வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற செய்தி ஒரு கட்டுக்கதை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சி முயல்வதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, வடக்கு மாகாண அவைத் தலைவர் மேற்கண்டவாறு பதிலடி வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் 12 ஆம் திகதி சபைக்கு வருவதாகத் தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
ஏனெனில், மாகாண சபையின் 12 ஆம் திகதி நிகழ்ச்சி நிரல் தயாராக்கப்பட்டுச் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவ்வாறான ஒரு பிரேரணை எந்தவொரு மாகாண சபை உறுப்பினராலும் அவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
இது வேண்டும் என்றே கட்சிக்கும் மாகாண சபைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்ட செய்தி” – என்றார்.