உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரச அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் வேட்பாளர்கள் இனங்காணப்படவேண்டும்

129
அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் கட்டுப்பணத்தினையும் செலுத்தியுள்ளன. அதேநேரம் உள்ளுராட்சிமன்றங்கள் சட்ட ரீதியாகக் கலைக்கப்பட்ட வர்த்தமானி இன்னமும் (28.01.2023) வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் கட்சிகள் ஒவ்வொன்றும் முட்டிமோதிக்கொண்டு மாகாண சபைத் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் போன்று தமது செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.
இதில் சுயேட்சைகள் ஐம்பதிற்கும் மேல் போட்டியிடுகின்றன. குறிப்பாக சுயேட்சைகளின் நோக்கம் கட்சிகளை பலவீனப்படுத்துவதேயாகும். வடக்கு – கிழக்கில் மாத்திரம் 25 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா? இல்லையா? என்பது மற்றொரு கேள்வி. இந்தத் தேர்தல் கட்சிகளிடையே இருக்கக்கூடிய அடிப்படைத் தெரிவுகள் சரியாக அமையப்பெறுகிறதா என்கின்ற களப்பரீட்சையாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட சிறிய சிறியப் பிணக்குகள் இன்று அதி தீவிரமாக நகர்த்ப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பலர் DTNA வில் அங்கம் வகிக்கும் நிலையில், தமிழரசுக்கட்சி எம்மோடு இணைய விரும்பினால் இணையலாம் என்கின்றனர். இக்கட்சிகளை பிளவுபடுத்துவதற்கு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களே சூத்திரதாரியாகச் செயற்பட்டதாக இவர்களால் கூறப்படுகின்றது. ஒற்றுமையே பலம் எனக்கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் ஒவ்வொன்றும் இன்று கருத்துமோதல்களால் பிளவடைந்திருக்கின்றன.
பிரித்தாளும் தந்திரோபாய நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செற்பட்டு வருகின்றார். யுத்தத்தினால் வெற்றிகள் கிடைப்பதில்லை அரசியல் ரீதியிலான காய்நகர்த்தல்களும் சமாந்தரமாக செல்லுமாகவிருந்தால் மட்டுமே வெற்றிகளைப் பெற முடியும். ஆயுதக்கட்சிகளை துரோகிகள் என்றும் மக்கள் மத்தியில் இருந்து பிரித்தாளும் ஒரு நடவடிக்கையில் தான் தமிழரசுக் கட்சி களமிறங்கிருக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த செயலாளர் இரா.சம்பந்தன் தொடக்கம் அல்பிரட் துரையப்பா, நீலன் திருச்செல்வம் என துரோகப் பட்டியில் நீள்கிறது. தமிழர் விடுதலைப் கூட்டணியின் 15க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் விடுதலைப்புலிகளால் சுடப்பட்டனர். எம்.ஏ.சுமந்திரனும் அண்மையில் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகவிருந்த நிலையில் இரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் துரோகிகள் என்பதை இனங்காட்டுவதைவிட்டுவிட்டு தமிழர் பிரதேசங்களை சிங்கள இனவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தமிழர்த்தரப்பு ஒன்றிணைந்து செயற்படவேண்டும். உதாரணமாக ஹிஸ்புல்லா அவர்கள் இன்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருக்கின்றார். இதனை நாம் புரிந்துகொண்டால், இந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் அனைத்து இடங்களையும் கைப்பற்றக்கூடிய சூழல் தமிழ்க் கட்சிகளுக்கு உருவாகும். அரச அடிவருடிகளாக செயற்படுவதை தமிழ்த் தரப்பின் பலர் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லையெனில் துரோகப் பட்டியலில் குறித்த அரசியல்வாதிகளும் வரிசைப்படுத்தப்படுவார்கள் என்பது உண்மை. – இரணியன்
SHARE