ஒரு இயக்கத்தை அழிப்பதாய் சொல்லி ஒரு இனத்தையே அழித்த யுத்தத்தை உரிமை கொண்டாடி, இரண்டு தடவைகள் தாங்கள் இலங்கை அதிபர் கதிரையே ஆக்கிரமித்திருந்தீர்கள்- அ.ஈழம் சேகுவேரா எழுதுவது!

425

 

இந்தப்பகிரங்க மடல் தங்களை வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கில் உள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு இங்கு என்ன வேலை? நீங்கள் நன்றே நலம் காண்பீர்கள் என்பது எனக்குத்தெரியும். யுத்தம் சுடுகாடு ஆக்கிய ஊர்களுக்குள் நின்றுகொண்டு இரத்தவாடையும் பிணவாடையும் சுமந்துவரும் காற்றை இப்போதும் என் மக்கள் சுவாசித்துக்கொண்டிருப்பதால், என் தேசம் சுமந்த யுத்த விழுப்புண்களிலிருந்து இப்போதும் ஊனம் ஒழுகிக்கொண்டிருப்பதால் என்னால் அமைதி காண முடியவில்லை. ஆதலால் நலம் விசாரிக்கும் பக்குவத்திலும் நானில்லை. நேரடியாகவே விடையத்துக்கு வருகிறேன்.
unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10)
தாங்கள் இன்னும் ஓரிரு நாள்களில் வவுனியாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக செல்ல இருப்பதாக அறிகிறேன். 2010ம் வருடம் “மஹிந்த சிந்தனை” தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைவாக ஆயிரம் பாடசாலைகளை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம், பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் ஏறக்குறைய 90 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து, பாடசாலை சமுகத்தின் பயன்பாட்டுக்கு கையளிக்கவுள்ளதும் கூடுதல் சேதி!
தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கம் பெற்று பன்னிரண்டு வருடங்களில் அக்கட்சியின் தலைவர்களின் கால்கள் நடக்காத பகுதியில் ஒரு நாட்டின் அதிபரின் கால்கள் பதிகின்றன. பலருக்கும் இது ஆறுதல் தரலாம். இரண்டு சம்பவங்களும் என் நெஞ்சுக்கு நெருடல் தான்.
31.12.2014 அன்று தாங்கள் வவுனியா பூவரசங்குளத்துக்கு பயணம் செய்யும் நிகழ்ச்சிவரைபு உறுதிப்படுத்தப்பட்டாயிற்று. இந்தச்சந்தர்ப்பத்தில் நான், தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலபுலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றிருக்கும் இராணுவ வல்வளைப்பு, ஆக்கிரமிப்பு பற்றிச்சுட்டவில்லை. தங்கள் கால்களுக்குள் மிதிபடப்போகும் பூவரசங்குளம் எனும் தமிழ் நிலத்தில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய அடிப்படை மனித உரிமை மீறல் பற்றியே இங்கு பேச விளைகிறேன்.
பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து கையளிக்க வருகிறீர்கள். இத்தனைக்கும் சமுகத்தில் சீவிப்பதற்கு அத்தியாவசியமான ஆரம்பக்கல்வியை ஊட்டும் அதே“பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு” பாடசாலை கட்டடங்களையும் அதன் இரண்டு ஏக்கர் நிலத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக கையகப்படுத்தி வைத்துள்ளன, தாங்கள் “எள் என்றதும் எண்ணெய்யாய் ஒழுகும்” கூலிப்படைகள். இந்த இரண்டு நிகழ்கால சம்பவங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதால், அது காட்டாற்று வெள்ளம்போல உங்கள் வெற்றிவாய்ப்பை இழுத்துக்கொண்டு செல்லத்தொடங்கி விட்டது. ஆதலால் உங்கள் தமிழ் வாத்தியார் அஸ்வர் சொல்லித்தந்த “ஒரு தாய் பிள்ளைகள் நாமாவோம்” எந்தப்பேச்சுகளும் தமிழ் சமுகத்தின் காதில் கேளாது.
இராணுவ மயப்படுத்தப்பட்டு கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்படி பல நூறு பாடசாலைகள் இருக்கின்றன. என் இனத்தின் பிள்ளைகளின், என் சமுகத்தின் பிள்ளைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கு ஊறு செய்வித்திருக்கும், கட்டாயக்கல்வியை பெற்றுக்கொள்ளும் என் பிள்ளைகளின் ஜனநாயக உரிமையை மறுதளித்திருக்கும், இராணுவ மேலாதிக்க மனோநிலைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் அந்த நூறு பாடசாலைகளில் ஒரு பாடசாலைக்கே, தாங்கள் வாக்கு கேட்டு வருகின்றீர்கள் என்றால், அது தமிழ் இனத்தின் சுயமரியாதையை கேள்விக்குள்படுத்துகிறது.
என் இனத்தின் பிள்ளைகள், என் சமுகத்தின் பிள்ளைகள் நித்தமும் மனஉளைச்சலூடே பள்ளிக்குப்போகிறார்கள். பூவரசங்குளம் மாகாவித்தியாலயத்துக்குள்ளே மாட்டுத்தொழுவம்போல ஒதுக்கப்பட்டுள்ள 110X25 சதுரஅடி கட்டடத்துக்குள் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான ஏறக்குறைய 125 பிள்ளைகள் கற்றலில் ஈடுபட சபிக்கப்பட்டுள்ளார்கள். மலசலகூட வசதிகள் அற்ற, இறைவழிபாடு மண்டபமும் விளையாட்டு முற்றமும் அற்ற குறுகிய நிலப்பரப்புக்குள் உழல நிந்திக்கப்பட்டுள்ளார்கள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 33 மாணவர்கள் 20X20 சதுரஅடி அறைக்குள் அடைந்து கிடப்பது ஆசியாவின் ஆச்சரியம் தான்!
என் பிள்ளைகளின் மகிழ்ச்சியான, வளமான கல்விச்செயல்பாடுகளுக்கு வழிவகை செய்யுமாறு பாடசாலை சமுகம் அதிலும், 2013ம் வருடத்துக்கு பின்னர் மட்டும் 15க்கும் மேல்பட்ட கோரிக்கை மனுக்கள் வடமாகாண ஆளுநர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பியிருந்தும்“பாதிக்கப்படுவது என்னவோ தமிழ் பிள்ளைதானே” எனும் வன்மம் வேறு. இன்று அதே தமிழ்ப்பிள்ளைகளிடம் சிறு உறுத்தல்கூட இன்றி வாக்கு கேட்டு வருகின்றீர்கள் என்றால், தங்களுக்கு எவ்வளவு செருக்கிருக்கும்? வரையறையற்ற ஆணவத்தின் உச்சக்கட்டம் இதுவல்லவோ?
வாருங்கள் மஹிந்த ராஜபக்ஸ அவர்களே! கொஞ்சம் காலாற நடந்துகொண்டே பேசுவோம். சலிப்புத்தட்டினால் ஒரு குவளை தேநீரை சுவைத்துக்கொண்டே பேசுவோம்.
ஒரு நாட்டின் அபிவிருத்தி சுட்டிகளில் எது முதன்மையானது? எழுத்தறிவு சுட்டி அல்லவா? ஒரு சராசரி மனிதன் எழுதத்தெரியாவிட்டாலும் வாசிக்கப்பழகியிருக்க வேண்டும் எனும் வாதத்தை முன்னிறுத்துபவன் நான். அவ்வாறு இல்லாதுபோய்விட்டால், திரும்புகிற இடமெல்லாம் “உயர் பாதுகாப்பு வலயம் உட்பிரவேசித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று, கண்ணை உறுத்தும் அறிவித்தல் பலகைகளை வாசிக்கத்தெரியாமலேயே அப்பகுதிக்குள் காலை நுழைத்து, தங்களின் கூலிக்கு விசுவாசப்பல்லை இழிக்கும் படைகளிடம் சூடுவாங்கியே செத்துவிடுவான் என் இனத்தின் பிள்ளை. என் சமுகத்தின் பிள்ளை.
ஒரு இயக்கத்தை அழிப்பதாய் சொல்லி ஒரு இனத்தையே அழித்த யுத்தத்தை உரிமை கொண்டாடி, இரண்டு தடவைகள் தாங்கள் இலங்கை அதிபர் கதிரையே ஆக்கிரமித்திருந்தீர்கள். இந்தப்பன்னிரண்டு வருடங்களில் வடக்கு கிழக்கில் ஒரு துரும்பைத்தானும் அசைத்து வைக்காத தாங்கள், “வாருங்கள் 2020ம் வருடத்துக்கும் கைகோர்த்து போவோம்” என்று என் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள். குறித்த பன்னிரண்டு வருடங்களில் செய்யாததையா இன்னும் ஆறு வருடங்களில் செய்து விடப்போகின்றீர்கள்? என்ற கேள்வி இயல்பாகவே வெளிக்கிளம்புவது தவிர்க்க முடியாததாகிறது. வெற்றிவாதம், மதவாதம், பயங்கரவாதம், விதண்டாவாதம் மிதவாதமாக பேசிப்பேசி ஊழிச்சுழியில் சிக்கவைத்து, இந்த நாட்டு குடிமக்கள் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டீர்கள்.
வாருங்களேன் இன்னும் ஆழமாக இறங்கிப்பேசுவோம். எது வெற்றி? இந்த உலகத்தில் போர் வெற்றிகளெல்லாம் ஒரு வெற்றிகளே அல்ல! ரஸ்யாவை அமெரிக்காவோ, பாகிஸ்தானை இந்தியாவோ, இந்தியாவை சீனாவோ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரை சிறீலங்கா அரச படைகளோ வெற்றிகொள்ளவதெல்லாம் ஒரு வெற்றியே அல்ல. அப்படியென்றால் எது வெற்றி?
இந்த உலகத்தில், என்னால் தங்களால் நம் எல்லோராலும் அவ்வளவு இலகுவில் முடிந்துவிடாத கடினமான சவாலான ஒரு பணியிருக்கிறது. அது என்னவென்று தெரியுமா? “மனித மனங்களை வெற்றிகொள்ளல்” மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த ஐந்து வருடங்களில் தங்களால் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடிந்திருக்கிறதா? என் மக்களை திருப்திபடுத்த முடிந்திருக்கிறதா? சிந்தியுங்கள் ராஜபக்ஸ அவர்களே! தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளாத வரையிலும் இலங்கையில் நல்லிணக்கத்துக்கான அடைவுமட்டங்களை எந்தவொரு ஆட்சியாளரும் அண்மித்துக்கூட பார்த்துவிட முடியாது.
சோரம் போன ஒரு போர் வெற்றியை காரணம் காட்டி, இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தவொரு தலைமையும் பெற்றிராத பெரும்பான்மை பலத்தை தாங்கள் பெற்றிருந்தீர்கள். அது மாற்றங்களும் திருப்பங்களும் நிறைந்த உலகம், உங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து சேர்த்த கிடைக்க அரிதான மந்திரக்கோல்! அந்த அருமருந்தன்ன மந்திரக்கோலை வைத்து தாங்கள் சிங்கப்பூரின் நவீன காலசிற்பி Mr. Lee Kuan Yew போலவே, இலங்கையின் நவீன காலசிற்பி ஆகியிருக்க முடியும்.
“சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொல்வார்கள். தங்களுக்கு கிடைக்கப்பெற்ற நல்ல பல வாய்ப்புகளை தாங்கள் வீணடித்து விட்டீர்கள். மக்கள் ஆணையை துஸ்பிரயோகம் செய்து ஏய்த்துப்பிழைத்து ஏறிமிதித்து விட்டீர்கள். இனி முரண்டு பிடித்தாலும் சட்டம் இயற்றினாலும், காலம் தங்களுக்கு அந்த அதிஸ்டத்தை மீளவும் கைகளுக்குள் கொண்டு வந்து சேர்க்காது. ஏனெனில் நடப்பவற்றில் புதுமையானவற்றையும் வழமைக்கு மாறானவற்றையுமே இந்த உலகம் எப்போதும் விரும்புகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விடையமிருக்கிறது. தங்களைப்போலவே பெரும்பாலானவர்கள் அதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். ஆட்டமிழக்காமல் நீண்ட நேரம் களத்திலிருந்தாலும் ஓவர்கள் முடிவுக்கு வந்தால், நடையை கட்டித்தான் ஆகவேண்டும். ஆதலால் கிடைக்கும் ஓவர்களுக்குள் ஒற்றைச்சதமோ இரட்டைச்சதமோ முச்சதமோ விளாசி விடுவதுதான் நம்முன் இருக்கும் ஒரேயொரு தெரிவாகும். இங்கு ஏனையவர்கள் சொல்வதைப்போல “நொட்அவுட்” என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓவர்கள் முடிவுக்கு வருகின்றன அவ்வளவு தான்!
“உலகத்தில் ஒரே காலநிலையும் ஒரே அதிகாரமும் நிலைத்திருப்பதில்லை” என்பதே உலக வரலாறுகள் நமக்கெல்லாம் கற்றுத்தரும் பாடமாகும். ஈழதேசத்தின் ஆத்மா, விடுதலை வானின் போரொளி, தமிழ் தேசிய இனத்தின் பேராண்மை மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கும் இது பொருந்தி வருகிறது என்றால், தாங்களும் அதற்கு விதிவிலக்கல்லவே!
SHARE