ஓய்வூதிய வயதெல்லையை குறைக்க ஜனாதிபதி கவனம்

128

 

அரச ஊழியர்களின் ஓய்வு வயதை அறுபது வயதாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவாக ஓய்வுபெறும் வயது திருத்தத்தை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை கோடிட்டு உள்ளுர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஓய்வூதிய வயது திருத்தம் மருத்துவர்கள்,பொறியியலாளர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பொருந்தாது.

கடந்த ஆட்சியின் ஓய்வு பெறும் வயதெல்லை
கடந்த ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 65 ஆக மாற்றியமை பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வேலைக்காக வெளிநாடு செல்லவிருக்கும் அரச துறை ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுப்புத் திட்டத்தைத் திருத்துமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஐந்தாண்டு விடுப்பு பொருந்தும். ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்கப்படாவிட்டாலும் அவர்களின் தரம் மற்றும் பணிமூப்பு பாதிக்கப்படாது.

இந்த முன்மொழிவுகள் அரச துறையின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கற்கைநெறிகளில் இணைவதன் மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்த விரும்பும் அரச துறை ஊழியர்களுக்கு ஒரு வருட விடுமுறையை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச துறை ஊழியர்களின் ஆங்கில அறிவையும் மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE