எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்க தயார் -முன்னாள் பிரதமர் மகிந்த

152

 

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்தது.

இதன் காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததுடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றது.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். மேலும், இந்த வன்முறையின் போது 10 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அத்துடன், ஏராளமான பேருந்துகளும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE