முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18ஆம் திகதி இரவு கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பேரையும் தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 6 சந்தேகநபர்களும் கடந்த 21ஆம் திகதி சிலாபத்துறை பொலிஸார் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் 6 சந்தேகநபர்களும் இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் தாக்குதல்களுக்கு உள்ளான கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் முத்தரிப்பு துறை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மன்னார் நீதிமன்றத்தை சூழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்த கிராமத்தில் கடந்த 18ஆம் திகதி இரவு வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட சந்தேகநபரை துரத்திப்பிடித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர்.
குறித்த நபர் கடற்படை சிப்பாய் என தெரிய வந்துள்ள நிலையில் கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது.
முத்தரிப்புத்துறை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை சிப்பாயை காப்பாற்ற சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயும் மக்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான இரு கடற்படை சிப்பாய்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையிலே கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.