களனி பல்கலைக்கழக மாணவர்களின் முடிவில்லா பயணமாக மீண்டும் ஒரு போராட்டம்!

270
களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

குறித்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்வதோடு, சுமார் 1000 மாணவர்கள் வரை இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த அரசாங்கம் மாணவர்களின் கல்வியை மலிவு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கி உடனடியாக சேர்த்துக்கொள்ளும் படியும் கூறி தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

மேலும் அரசாங்கம் கல்வி நடவடிக்கையில் இருந்து “வகுப்புத் தடை” எனற பதத்தை நீக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக கடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்கள், அவ்வாறு இருந்த போதிலும் விரிவுரையாளர்கள் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை இதுவரை துரிதப்படுத்தவில்லை எனவும், விரைவில் அவர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வழமைக்கு மாறாக சவப்பெட்டியை ஏந்தியபடியும், மற்றும் காகிதத்தினால் செய்த சங்கிலியை தங்களது கைகளில் சுமந்து கொண்டும் மேலும் பல்வேறு பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

“சுதந்திரக் கல்வியின் மரண ஊர்வலம்” என்று எழுதப்பட்ட சவப்பெட்டியை ஏந்தியபடி ஒரு குழுவினர் செல்கின்றனர்.

“மாணவர்களின் கல்சி சுதந்திரம் கட்டப்பட்டுள்ளது” என சங்கிலியால் கட்டப்பட்டுள்ளவாறு சில மாணவர்களும் இதன்போது ஊர்வலமாக செல்கின்றனர்.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், மாணவர்களுக்கு போதுமான வசதிகளை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE