தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அதேநேரம், வடகிழக்கு அரசியல் அபிலாஷைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தால் மட்டுமே நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும், சொல் வடிவத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்;. மாவட்ட செலயகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நல்லிணக்க கருத்தறியும் செயலணி முன்னிலையில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமது கருத்துக்களையும், மக்களின் எதிர்பார்ப்புக்களையும் வெளிக்கொணர்ந்தனர்.
இதன்போது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான சர்வதேச விசாரணை, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான விசாரணைகள், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய ஆளுநர் மற்றும் இந்து சமய மற்றும் மொழி மீறல்கள் உட்பட அரச நிர்வாகங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.
அதேவேளை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், வடகிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான விசாரணை செய்யப்பட வேண்டுமென்பதுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் பாராபட்சம் காட்டும் அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது என கேள்வி எழுகின்றது.
ஆட்சி மாறும் வரை பெயருக்காக ஆணைக்குழுக்களை அமைக்கின்றார்களே தவிர, விசாரணைகள் நடாத்தவில்லை. அவ்வாறு பல ஆணைக்குழுக்கள் வந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை. ஆணைக்குழுக்களில் பதிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, நீதிக்கான செயல்வடிவமாக தெரியவில்லை.
மக்களுக்கு நம்பிக்கையூட்டப்பட வேண்டுமாயின் இனங்காணப்பட்ட குற்றவாளிகள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.