பகுதிகளில் இருந்த மக்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக அவ்வாறே தொடர்ந்து ஓடினர்; புலிகள் இழுத்துச் செல்லவேண்டிய அவசியமிருக்கவில்லை. புலிகள் செய்த தவறு என்றால் இறுதிக்காலங்களில் கட்டாய “ஆள்பிடிப்பில்” ஈடுபட்டதும், யுத்தத்தின் கொடுமை தாங்காமல் இராணுவப் பிரதேசங்களுக்கு செல்ல முயன்றபோது (இறுதிக் கட்டத்தில்) மக்களை அனுமதியாததும்தான். உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் நீண்டகாலமாய்த் தடைபடுத்தியிருந்த, தானே பிரகடனப்படுத்திய “பாதுகாப்பு வலயங்கள்” மீதும் குண்டுவீசி மக்களைப் பெருந்தொகையில் அழித்த, இறுதியில் ஒடுங்கிய பிரதேசத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதைத் தெரிந்துகொண்டே (புலிகள் அவர்களை மனிதக் கேடயமாக வைத்துள்ளார்கள் என பிரச்சாரமும் செய்தபடியே!) எரிகுண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் வேறு அழிவு ஆயுதங்களையும் மழையெனக் கொட்டி இனக்கொலை புரிந்த இலங்கை இனவெறி அரசை நுஹ்மான் கண்டுகொள்ளாமல், அவலங்களுக்கான பழியை புலிகள்மீது நுட்பமாக “இடம்மாற்றி”விடுகிறார்!

வடபகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது முக்கியமாக நுஹ்மானைப் பாதித்துள்ளது; ஏனெனில் பாதிக்கப்பட்டவரில் நுஹ்மானும் ஒருவர். புலிகள் இழைத்தது மாபெரும் தவறுதான். அது தந்திரோபாயத் தவறு என பின்னாளில் புலிகள் கவலையும் தெரிவித்து, முஸ்லிம் மக்களைத் தமது வாழ்விடங்களில் குடி ஏறுமாறும் அறிவித்தனர். இருபத்திரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, அந்த மக்களின் மீள் குடியேற்றத்தைத் தடுத்துவரும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் பற்றி நுஹ்மான் ஒன்றும் சொல்வதில்லை!

நுஹ்மானும் சேரனும் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட, ரெஜி சிறிவர்த்தனவின் சோவியத் யூனியனின் உடைவு என்ற நூலில் பின்வரும் பகுதி உள்ளது:

“போர்க்காலத்தில் ஸ்டாலின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த பெருமளவு மக்களை நாடுகடத்தினார், கிரிமிய தாத்தாரியர்கள், வொல்கா ஜெர்மானியர்கள், செக் இனத்தவர்கள், மஸ்கிட்டிய துருக்கியர்கள் போன்றோரும் வேறு பலரும் பலாத்காரமாக அவர்களது வீடுகளைவிட்டு அகற்றப்பட்டு மத்திய ஆசியாவில் குடியேற்றப்பட்டார்கள். ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களுடன் இவர்களில் சிலர் தொடர்புவைத்திருந்தார்கள் என்பதே இதற்கான காரணம். பின்வந்த சோவியத் அரசுகள் இந்த நடவடிக்கையின் மனிதாபிமானமற்ற தன்மையை ஒப்புக்கொண்டன. ஆயினும் நாடுகடத்தப்பட்ட இம்மக்கள் இன்றுவரை தமது பழைய இடங்களில் குடியமர்த்தப்படவில்லை.”(பக். 77)

ஒருகாலத்தில் நுஹ்மானின் வழிபாட்டுக்குரியவராக இருந்த, ஆனானப்பட்ட ஸ்டாலினே இப்படித் தவறு செய்துள்ளார் என்றால், “தெளிவான அரசியல் பார்வை இல்லாத” புலிகளின் தவறுகளையும் நுஹ்மான் விளங்கிக்கொள்ளலாம்! சுத்தமான புரட்சி என்று உலகில் எங்குமே இருக்கவில்லை! “விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா?” என்பது ஓர் அடிப்படைக் கேள்வி. இதற்கு, “விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளே! ஆனால் அவர்களின் அமைப்பில் பயங்கரவாதக் கூறுகள் சில இருந்தன” எனச் சிங்கள மார்க்சியரான விக்கிரமபாகு கருணாரத்ன கூறிய கருத்து, விமர்சனரீதியில் பொருத்தமானதென நினைக்கிறேன்!

புலிகள்தாம் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் இனவெறிக்குண்டர்களாலும் நிகழ்த்தப்பட்டு வந்த இனச் சங்காரக் கொடுமைகளுக்குச் சவாலாக இருந்தவர்கள் ; தமிழ் மக்களைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்தவர்கள். புலிகளின் காலத்தில் பேணப்பட்ட இராணுவப் பலச் சமநிலைமை தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது. தமிழ்த் தேசிய இன (நுஹ்மான் தவறாக “சிறுபான்மை இனம்” என்றே கையாள்கிறார்!) பிரச்சினையை வெளியுலகின் கவனத்தை ஈர்க்கச் செய்தவர்களும் அவர்களே! விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நிர்வாகக் கட்டமைப்புகளையும் செய்து இயங்கினார்கள். இலக்கியம் – புனைவுசாரா எழுத்துகள் – மொழிபெயர்ப்புகள் – திரைப்படம் என்பவற்றில் ‘தமிழ் உலகில்’ இதுவரை இல்லாத புதிய படைப்புகளை உருவாக்கினார்கள்! யுத்தச் சூழலிலும் தமிழ் மக்கள் இனறையைப் போலல்லாது சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். மக்கள் ஆதரவு புலிகளுக்கு இருந்தது; அவர்களின் ஆதரவு இல்லாமல் இருபத்தைந்து ஆண்டுகளாக சிறிலங்கா, இந்திய அரசாங்கங்கள் மற்றும் இவர்களுடன் சேர்ந்தியங்கிய தமிழ், முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் கூட்டுச் செயல்பாடுகளுக்கு எதிராக நின்று பிடித்திருக்கமுடியாது என்பது பொது அறிவு.

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக் கடலில் விழுந்துவிட்டனர்” என்கிறார் நுஹ்மான். உண்மையில், புலிகளின் வீழ்ச்சியே தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்குக் காரணம். புலிகள் வீழ்ந்திருக்காவிட்டால் தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கும் கொடிய – பரிதாபமான – அவலச் சூழல் இல்லாமலாகியிருக்கும். இன்று மக்கள் உணர்கிறார்கள்; ‘உப்புச் சமைந்தால் தெரியும் உப்பின் அருமை’ என்பதை. இவை பற்றியும் நுஹ்மான் விபரம் தருவதில்லை. இன்று வடக்கில் அதிலும் குறிப்பாக வன்னியில் இராணுவ ஆட்சியே நிலவுகிறது; சிவில் நிர்வாகம் என்பது பொய்மையே. எல்லா விடயங்களிலும் இராணுவத் தலையீடு உள்ளது; மக்களுக்குச் சுதந்திரமில்லை. இராணுவப் புலனாய்வு எல்லா இடங்களிலும் பரவித் தொல்லை தருகிறது; ஜோர்ஜ் ஓர்வெலின் 1984 நாவலில் வரும் பெரியண்ணன் தனது நுண்கமெராவால் எங்கும் கண்காணித்தபடியுள்ள நிலைமை! நிலங்களை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மக்கள் தமது நிலங்களில் குடியேறப் பல இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் என்ற பெயரில் வெற்று நிலங்களில் – காடுகளில் – எந்த அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படாமல் ஆயிரக்கணக்கானோர் விடப்பட்டுள்ளனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒருமுறை தமிழ் மக்களிடம் சொன்னார், “உங்களுக்கு வீடுகட்டுவதற்காக வெளிநாடுகளில் கடன்பெற்று சிங்களவர்களைக் கடனாளியாக்க முடியாது; நீங்களே விவசாயம் செய்து உங்கள் வீட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று. நிலம் இப்படியென்றால் கடலும் அதன் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. பல இடங்களில் தமிழ் மீனவர்கள் தொழில்செய்யப் படையினர் தடை விதிக்கின்றனர்; ஆனால் வெளிமாவட்டச் சிங்களவர்கள் குடும்பத்தினருடன் தமிழர் நிலங்களில் குடியேறிக் கடற்றொழில்செய்ய அனுமதிக்கின்றனர். தமிழ் மக்கள் எதிர்க் குரல் கொடுக்க முடியாத அளவிற்கு, தமிழர் நிலமெங்கும் பல்லாயிரக்கணக்கில் பரவியுள்ள சிங்கள இராணுவமும் கடற்படையும் ஆயுதங்களுடன் வந்து தமிழ் மக்களை அச்சத்துக்குள் ஆழ்த்திவைத்துள்ளன.

1987ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய இலங்கை உடன்படிக்கையிலுள்ள தீர்வை புலிகள் ஏற்றுக்கொள்ளாதமையைச் சுட்டி, புலிகள் ‘அரசியல் தெளிவில்லாதவர்கள்’ என்கிறார் நுஹ்மான். அத்தீர்வில் முக்கியமானது மாகாணசபை. இந்த மாகாணசபை “ஒரு சிற்றூழியரை நியமிக்கும் அதிகாரத்தைக்கூடக் கொண்டிருக்கவில்லை”யென, முன்னாள் மாகாணசபைத் தலைவர்களான வரதராஜப்பெருமாளும், பிள்ளையானும் கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து நுஹ்மானின் ‘அரசியல் தெளிவு’ தெரிகிறதெனக் கொள்ளலாமா!!

இறுதியாக, நுஹ்மானுக்கும் ஏனைய தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களுக்கும் பணிவாக ஒன்றைச் சொல்லலாம்: தமிழ் மக்களுக்கு இனியும் தமிழீழம் தேவையா, புலிகளைத் தமிழ் மக்கள் (அவர்களின் தவறுகளுடனும்!) அங்கீகரிக்கிறார்களா என்பதைக் கணிப்பதற்கு, முறையான சர்வதேச அமைப்பொன்றின் மூலம் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திப் பார்க்கட்டும்!

 

SHARE